நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களுக்காக திமுக நடத்தும் போராட்டம் குறித்து எந்த கேலி, கிண்டல் விமர்சனம் செய்தாலும் அது குறித்து கவலைபட போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் 20ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்,
“நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.
என்ன விமர்சனம் வந்தாலும் நாங்கள் பங்கேற்போம். எங்களது நோக்கம் நீட்டை ஒழிப்பது தான். அதற்காக மாணவர்கள் பக்கம் துணை நிற்கிறோம்.
நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் நம் மாணவர்களை பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். இப்போது அவர்களின் குடும்பத்தையும் பலி கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இதை தடுக்க வேண்டும். அதற்காக எந்த கேலி, கிண்டல் விமர்சனம் குறித்தும் கவலைபட போவதில்லை.
நீட்டை நீக்க வேண்டிய பொறுப்பையும், நீட் தேர்வினால் மாணவர்கள் பலியாவதை தடுக்கும் பொறுப்பையும் நான் உணர்கிறேன். அதே நேரத்தில் மக்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.
சட்டமன்றத்தில் எனது முதல் உரையில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று தான் பேசினேன்.
இது ஒருவர் பேசுவதால் பயனில்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நான் பேசினேன். மக்களுக்கு உறுதி கொடுத்தேன். அதன்படி நீட்டை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து நீட் தேர்வின் பாதிப்பு குறித்த அறிக்கை வெளியிட்டோம்.
இரண்டு முறை நீட் விலக்கு சட்டமன்ற மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். அவர் கிடப்பில் போட்ட நிலையில், 2 அமைச்சர்களை அனுப்பி அழுத்தம் கொடுத்து பேசிய பிறகு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை நீட் தேர்வு விலக்கிற்கு ஒப்புதல் தர மத்திய பாஜக அரசு மறுக்கிறது.
அதிமுக போன்று நீட்டையும் எதிர்த்து விட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து பொய் சொல்லி மக்களை ஏமாற்றவில்லை.
மாணவர்களுக்காக இந்த போராட்டத்தில் உணர்வுபூர்வமாக நான் கலந்துகொள்கிறேன். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திமுகவினர் மட்டுமின்றி மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் பெருமளவில் கலந்துகொண்டு நமது மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நினைவு தினத்தில் நெல்லை கண்ணனுக்கு கிடைத்த பெருமை!
தனுஷ்கோடிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!