இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டில் வெள்ளை அறிக்கை: அன்புமணி

இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை சென்னை எழும்பூரில்  பாமக சார்பில் இப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் பேசிய அன்புமணி, “திருக்குரானில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை பாமக கொள்கையாக வைத்திருக்கிறது. இதை ஏதோ இங்கே பேச வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.

மது ஒழிப்பு என்றாலும் சரி, போதை ஒழிப்பு, சூது ஒழிப்பு, சமூக நீதி என எல்லாவற்றிலும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

திருச்சியில் இஸ்லாமியர் வாழ்வுரிமைக்காக ஏழாவது மாநாட்டை நடத்திய டாக்டர் ராமதாஸ், ‘இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும். இல்லையென்றால் வட தமிழ்நாட்டில் நாளையில் இருந்து தொடர் சாலை மறியல் செய்வோம்’ என்று அறிவித்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியைத் தொடர்புகொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர்,  ‘மணி… உங்க தலைவரை கோபப்பட வேண்டாம்னு சொல்லுங்க.

இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு நான் கொடுக்கிறேனு அய்யாகிட்ட சொல்லுங்க’ என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு இரண்டு நாட்களிலே  இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொடுத்தவர் கலைஞர்.  அதைக் கொடுக்க வைத்தவர் மருத்துவர் அய்யா. 

இந்தியாவிலேயே 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தவர் மருத்துவர் அய்யா.

இப்படிப்பட்ட நிலையில் இன்று சமூக நீதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமூக நீதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மதுதான். இதற்குக் காரணம் ஆண்ட கட்சியும், ஆள்கிற கட்சியும்தான்.

மது தயாரிப்பவர், தயாரிக்கக் கோருபவர், மது அருந்துபவர், மது அருந்தச் சொல்பவர், மது விற்பவர் மது விற்ற பணத்தில் உணவு அருந்துபவர் சபிக்கப்பட்டவர்கள் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.

இதை தொடக்கத்தில் இருந்தே கொள்கையாகக் கொண்டு செயலாற்றி வருபவர் எங்கள் மருத்துவர்” என்று குறிப்பிட்டார் அன்புமணி.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “3.5 % இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது திமுக அரசு. கொடுக்க வைத்தது பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா.

அதில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இஸ்லாமிய தலைவர்கள் கோரி வருகிறார்கள். நிச்சயமாக தமிழக அரசு இதில் வெள்ளை அறிக்கை கொண்டுவர வேண்டும். 

இந்த இட ஒதுக்கீட்டால் எத்தனை பேர் கல்வி, வேலைவாய்ப்புகளில் பயன் பெற்றார்கள், இன்னும் எவ்வளவு தேவைப்படுகிறது… இதை இன்னும் அதிகப் படுத்தலாமா என்பதையெல்லாம் அந்த வெள்ளை அறிக்கை மூலமாகத்தான் முடிவு செய்ய முடியும்” என்று கூறினார் அன்புமணி.

வேந்தன்

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்: முதல்வர் அறிவிப்பு!

White Paper on Muslim Reservation
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts