நிதிஷ்குமார் எங்கே? பீகார் அரசியலில் திடீர் சலசலப்பு!

அரசியல்

பீகாரில் பாஜக கூட்டணிக்கு வலுவான கூட்டணியைப் போன்ற உருவம் கிடைத்ததற்கு அக்கூட்டணியில் நிதிஷ் குமார் இணைந்ததுதான் காரணம் என்று சொல்லலாம். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நாடு முழுக்கவே பரபரப்பான விவாதங்கள் எழுந்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அரசியல்வாதி என்றால் நிதிஷ் குமாரைத் தான் சொல்ல முடியும்.

அப்படிப்பட்ட நிதிஷ் குமார் பீகாரில் கடைசியாக மோடி கலந்து கொண்ட இரண்டு பிரச்சாரக் கூட்டங்களில் இல்லாதது பல சலசலப்புகளை பீகாரில் உருவாக்கியுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி பீகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடி கயா மற்றும் பூர்ணியா பகுதிகளில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த இரண்டு கூட்டத்திலுமே நிதிஷ் குமாரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் மோடியுடன் இனிமேல் மேடையைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என பாஜக தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக பீகாரின் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு ஏப்ரல் 7 ஆம் தேதி பீகாரின் நவடா பகுதியில் நடந்த கூட்டத்தில் மோடியுடன் நிதிஷ்குமார் பங்கேற்றார். அந்த மேடையில் நிதிஷ் குமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். பிரதமர் மோடியும் மேடையில் இருந்த மற்றவர்களும் நிதிஷ் குமார் எப்போது பேச்சை முடிப்பார் என்று காத்துக்கொண்டே இருந்தனர். நிதிஷ் குமார் முடித்தால் தான் மோடி பேச முடியும் என்பதால், மோடி தனது வாட்சை அடிக்கடி பார்த்தபடியே அமர்ந்திருந்தார். நிதிஷ் குமாரின் உதவியாளரும் அமைச்சருமான விஜய் குமார் செளத்ரியும் தனது வாட்சை அடிக்கடி பார்த்துக் கொண்டே, நிதிஷ்குமாரை நோக்கி பேச்சை விரைவாக முடிக்குமாறு சைகைகளை காட்டிக் கொண்டே இருந்தார்.

மேலும் நிதிஷ் குமார் பேசும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த முறை 4 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னார். கூட்டத்தில் இருந்தவர்கள் வினோதமாகப் பார்க்க, பின்னர் தனக்குத் தானே சரிசெய்துகொண்டு மீண்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்லி விட்டு மோடியைப் பார்த்தார். அப்போது மோடி இறுக்கமான முகத்துடனே அமர்ந்திருந்தார். 400 இடங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக 4000 இடங்கள், 4 லட்சம் இடங்கள் என்று நிதிஷ் குமார் தவறாகப் பேசியது சமூக வலைதளங்களில் ட்ரால் ஆக மாறியிருக்கிறது.

மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது உரையைக் காட்டிலும், நிதிஷ் குமார் பேசியதன் ட்ரால்களே இணையத்தை ஆக்கிரமித்தன. இதே தவறை இன்னொரு மேடையிலும் நிதிஷ் குமார் செய்தது அவர் மீதான ட்ரோல்களை அதிகரித்துள்ளது.

மேலும் அதே மேடையில் நிதிஷ் குமார் மோடியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போது, மோடியின் காலைத் தொட்டுக் கும்பிடும் வீடியோ ஒன்றும் வைரலாகி பல சூடான விவாதங்களை பீகார் அரசியலில் கிளப்பியுள்ளது. நிதிஷ் குமார், மோடி இருவரும் ஒத்த வயதினராக இருந்தாலும் அரசியல் அனுபவத்தில் மூத்த தலைவரான நிதிஷ் குமார்,  மோடியின் காலைத் தொட்டு கையெடுத்துக் கும்பிடும் வீடியோ பீகாரில் வைரலாகி உள்ளது.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவரான தேஜஸ்வி யாதவ்.

”பீகாரின் முதலமைச்சரான நிதிஷ் குமார் மோடியின் காலைத் தொடும் புகைப்படத்தைப் பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. நாட்டில் அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த முதலமைச்சர் வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் மோடியின் காலைத் தொட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன ஆனது?” என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் நடந்து கொண்ட முறை பிரதமருக்கு மட்டுமல்ல, பாஜகவிற்கே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பீகார் பாஜக தலைமையின் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். தி ஹிந்து ஊடகத்திடம் தனது பெயரை சொல்ல விரும்பாமல் பேசிய ஒரு பாஜக தலைவர் இத்தகவலை கூறியுள்ளார். அதன் காரணமாகத் தான் ’இனிமேல் மோடியின் பேரணிகளிலோ, கூட்டங்களிலோ நிதிஷ் குமாரை அழைக்க வேண்டாம்’ என்று பாஜக முடிவெடுத்திருப்பதாகவும் பீகாரின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஆனால் பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக சொல்லும்போது, ’தேர்தல் பல கட்டங்களாக நடப்பதால் மோடியும் நிதிஷ் குமாரும் வெவ்வெறு இடங்களில் வெவ்வேறு கூட்டங்களில் பங்கேற்க வேண்டியுள்ளது’ என்று கூறியுள்ளனர்.

கூட்டணியில் நீண்ட அனுபவம் கொண்ட தலைவராக இருந்தும், பீகாரின் முதலமைச்சராக இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 16 தொகுதிகளில் போட்டியிடும் கட்சியின் தலைவராக இருந்தும் நிதிஷ்குமார் மோடியின் மேடையில் இல்லாதது பீகார் அரசியலில் சலசலப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவேகானந்தன்

கோவை: தாமரைக்கு மாறிய இலை ஓட்டுகள்? பதட்டத்தில் வேலுமணி

ஈரோடு: இணைந்து வாக்களித்த மும்மதத்தை சேர்ந்த தோழிகள்

+1
0
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *