’அதிகரிக்கும் போதைப் பழக்கம்’ : விஜய் எச்சரிக்கை!

Published On:

| By christopher

"When I see all this I am scared" : Vijay

சமீபகாலமாக இளைஞர்களிடையே போதை பழக்கம் என்பது அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக எனக்கே பயமாக இருக்கிறது” என்று விஜய் பேசியது சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் முதற்கட்ட விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூன் 28) தொடங்கியுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக 10 மணிக்கு அரங்கத்திற்குள் வந்த நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சிறிது நேரம் மாணவர்கள் மத்தியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். குறிப்பாக நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகில் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டது பலரையும் கவனிக்க வைத்தது.

Image

காலை முதல் பாசிட்டிவ் பவர்!

தொடர்ந்து விழா மேடையில் விஜய் பேசுகையில், “நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த புஸ்சி ஆனந்த், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.

மீண்டும் ஒரு முறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ, மாணவிகளான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும். அது இன்றுகாலை முதல் எனக்கு கிடைத்துள்ளது.

Image

நல்ல தலைவர்கள் தேவை!

இந்த மாதிரி விழாவில் ஒரு சில நல்ல விஷயங்களை தாண்டி வேறு ஏதும் சொல்ல தெரியவில்லை. நீங்கள் எல்லாருமே அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். சிலருக்கு குழப்பம் இருக்கலாம்.

உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அனைத்து துறையும் நல்ல துறைதான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உங்களது முழு ஆர்வத்தை, 100 சதவிகித உழைப்பை கொடுத்தால் அது யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம் தான். அதனால் உங்களுக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.

உங்களுக்கு எனது ஒரு அறிவுரை. பொதுவாக ஒரு துறையை நாம் தேர்தெடுக்கும் அதில் தேவைகள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்ப்போம். மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று சொல்ல முடியாது. நமது தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நாட்டிற்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை.

ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனால் தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்ல, எதிர்காலத்தில் அரசியலும் கல்வியில் ஒரு விருப்பமான படிப்பாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வந்து நல்ல தலைவர்களாக வரவேண்டும்.

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்!.. மாணவர்கள் முன்பு பேசிய தவெக தலைவர் விஜய்… - Cinereporters Info

உண்மை – பொய்; பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்!

இன்று சமூகவலைதளங்கள் மூலம் நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் எளிதாக காட்ட முடியும். எனவே எது நல்லது, எது கெட்டது என்பதை பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள். அதை தெரிந்துவிட்டாலே, சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய் பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல், எது உண்மை, பொய் என ஆராய்ந்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய விசாலமான பார்வை உங்களுக்கு கிடைக்கும். அதை விட இந்த நாட்டிற்கு மிகப்பெரிய நன்மையை நீங்கள் செய்துவிட முடியாது.

உங்களுடைய நண்பர்கள் தவறான பழக்கங்களில் ஈடுப்பட்டிருந்தால், அவர்களை திருத்த முயலுங்கள். சமீபகாலமாக இளைஞர்களிடையே போதை பழக்கம் என்பது அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக எனக்கே பயமாக இருக்கிறது. அதை அரசாங்கம் தடுக்க வேண்டும் என்பதை தாண்டி, நம்மை நாம் தான் அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்” என்று விஜய் பேசினார்.

போதைக்கு எதிராக உறுதிமொழி!

தொடர்ந்து மாணவர்களிடம் போதை பழக்கத்திற்கு எதிராக “Say no to Temporary Pleasures and Say No to Drugs” என்பதை தான் சொல்ல சொல்ல, மாணவர்களை திரும்ப கூற சொல்லி விஜய் அவர்களை உறுதிமொழி எடுக்கச் செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

10 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலில் இந்தியா… சாதிப்பாரா கோலி? : ரோகித் சர்மா பதில்!

உச்சத்தை தொட்ட தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

Share Market : அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் உயர்வு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel