அந்த 2 வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்? : செல்வப்பெருந்தகை பதில்!

நெல்லை, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

கடந்த 23 ஆம் தேதி வெளியான 4-வது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அதன்படி திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எனினும் மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

வேட்பாளர் அறிவிப்பு எப்போது?

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 7 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மீதமுள்ள திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள்.

காங்கிரஸ், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்படும் தேசிய கட்சி. பாஜகவை போல் ஆள் பார்த்து சீட் வழங்க முடியாது.

யாரெல்லாம் கட்சிக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார்கள்? மக்களை நேசிப்பவர்கள் யார்? யார் வெற்றி வேட்பாளர்கள்? என்பதை எல்லாம் ஆராய்ந்து தான் வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்!

நெல்லை, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால் இன்னும் நெல்லை தொகுதிக்கு வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காதது திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நெல்லை, மயிலாடுதுறை வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்று செல்வப்பெருந்தகை தற்போது கூறியுள்ளது இரு கட்சியினரிடையே சற்று அமைதியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்” : உயர்நீதிமன்றம் உத்தரவு!

”குறட்டையால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு” : மருத்துவர் ப.விஜயகிருஷ்ணன்

IPL 2024: ஹர்திக் ரசிகரை கடுமையாக தாக்கிய ரோஹித் ரசிகர்கள்… வீடியோ வைரல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts