ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (செப்டம்பர் 5) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது மனைவி பொற்கொடி, மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் என இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஒவ்வொருவரிடம் போலீஸ் காவலில் எடுத்து தனித்தனியாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களை எட்டியுள்ள நிலையில் அடுத்து என்ன என்பது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று புதிய தகவலை அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்த வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலைக்கான காரணம், முக்கிய நபர்கள் குறித்து காவல்துறை விரைவில் தெரிவிக்கும். தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடியான சம்போ செந்தில் உட்பட 3 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது. அவர்களை விரைவில் பிடிப்போம். வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?