சாதி எப்போது ஒழியும்? பகுதி 11

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

எப்போது சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளும் அகமணமுறை ஒழிகிறதோ அப்போதுதான் சாதி ஒழியும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்மவர்கள் எப்போது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதுதான் விடைதெரியாத கேள்வி. இதற்கான பதில் வரலாற்றில் சாதி எப்போது எதற்காக உருவானது? மற்ற சமூகத்தில் அது ஏன் உருவாகவில்லை ஆகிய கேள்விகளுக்கான விடையில் இருக்கிறது.

குழுமணத்தில் இருந்து காதல்மணம்  

மற்ற சமூகங்களின் பொருளாதார இயக்கம் சொத்தை மையமாகக் கொண்டது. அங்கே நிலமும் உழைப்பும் சந்தையில் பணத்தின் மூலம் விற்று வாங்கி சுற்றிச்சூழலுகிறது. அதனால் ஏற்படும் செல்வமாற்றம் குடும்பத்தை மாற்றி அந்த சமூகங்களை மாற்றுகிறது. 

 இந்த மாற்றத்திற்கேற்ப இனக்குழுக்களாகத் தொடங்கியவர்கள் முதலில் குழுவாகவும், தனிநபர்களின் உழைப்புத்திறன் வளர்ந்து நிலத்தில் தனியுடமை ஏற்பட்டபோது பெற்றோர்களால் நிர்ணயிக்கும் இணைமணமும், சொத்து மேலும் அதிகரித்த நிலப்பிரபுத்துவ காலத்தில் சொத்துள்ள ஆண்கள் சொத்துள்ள பெண்களைத் தேர்ந்தெடுத்து மணக்கும் ஒருதாரமணமும் பலதாரமணமும் செய்து கொள்கிறார்கள். 

இப்போது தொழிற்துறை உற்பத்தியில் சமமாக பங்கேற்கும் ஆணும் பெண்ணும் தங்களின் துணையைத் தாங்களே தேர்ந்தெடுத்து காதல்மணம் செய்துகொள்கிறார்கள். இனக்குழுக்கள் மறைந்து தேசியஇன வர்க்க சமூகங்களாக மாற்றம் கண்டிருக்கிறார்கள்.

When will caste disappear in this society

இனக்குழுவில் இருந்து சாதிய இனக்குழுக்கள் 

இருவேறு இனம் (வெள்ளை-கறுப்பினம்), மொழி (இந்தோ ஈரானியன்- திராவிடம்), உற்பத்தி (கால்நடை-விவசாயம்), சமூகக் (தந்தைவழி-தாய்வழி) கட்டமைப்பைக் கொண்டிருந்த இந்தியாவில் விவசாயம் தெரியாத ஆரியர்கள் கால்நடை உற்பத்தியைப் போன்று நிலத்தைப் பொதுவாக்கி அதிலிருந்து வரும் உபரியை உறிஞ்சும் ஆசிய சொத்துடைமை வடிவத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சொத்தையும் உழைப்பையும் பிறப்புடன் இணைக்கிறார்கள். பிறப்பை மையமாகக் கொண்டு பொருளாதாரம் சூழலுகிறது. அது சொத்தும் உழைப்பும் பணத்தின் மூலம் விற்றுவாங்க இடமில்லாமல் பொருளாதார சுழற்சியற்றும் அறிவுப் பரவலாக்கமின்றியும் தேங்க வைக்கிறது. இந்த உற்பத்தித் தேக்கம் நம்மை உழைப்புப் பிரிவினை தோன்றிய காலத்தில் உண்டான இணைமணத்திலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. 

ஆட்சியும் நிர்வாகமும் மாறும் போதெல்லாம் தேங்கி நிற்கும் உழைப்பும் சொத்தும் அசைகிறது. புதியவர்கள் அதனை தங்களின் பிறப்புரிமையாக்க அவர்களுக்குள் மணம் செய்துகொள்கிறார்கள். அது சொத்திலும் உழைப்பிலும் ஏற்றத்தாழ்வான புதுப்புது சாதிகளை தோற்றுவிக்கிறது. இனக்குழு சமூகத்தில் இருந்து இனவாதமும் வர்க்கமும் கலந்த ஏற்றத்தாழ்வான சாதிய இனக்குழுச் சமூகங்களாக நம்மை மாற்றியிருக்கிறது. 

ஆங்கிலயர்கள் அவர்களின் தேவை சார்ந்து இந்த தேக்கத்தில் உடைப்பை ஏற்படுத்துகிறார்கள். அந்த உடைப்பும் அதன்பிறகான விடுதலையும் சத்தான உணவு, உடை, தரமான கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை தேவைகளைக்கூட இன்றுவரை நிறைவுசெய்யாத நிலையில் உழைப்பின் வளர்ச்சியின்றி சாதிய சமூகத்தில் உடைப்போ தொழிற்துறை வளர்ச்சியோ இன்றி இந்தியா பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

சாதிக்கு சோசலிசம் தீர்வா? 

இந்தியாவில் பெருகியிருக்கும் கணிப்பொறி பயன்பாடு, திறன்பேசிகளின் ஆதிக்கம், வாகனப் பெருக்கம் கண்டு இந்திய முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்துவிட்டதாக அறிவித்து இதற்கு அடுத்த கட்டமான சோசலிசப் புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இந்திய இடதுசாரிகள். அப்படியென்றால் நாம் தற்போது முதலாளித்துவ சமூகமாக மாறிவிட்டோம். அப்படித்தானே!  

முதலாளித்துவ சமூகத்தில் சாதிக்கென்ன வேலை என்றெல்லாம் இவர்களுக்கு கேள்வி எழவில்லை. சரி வரப்போகும் சோசலிச சொர்க்கத்திலாவது சாதிய வன்கொடுமைகள் மறைந்திருக்குமா? அதனை ஒழிப்பதற்கான அறிவியல்பூர்வமான பாதை ஏதேனும் வகுக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டால் புரட்சி வந்தால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்கள். புரட்சி வந்த நேபாளத்தில் சாதி வர்க்கம் எல்லாம் ஓழிந்துவிட்டதா?

கருத்து காதல்மணம் நடத்துமா? 

இடதுசாரிகளைப் போலல்லாமல் ஆரம்பம் முதலே சாதியை முதன்மையானப் பிரச்சனையாக அணுகும் பெரியாரிய அம்பேத்கரியவாதிகள் அதற்கு சரியான கலப்புமணத்தை தீர்வாக முன்வைக்கிறார்கள். 

ஆனால் ஒருவர் எதற்காகக் கலப்புமணம் செய்துகொள்ள வேண்டும்? என்று கேட்டால் சாதி அநீதியானது, மனிதத்தன்மையற்றது என நீதிநெறி விளக்கம் அளிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி அநீதியான அநாகரீக வாழ்வைத்தானே வாழ்ந்து வருகிறோம். இப்போது திடீரென இப்படி அநீதியென அறிவித்ததும் அனைவரும் அந்த ஞானோதய ஒளியைப் பற்றி அணிவகுத்து வந்து கலப்புமணம் செய்து கொள்வார்களா என்ன? 

ஒரு நூற்றாண்டுகால பரப்புரைக்குப் பின்னும் விரல்விட்டு எண்ணும் அளவில்தானே கலப்புமணங்கள் நடைபெறுகின்றன. இடதுசாரிகள் சாதியைக் கலாச்சார ரீதியாக அணுகுகிறார்கள் என்றால் இவர்கள் சாதியை வெறும் கருத்தியலாக அணுகுகிறார்கள். 

சாதி உற்பத்திக் காரணி

ஆனால் மார்க்ஸ் இதனை உற்பத்தியின் அங்கமாக அணுகுகிறார். இந்தியச் சாதிய சமூகத்தின் அலகான கிராமத்தை எடுத்துக்கொண்டு ஆராயும் அவர் உழைப்பாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சுதந்திரமாகச் சந்தைப்படுத்தும் சாத்தியமற்று இருந்ததைப் பார்த்தார். 

ஒருவர் மற்றவரைச் சார்ந்து இயங்கும் ஒரு இயற்கைப் பொருளாதாரம் இயங்கியது; மக்கள் உழைத்து உருவாக்கும் பொருட்களில் உண்பதற்கு மட்டும் கொஞ்சம் விட்டுவிட்டு மற்றவற்றை மன்னன் தன்னிடம் குவித்துக் கொள்ளும் ஆசியபாணி சொத்துடைமை நிலவியது; இந்த உபரி மன்னனை அடைந்த பிறகே அது சரக்காக மாறியது என்கிறார். 

இப்படி மன்னனிடம் குவியும் சரக்கை ஒன்று தான் வளர்க்கும் படையினருக்குக் கொடுத்து காவல் அல்லது போர் செய்யப் பணிக்கவேண்டும் இல்லையேல் இவனைப்போன்ற மற்ற மன்னர் குடும்பத்துடன் அல்லது மற்ற நாடுகளுடன் பணத்தின் மூலம் பரிவர்த்தனை செய்துகொள்ள வேண்டும். 

பணத்தால் சாதிய சமூகம் மாறுமா?  

When will caste disappear in this society

இதற்குச் சான்றாக ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தைய சோழ, முகலாய, விஜயநகர பேரரசுகள் காலத்தில் 11 முதல் 1.7 கிராம் எடைகொண்ட தங்க, வெள்ளி நாணயங்கள் மூலம் பணக்காரர்களுக்கு இடையேயும் இந்தியாவுக்கு வெளியேயும் பரிவர்த்தனை நடந்ததை உறுதி செய்கின்றன. பின்பு ஆங்கிலேயர் காலத்தில் அதிக மதிப்புடைய முப்பது ரூபாய் தங்கக்காசு முதல் பைசா, அரை, காலனாக்கள் வரை புழக்கத்துக்கு வந்து சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பணத்தின் பயன்பாடு பெருகுகிறது. 

இந்தியாவிலும் சொத்தும் உழைப்பும் பணத்தின் மூலம் விற்றுவாங்கி சந்தையில் சுற்றிச்சுழல ஆரம்பித்துப் பின்பு முழுமையடைந்திருக்கிறது. ஆனால் ஏன் மற்றவர்களைப்போல முதலாளித்துவ வர்க்க சமூகமாக மாறாமல் சாதிய சமூகமாகவே தொடர்கிறோமே என்று கேட்டால் பொருளாதார சுழற்சி மாற்றத்தை குறிக்கும் பணத்தின் பயன்பாட்டைக் கொண்டு ஒரு சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியை மதிப்பிடக் கூடாது என்கிறார் ஏங்கெல்ஸ். 

When will caste disappear in this society

சமூக ஒருங்கமைப்பின் அடிப்படை

இனக்குழு, ஆண்டான்-அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என வளரும் “வரலாற்றில் தீர்மானகரமான காரணிகள் (பொருள்முதல்வாத பார்வையில்) வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருளுற்பத்தி மற்றும் மனிதர்களை உற்பத்தி செய்யும் மறுவுற்பத்தி” ஆகிய இரண்டும்தான் என்று சொல்லும் அவர் 

“ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்கள் எந்த சமூக ஒருங்கமைப்பின்கீழ் (social organization) வாழ்கிறார்கள் என்பதை உழைப்பு மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிநிலைகளே (stage of development of labor and family ) தீர்மானிக்கிறது என்கிறார். 

நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மாற்றத்தினால் முன்பிருந்த கூட்டுக்குடும்பம் உடைந்திருக்கிறது; பலதாரமணம் ஒழிந்திருக்கிறது. ஆனால் இணைமணம் தொடர்கிறது. சமூகத்தில் காதல் பெருகியிருக்கும் அளவுக்கு இன்னும் காதல் மணம் பெருகவில்லை. மீறி செய்தால் ஆணவக்கொலை செய்கிறார்கள். ஆகவே ஏங்கல்ஸ் சொல்லும் குடும்பத்தின் வளர்ச்சி பின்தங்கியிருப்பது தெளிவாகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிய அடுத்து அவர் சொல்லும் உழைப்பின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும்.

வளர்ச்சியற்ற சராசரித்திறன் 

குடும்பத்தின் வளர்ச்சியை மணந்துகொள்ளும் விதத்தை வைத்து எளிதாகக் கண்டறிந்துவிட முடிகிறது. ஆனால் அவர் சொல்லும் உழைப்பின் வளர்ச்சியைக் கண்டறிந்து அளவிடுவது எப்படி?தற்போது நாம் வாழ்வது முதலாளித்துவ காலகட்டம். முதலாளித்துவ உற்பத்தியில் அதன் வளர்ச்சியை அளவிடப் பயன்படுவது உற்பத்தித்திறன். அதாவது ஒரேயளவு நேரத்தில் எவ்வளவு பொருட்களை உற்பத்தி செய்யமுடியும் என்பதைத் தெரிவிக்கும் அளவு, 

2021 வரையிலும் இந்திய மின்சார உற்பத்தியின் அளவு 1.7 டிரில்லியன் கிலோவாட். நமக்கு இணையான மக்கட்தொகை கொண்ட சீனா இதனை எட்டிய ஆண்டு 2002. துருப்பிடிக்காத இரும்பின் உற்பத்தி 11.8 கோடி டன்கள்; சீனா இந்த அளவை எட்டிய ஆண்டு 1998. உலகிலேயே அதிகமான பயிரிடத்தக்க நிலத்தைக் கொண்டிருக்கும் நம்முடைய தானிய உற்பத்தியின் அளவு 30 கோடி டன்கள். நம்மைவிடக் குறைவான பயிரிடத்தக்க நிலம் வைத்திருக்கும் சீனர்கள் இந்த அளவை எட்டிய ஆண்டு 1978. 

இந்தியாவின் இந்த உற்பத்தித்திறன் குறைவுக்குக் காரணமாக மார்க்ஸ் சொல்லும் அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை விடுத்து அதில் தீர்மானகரமான காரணியான மக்களின் சராசரித்திறன் அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் பிரதிபலிக்கும் என்ற கருதுகோளின்படி நமது உழைப்பாளரின் ஊதியம் குறைவாகத்தான் இருக்கும். 

உலக நாடுகளில் உழைப்பாளர்கள் ஒருமணி நேரத்துக்கு 14.54 முதல் 1.05 டாலர்கள் வரை ஊதியமாகப் பெறுகிறார்கள். சீனர்களின் சராசரி ஊதியம் 3 டாலர்கள். இந்தியத் தொழிலாளியின் ஒருநாள் கூலி இந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்லமுடியுமா? ஒரு இணையப்பக்கத்தில் (visualcapitalist) உலகினர் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 2140 முதல் 68 டாலர்கள்வரை சம்பாதிப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில்  அது 95 டாலர்கள் மட்டுமே. 

இந்தியாவில் அதிக வருமானம் தரும் துறையாகக் கருதப்படும் மென்பொருள் துறையில் ஆண்டுக்கு 5 முதல் 24 இலட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்கள் எனக் கொண்டாலும் இந்தத் துறையில் அமெரிக்கர்கள் சாராசரி ஊதியமான 80 இலட்சத்துடன் ஒப்பிட இது சொற்பமே! இந்திய மகளிர் உற்பத்தியில் பங்கெடுக்கும் அளவு வெறும் 24 விழுக்காடு. சீனாவில் 61 விழுக்காடு, சவுதி அரேபியாவில் 28 விழுக்காடு என்கிறது உலகவங்கி இணையம்.

இப்படி மகளிர் பங்களிப்பற்ற குறைகூலிகளைக் கொண்ட இந்தியாவில் பழைய பெற்றோர் முடிவுசெய்யும் இணைமணம் நடக்காமல் இருபாலரும் தங்கள் துணைகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் காதல்மணமா நடக்கும். 

இப்படி உழைப்பின் வளர்ச்சி பின்தங்கி இருந்தால் உற்பத்தி பெருகாது; உற்பத்தி வளர்ந்து பொருட்செல்வம் பெருகாமல் தனிநபர்களின் சொத்து பெருகாது; செல்வம் பெருகாமல் அவர்களின் மணமுறை மாறாது; மணமுறை மாறாமல் குடும்பம் மாறாது; சமூகத்தின் அலகான குடும்பம் மாறாமல் சமூகம் மாறாது என்னும் நிலையில் நாம் பழைய சாதிய சமூக ஒருங்கமைப்பிலேயே  தொடர்கிறோம். 

சாதி மெல்ல மறையும்

பசியால் அழும் குழந்தைக்கு அப்போதைக்கு கடையில் மிட்டாய் வங்கிக் கொடுப்பதைப்போல உற்பத்தியைப் பெருக்க நம்மவர்கள் சந்தையில் நுட்பங்களையும் கருவிகளையும் வாங்கி வருகிறார்கள். அது கோவனத்திற்குப் பதிலாக சட்டை அணிய உதவுகிறது. அதை வைத்துக்கொண்டு ஏன் சமூகம் மாறவில்லை என்று கேட்கிறோம். 

உண்மையான மாற்றம் சமூகத்தின் சராசரித்திறனைப் பெருக்கி உழைக்கும் வர்க்கம் உற்பத்தித் தொழில்நுட்பத்தை அடைந்து நமது உற்பத்தித்திறனை பெருக்குவதன் மூலமே நடக்கும். அப்படியான மாற்றத்தை ஒரே இரவில் ஒற்றைப் பாடல் முடிவதற்குள் எல்லாம் அடையமுடியாது. திட்டமிட்டு உழைப்பாளர் திறனைக் கூட்டி மெதுவாக படிப்படியாகவே அடையமுடியும். 

அப்படியான பாதையில் பயணிக்கும்போது இருபாலரும் உற்பத்தியில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் பெருகும். அதுதான் பொருட்செல்வத்தைப் பெருக்கி பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி சமூகத்தில் கலப்புமணத்தை அதிகரிக்கும். அது சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் அதேசமயம் பொருளாதார ஏற்றத்தாழ்வு நீடிக்கும். அதனால் சாதியும் தொடரவே செய்யும். எனவே முதல் படியாக சாதிய சமத்துவம் நிலவும் வர்க்க சமூகமே சாத்தியம். 

நம்மவர்களின் உழைப்பின் திறன் மேலும் வளர்ந்து பொருளாதார ஏற்றத்தாழ்வும் குறைந்து நாம் சோசலிச சமூகமாக மாறும்போதுதான் ஏற்றத்தாழ்வை குறிக்கும் சாதிய அடையாளங்களுக்கான தேவையின்றி சாதி முழுமையாக மறையும். இதனை மெதுவாக சீர்திருத்தப் பாதையில் அடையப் போகிறோமா அல்லது வேகமாக புரட்சிகரப் பாதையில் அடையப்போகிறோமா என்பதை மக்களின் அரசியல் தெரிவு நிர்ணயிக்கும். 

குறிக்கோள்: இடைக்கால இலக்கு சாதிய சமத்துவ வர்க்க சமூகம்; நீண்டகால நோக்கம் சாதியற்ற சமத்துவ சோசலிச சமூகம். 

உழைக்கும் வர்க்கம் அடையவேண்டிய உற்பத்தித் தொழில்நுட்பம் என்ன? அதற்கான நமது பொருளாதாரப் பாதையென்ன? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.   

கட்டுரையாளர் குறிப்பு

When will caste disappear in this society baskar selvaraj

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10

எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா-  பகுதி 9

சிறப்புக் கட்டுரை: உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8

சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7

சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6

சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5

சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4

சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3

சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2

சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?

     

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *