அதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்த பாஜக தலையிடுவதில் எந்த தவறும் இல்லை” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். விரைவில் அமித்ஷாவை டெல்லி சென்று பன்னீர் சந்திப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 5) நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர், ”அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்பு தர்மயுத்தம் நடத்தியபோது, பிரிந்து கிடந்த அதிமுகவை பாஜகதான் இணைத்து வைத்தது. அதை, ஓ.பன்னீர்செல்வமே தெரிவித்திருக்கிறார். இந்த விஷயத்தில் பாஜக தலையிடுவதில் எந்தத் தவறும் இல்லை.
அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடுவதால் எந்த தவறும் இல்லை. தற்போது 90 சதவிகித அதிமுக தொண்டர்கள் அனைவரும் இணைய வேண்டும் என பேச ஆரம்பித்துவிட்டனர். அதுபோல் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் தலைவர்களிடமும் இணையும் எண்ணம் வந்துவிட்டது. அவரிடம் இருக்கும் அப்பாவி தொண்டர்களிடமும் இணையும் எண்ணம் வந்துவிட்டது. இதுதான் உண்மை.
பாஜக கூட்டணியில் நாம் இருக்கிறோம். அவர்கள் இணைய வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுடைய கூட்டணியில் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால், உட்கட்சி பிரச்சினையில் அவர்கள் தலையிட வேண்டியதில்லை. ஆனால், அதிமுகதான் முழுமையாக பாஜகவை ஆதரிக்கிறதே.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய இரண்டு பேரையும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திப்பார். அந்த சந்திப்புக்குப் பிறகு கட்சி இணைவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தபோது, ‘அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று வற்புறுத்தியதாக மின்னம்பலம் செய்தியில் தெரிவித்திருந்தோம்.
ஏற்கனவே மோடி எங்கள் டாடி என்று அதிமுக பிரமுகர் ராஜேந்திரபாலாஜி பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதை ஓப்பனாக பேசியிருந்தார். இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
கலைஞரின் கடல் பேனா:மத்திய அரசு எழுப்பும் கேள்விகள்!
பொதுச் செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!