டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட புகைப்படங்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடி வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா டிசம்பர் 27ஆம் தேதி தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக கோவை நீலகிரி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து தொடங்கி இருக்கிறார் நட்டா.

இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கும் நிலையில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தமிழகத்திலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். 

அதிலும் குறிப்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தற்போதைய மத்திய அமைச்சர் எல். முருகன் என்பது ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையாலேயே கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டது.

கடந்த நவம்பர் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் டேன் டீ விவகாரம் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசினார். அந்த கூட்டத்தில் நீலகிரி மக்களின் பிரச்சனைகள் அப்படியே நீடிக்க வேண்டும் என்று திமுக அரசு நினைக்கிறது. இதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் பிரதமர் மோடி நமது மத்திய அமைச்சர் முருகன் அய்யா அவர்களுக்கு ஒரு பணியை கொடுத்து இருக்கிறார். மாதத்துக்கு ஐந்து நாட்கள் ஊட்டியில் இருக்க வேண்டும். நீலகிரி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று நானும் முருகன் ஐயாவும் மீட்டிங்கில் இருக்கும்போது பிரதமர் கூறினார்.

சுற்றுலாவை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஊட்டியை மையமாக வைத்து மோடி திட்டமிட்டு இருக்கிறார். அதனால்தான் ஊட்டிக்கு அடிக்கடி முருகன் வந்து கொண்டிருக்கிறார்’ என்று நீலகிரி தொகுதியின் மக்களவை வேட்பாளர் முருகன் தான் என்பதை அன்றே உறுதிப்படுத்தி விட்டார் அண்ணாமலை.

பாஜகவின் அகில இந்திய தலைவர் நாட்டிலேயே முதல் முறையாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் தொகுதி என்பது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தான் இருக்கும். அப்படி பார்த்தால் மத்திய அமைச்சர் முருகன் போட்டியிட போகும் நீலகிரி தொகுதி பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதே நேரம் கோவை தொகுதிக்கும் சேர்த்து பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் நட்டா.

அப்படி என்றால் கோவையில் போட்டியிட போகும் அந்த பாஜக விஐபி யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கோவை தொகுதியில் தற்போதைய பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ. பி. முருகானந்தம் போட்டியிட போவதாக தான் முதலில் பேசப்பட்டது.

ஆனால் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தொகுதியே கோவை தான் என்று கட்சி வட்டாரங்களில் சற்று உறுதியாகவே சொல்கிறார்கள். பாஜக தமிழகத்தில் 8 எம்பி தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

இந்த எட்டு தொகுதிகளில் ஒன்றான தென் சென்னையில் தான் முதலில்  அண்ணாமலை போட்டியிடுவதாக இருந்தது. தென் சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. படித்தவர்கள் நிறைந்த நகர்புற பகுதியான தென் சென்னை தொகுதியில் பாஜகவுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று தான் அண்ணாமலைக்கு முதலில் இந்த தொகுதியை தேர்வு செய்தனர்.

1998 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுகவின் டி. ஆர். பாலுவை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜனா கிருஷ்ணமூர்த்தி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். இந்த வகையில் தென் சென்னை பாஜகவுக்கு தோதாக இருக்கும் என்று கருதினார்கள்.

அடுத்து அண்ணாமலை போட்டியிடுவதற்கு திருச்சி தொகுதி பரிசீலிக்கப்பட்டது. 1998, 99 என இரண்டு மக்களவை த் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியின் ரங்கராஜன் குமாரமங்கலம் இங்கே போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். இந்த அடிப்படையில் திருச்சி தொகுதியும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஆனால் இறுதியாக அண்ணாமலைக்கு கோவை மக்களவைத் தொகுதியே சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டு கோவை தொகுதியை நோக்கி சில மாதங்களாகவே தீவிர கவனம் செலுத்தி வருகிறார் அண்ணாமலை. 

மாநிலத் தலைவராக இருந்த போதும் அவரது அதிகபட்ச பயணங்களும் நிகழ்ச்சிகளும் கோவையை மையமாக வைத்தே இருக்கின்றன.  சமீபத்தில் அமெரிக்கா சென்ற அண்ணாமலை அந்தப் பயணம் முடித்து தமிழகம் திரும்பிய பிறகு கோவை மக்களவைத் தேர்தலுக்கு பணியாற்றுவதற்காக ஒரு ஸ்பெஷல் டீமை அமைத்து கோவைக்கும் அனுப்பிவிட்டார்.  அந்த டீம் ஏற்கனவே கோவை மக்களவை தொகுதியில் முகாமிட்டு அண்ணாமலைக்கான பணிகளை தொடங்கி விட்டது.

இவ்வாறு தென்சென்னை, திருச்சி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டு அண்ணாமலைக்காக கோவை மக்களவைத் தொகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை பாஜகவுக்கு வலுவாக இருக்கும் பகுதியாக கருதப்படுகிறது.

அதே நேரம் அதிமுக -பாஜக கூட்டணி தொடர்ந்தால் கோவை, நீலகிரி ஆகிய அடுத்தடுத்த தொகுதிகளை பாஜகவிடம் அதிமுக கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் அந்த கேள்விக்கு இடமில்லை… பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும். அந்த நிலையில் கோவை தொகுதியில் அண்ணாமலையும் நீலகிரி தொகுதியில் முருகனும் போட்டியிடுவார்கள் என்கிறார்கள்.

கோவை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலுமணியிடம் அவரது கட்சி நிர்வாகிகள் இது பற்றி பேசிய போது கோவையையும் நீலகிரியையும் பாஜக குறி வைத்து வருவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அதற்குள் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று பதில் சொல்லி இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கரும்பு வழங்க ஆணை: உளவுத்துறை சொன்ன சீக்ரெட்!

குடிநீரில் மலம் கலப்பு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

+1
0
+1
1
+1
1
+1
2
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *