“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம், மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றி சரித்திரம் படைப்பதே என்னுடைய கனவு” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இதனையொட்டி அங்கு ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ், பாஜக கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் காவிரி விவகாரம் முக்கிய இடம்பெறும் நிலையில், நடைபெற்று வரும் மக்களவை தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்குமான காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய உரிய தண்ணீர் வரவில்லை. மேலும் தங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறி, தமிழ்நாட்டிற்கு திறந்துவிட முடியாது என கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது.
இதற்கிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 60 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் 9,000 கோடி செலவில் அணை கட்ட முடிவு செய்த கர்நாடக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு கர்நாடகா அனுப்பியுள்ளது.
கர்நாடகா அரசின் இந்த தொடர் முயற்சி குறித்து, ”தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் அணைக்கான ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது. மேகதாது அணை பிரச்னை தொடர்பாக சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்னையில் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவோம். மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை படைப்பதே எனது கனவு. மேகதாது அணையை கட்டுவதற்காகவே நான் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்து வருகிறேன்.
“மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு நன்மை கிடைக்கும். மேகதாது திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், “மேகதாது அணைக்கு தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை” என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL 2024: முக்கிய வீரர் விலகல்… மாற்று வீரரை எடுத்தது சென்னை
தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : சத்யபிரதா சாஹு