முதல்வரின் முதன்மை செயலாளர் -1ஆக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த உமாநாத் இன்று (ஆகஸ்ட் 20) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலின் முதல்வராக 2021 மே 7 அன்று பதவியேற்றதை தொடர்ந்து அவருக்கு 4 தனிச் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் (முதல்வரின் முதன்மைச் செயலாளர் – 1) கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டு, அப்பதவிக்கு முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் முருகானந்தம் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து உமாநாத் முதல்வரின் முதன்மைச் செயலாளர் – 1ஆக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஏற்கெனவே நமது மின்னம்பலத்தில், முருகானந்தம் இடத்தில் உமாநாத் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 19ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதன்மூலம் இரண்டாவது முதன்மை செயலாளராக சண்முகமும், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜும் முன்னேறியுள்ளனர்.
அடுத்ததாக, முதல்வர் மு,க.ஸ்டாலினின் இணைச் செயலாளராக ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அரசின் உயர் பதவிகளில் வன்னியர்களே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரான வேல்முருகனே அரசின் உயர் பதவிகளில் வன்னியர்கள் எத்தனை சதவீதம் இடம்பெற்றுள்ளனர் என அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர் , “சிறு சிறு பதவிகளில் வன்னியருக்கு இடஒதுக்கீடு கிடைப்பது சரி, ஆனால் அதிகாரம் கொண்ட உயர்பதவிகளில் எத்தனை வன்னியருக்கு இடம் கிடைத்துள்ளது?.
திமுக ஆட்சியில் ஒரு வன்னியர் கூட டிஜிபி, ஏடிஜிபி, டிஐஜி, டிஎஸ்பியாக இல்லை.
பூர்வ குடிகளான வன்னியர்கள், தலித் சமூக மக்கள் தமிழ் மண்ணில் ஆட்சி அதிகாரம் பெறுவது உயர்சாதி அதிகாரிகளின் சூழ்ச்சியால் தடுக்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது” என்று வேல்முருகன் கூறியிருந்தார்.
இந்தசூழலில் தான் வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்த லட்சுமிபதி உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
லட்சுமிபதியின் தந்தை கோபாலகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
இவருக்கு சொந்த ஊர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் உள்ள மேல் அரசம்பட்டி ஆகும். பாமக சார்பாக மத்திய அமைச்சராக இருந்த வேலுவின் உறவினர்.
தனி செயலாளர்கள் எந்தெந்த சாதி?
பட்டியலினத்தைச் சேர்ந்த முருகானந்தம் ஐஏஎஸ் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
முதல்வரின் முதன்மை செயலாளர் -1ஆக நியமிக்கப்பட்டிருக்கும் உமாநாத் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த மருத்துவர் ஆவார். 2001ஆம் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி.
முதன்மை செயலாளர் 2-ஆக இருக்கும் சண்முகம் செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த இவர் 2002 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
முதன்மை செயலாளர் 3-ஆக முன்னேறியிருக்கும் அனு ஜார்ஜ் ஒரு மலையாளி கிறிஸ்த்துவர் ஆவார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை… ஆற்காடு சுரேஷின் மனைவி கைது!
“அதனை அவன்கண் விடல்” – ஸ்டாலின் செலக்ஷன்… முருகானந்தம் தலைமை செயலாளர் ஆன கதை!