நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி, தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது.
அதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படப்பிடிப்பில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 19) அவரிடம் ’நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல், “நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நல்லமுறையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாளில் உங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்போது உங்களிடம் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்வேன். இப்போதைக்கு அதான் செய்தி” என்று தெரிவித்து சென்றார்.
வரும் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கொடி ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்ற உள்ள கமல்ஹாசன், அப்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘ஜோசுவா… இதுவரை நான் தொடாத ஜானர்’ : கவுதம் மேனன்
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!