சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு வேடமும் யுஜிசி விதிகளில் ஒரு வேடமும் முதல்வர் ஸ்டாலின் அணிந்திருக்கிறார் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில், விதிகளை உருவாக்கி பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சி முதல்வர்களுக்கு கடிதம்!
இதுபோன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் , தெலங்கானா என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜனவரி 20) கடிதம் எழுதினார்.
அதில், “பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதி குழு வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு எடுத்துள்ள நிலைப்பாட்டை அனைத்து மாநிலங்களும் அவசியம் எடுக்கும் என தான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த விதிமுறைகள் பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்பும் விமர்சனமும்
முதல்வர் ஸ்டாலினின் இந்த கடிதத்தை வரவேற்ற அதேவேளையில், இது இரட்டை வேடம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளைக் காக்க வேண்டும் என்பதற்காக பாஜக நடக்காத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது நல்ல முயற்சி தான். பாமகவும் அதைத் தான் வலியுறுத்தி வருகிறது.
அதேவேளையில், சமூகநீதியைக் காப்பதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை அப்பட்டமாக தாரை வார்த்துக் கொண்டிருக்கிறாரே, அந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை எவ்வாறு காப்பது என்பது குறித்து இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள பிகார், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியாவது கேட்டறிவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
மாநில உரிமைகளைக் காப்பதில் யு.ஜி.சி விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா