எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ’எங்கே எங்கள் எய்ம்ஸ்’ என்ற தொடர் முழக்க போராட்டம் மதுரையில் இன்று (ஜன.24) நடைபெற்றது.
பழங்காநத்தம் என்ற இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை என எழுதப்பட்ட செங்கலை எடுத்து வந்தனர். மேலும் படுக்கையில் எய்ம்ஸ் இருப்பதை சித்தரிக்கும் வகையில் செங்கலுடன் மருத்துவ படுக்கையில் ஒருவர் எடுத்து வரப்பட்டார்.
அப்போது பேசிய சு.வெங்கடேசன், நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே நிலையில் தான் இன்றும் உள்ளது. ரூ. 1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2018ல் அறிவித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை அரசியலின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு பார்க்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டியுள்ளது.
தொடர் அழுத்தம் காரணமாக ரூ.2.50 கோடி மதிப்பில் மருத்துவமனைக்கான நிர்வாகப்பிரிவு கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் அலட்சிய போக்கால், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர், பட்டம் பெற்று வெளியேறும் 2026-ஆம் ஆண்டில் கூட அவர்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாது.
நிலம் வழங்குவதை தவிர எய்ம்ஸ் பணிக்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவின் அலட்சியம், குறுகிய அரசியல் பார்வையால் தான் பணிகள் தாமதமாகிறது என்று குற்றம்சாட்டினார்.
கலை.ரா
தேசிய கீதம் பாட தெரியாமல் முழித்த இளைஞர்: கோவையில் கைது!
சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!