முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. When will Jayalalitha jewelry arrive in Tamil Nadu
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், ரூபி உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை வழக்கு செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக உள்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றியதற்கான செலவு தொகையாக 5 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தங்களுக்கு தான் சொந்தம் என்று அவரது அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முதலில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றம், தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் தீபா தீபக் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பிப்ரவரி 14 ,15 ஆகிய தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி 29ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த சூழலில் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீபா, தீபக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை இன்று (பிப்ரவரி 14) விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் நகைகள், நில ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை இல்லை என்று உத்தரவிட்டு தீபா, தீபக் மனுவை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க வைர நகைகள் சொத்து ஆவணங்கள் வெள்ளி பொருட்கள் ஆகியவை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணியை அம்மாநில அரசு இன்று தொடங்கியது. When will Jayalalitha jewelry arrive in Tamil Nadu
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் மதிப்பிடும் பணி நடைபெற்றது. இன்று பிற்பகல் வரை சுமார் 155 நகைகளின் தரம் மற்றும் எடை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நகைகளின் தற்போதைய விலையும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோவாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
முழு நகைகளையும் மதிப்பிட முடியாத நிலையில், இன்று மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யப்படாத அனைத்து நகைகளும் மீண்டும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து நாளை காலை மீண்டும் நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி நடைபெறும். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜெயலலிதா நகை தமிழகம் எடுத்து வரப்படவுள்ளது.
இந்த நகைகளை கொண்டு வர தமிழக காவல்துறை பாதுகாப்புடன் இரும்பு பெட்டிகளை எடுத்துச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. When will Jayalalitha jewelry arrive in Tamil Nadu