திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரும் ஆகிவிட்டார்.
கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் சொல்லி வந்தாலும்…
எதிர்க்கட்சியினரும் பல்வேறு சமூக அமைப்பினரும் ஸ்டாலின் சொல்லியும் நிறைவேற்றித் தராத வாக்குறுதிகளை குறிப்பிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் சீர்மரபினர் என்ற பிரிவில் இருக்கும் 66 சமுதாயங்களை உள்ளடக்கிய சமூக நீதிக் கூட்டமைப்பு நேற்று (ஆகஸ்டு 31), இரவு ’ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு’ என்ற கேள்வியை எழுப்பி தமிழ்நாடு முழுதும் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜனிடம் பேசினோம்.
“தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள தொட்டிய நாயக்கர், மறவர், குறவர், ஊராளி கவுண்டர், வேட்டுவ கவுண்டர் உட்பட 66 சாதிகளுக்கு DNT (Denotified Tribes) என்றும் DNC (Denotified Communities) என்றும் இரண்டு விதமாக சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தின் கடைசி நாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளித்தார். இதனால் சீர் மரபினருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்கையில்,
‘திமுக ஆட்சிக்கு வந்தால் சீர்பழங்குடியினருக்கு DNT என்றும், DNC என்றும் இரண்டு சாதி சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி ஒரே சான்றிதழாக DNT என்று வழங்கப்படும் என்று கூறினார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளை கடந்த பின்னும் இன்னும் இதுவரை DNT என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கவில்லை, பழைய முறையே தொடர்கிறது!
இதனை கண்டித்தும், DNT என்ற ஒற்றை சான்றிதழை வழங்கக்கோரியும் சீர்பழங்குடியினர் சமூகங்களின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறோம்.
66 சீர்பழங்குடி சமூகங்களின் கோரிக்கையான DNT ஒற்றை சான்றிதழ் வழங்கக்கோரி நடந்த இந்த அமைதி போராட்டத்தை முதலமைச்சர் கவனிக்க வேண்டும்” என்றார் கொ.நாகராஜன்.
இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பின் பல்வேறு தலைவர்களும் ஈரோடு, கரூர், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே கலந்துகொண்டனர்.
வேந்தன்
இந்தியா கூட்டணியின் விளம்பர தூதர் மோடி தான்: மும்பையில் ஸ்டாலின்
Comments are closed.