உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று(ஜூலை 17) காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இச்சூழலில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “ பாட்னா மற்றும் பெங்களூருவைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம் தான் இது.
இதற்கெல்லாம் நாங்கள் தயாராக இருக்கிறேம். இந்த வழக்கை அமைச்சர் பொன்முடி சட்ட ரீதியாக சந்திப்பார்” என்று கூறியிருந்தார்.
இதனிடையே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அமலாக்கத்துறையினரின் இந்த சோதனைக்கு கண்டனங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே” என பாட்டு பாடி பதில் அளித்துள்ளார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள், அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் துரைமுருகன், ”பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறதா? பிராமிஸா எனக்குத் தெரியாது..” என பதில் அளித்தார்.
தொடர்ந்து, இதை பழிவாங்கும் நடவடிக்கை என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே..” என்ற எம்ஜிஆர் பாடலை பாடிவிட்டு, ”எல்லாமே அரசியல் தாங்க…”என்று கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திமுகவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெற்றி பெறாது: கே.பாலகிருஷ்ணன்
திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபடுகின்றனர்: செல்லூர் ராஜு