Stalin's letter to the volunteers

திமுக வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்கும்? : ஸ்டாலின் பதில்!

அரசியல்

”திமுக வேட்பாளர் பட்டியல் மூத்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு முன்னதாகவே ஆளும் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டது.

இதற்கிடையே நேற்று இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 அன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவும், ஜூன் 4 வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்,  இயூமுலீ கட்சிகள் மட்டுமே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

திமுக வேட்பாளர் பட்டியல்!

இந்த நிலையில், டிடிநெக்ஸ்ட் ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, “வட இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விகளின் அடிப்படையில் அனைத்து காரணிகளையும் நாம் புறக்கணிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் போராடி வருகிறது. அதற்கேற்ப இட ஒதுக்கீடு செய்துள்ளோம்.

கூட்டணி கட்சிகள் திமுகவை நம்புகின்றன. மேலும், நாங்கள் அவர்களை மதிக்கிறோம். தி.மு.க.வும் கள யதார்த்தத்தில் எச்சரிக்கையாக உள்ளது. தொகுதி பங்கீடு என்பது யதார்த்தத்தின் வெளிப்பாடு மட்டுமே.

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மூத்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மாய பிம்பம்!

மேலும் அவர், “மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியால் நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும் விரக்தியும் காணப்படுகின்றன. அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். இது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தன.

தமிழகத்திற்கு அவர் செய்த நல்ல பணிகள் என்ன என்பதை பிரதமர் உண்மையாக மக்களுக்கு சொல்ல முடியுமா? ஒவ்வொரு முறையும் மோடி தமிழகம் வரும்போது, தனது சொந்த ஆட்சியின் அக்கிரமங்களை நினைவுபடுத்துகிறார்.

பாஜக தனது ஊடகம் மற்றும் சமூகவலைதளம் மூலம் ஒரு மாயையான பிம்பத்தை உருவாக்க நினைக்கிறது. தாமரை மலருமா அல்லது விழுமா என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்பையில் முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் இன்றுடன் (மார்ச் 17) நிறைவடைகிறது. இதனையொட்டி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் விமானம் மூலமாக புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தற்போது மும்பை சென்றடைந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

எலக்‌ஷன் ஃபிளாஷ்: ஒரு நாளைக்கு இரு தொகுதிகள்- ஸ்டாலின் பிரச்சாரத் திட்டம் இதுதான்!

ஒரே வாரத்தில் 58 மீனவர்கள் கைது : மத்திய அரசுக்கு அன்புமணி கடிதம்!

+1
0
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *