புதிய கல்விக்கொள்கைக்கு உடன்படாத காரணத்தால் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்திற்கு எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு அநீதி இழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், கல்வியில் முன்னணியில் இருக்கக்கூடிய மாநிலங்களை தண்டிப்பதாக, அதற்கான தரவுகளுடன் தி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், கடந்த ஓராண்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய திட்டமான சமக்ரா சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதனால், பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டணம், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது.
இதற்கு முக்கிய காரணமாக தேசியக் கல்விக் கொள்கையை இந்த மாநிலங்கள் முழுவதுமாக ஏற்க விரும்பாதது பார்க்கப்படுகிறது.
நிதியை தாமதப்படுத்துவதன் மூலம் சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல், பள்ளிக் கல்வியில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்தல், தொழிற்கல்வியை ஊக்குவித்தல், பள்ளி ஏற்பாடுகளை உறுதி செய்தல் போன்ற SSA இன் முக்கிய நோக்கங்களை அடைவதில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள் பின்னடைவை சந்திக்கும் நிலைய மத்திய அரசு உருவாக்க முயல்கிறது.
அதேவேளையில், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி தராளமாக வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் உள்ள 20 முக்கிய இலக்குகளில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், கேரளா 20 இலக்குகளிலும், தமிழகம் 19 இலக்குகளிலும் முன்னிலையில் உள்ளன. அதே போன்று டெல்லி (18) மேற்கு வங்கம் (15),பஞ்சாப் (12) இலக்குகளிலும் முன்னிலையில் உள்ளன. ஆனால், இந்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மத்திய அரசின் நிதியை அதிகம் பெற்ற மாநிலங்களான குஜராத் 20 இலக்குகளில் 8ல் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் வெறும் தலா 3 அம்சங்களிலும், பீகார் இரு அம்சங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!
இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக் கொள்கைக்கு தலைவணங்க மறுத்ததற்காக கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதே வேளையில், எஸ்.எஸ்.ஏ இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்கு தாராளமாக நிதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படிதான் நாடு முழுவதும் தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மத்திய பாஜக அரசு தர திட்டமிடுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ’மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்’ என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.12,381 கோடி வாடகை பாக்கி… கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல்!
மதுரைக்கு பத்தாயிரம் பட்டா… உதயநிதியின் பிரம்மாண்ட விழாவில் மூர்த்தியின் போராட்டம்!