“உலக வாழ்க்கை நடனம்… நீ ஒத்துக்கொண்ட பயணம். அது முடியும்போது தொடங்கும்… நீ தொடங்கும்போது முடியும்” – இது ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடல். இந்த வரிகள் இன்றைய அதிமுக-வுக்குப் பொருத்தமாக இருக்கிறது.
ஜெ-வின் வாழ்க்கை முடிந்தபோது சர்ச்சைகள் தொடங்கின. ஒரு சர்ச்சை முடியும்போது இன்னொரு சர்ச்சை தொடங்குகிறது. அதிமுக-வின் இரு பிரிவுகளும் இணையும் என்றபோது மீண்டும் பிரிகின்றார்கள்.
அமித்ஷாவின் அஜென்டா!
பி.ஜே.பி. தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் அமித்ஷா இந்தியா முழுவதும் பரவலாக அக்கட்சிக்கு வெற்றிகளை அறுவடை செய்து வருகிறார். கடைசியாக உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தாமல், முஸ்லிம் வாக்குகளை சிதறடித்து வெற்றி பெற்றார் அமித்ஷா. இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பி.ஜே.பி-யைக் காலூன்ற வைப்பது கட்சிக்குள் தனிப்பட்ட முறையில் அமித்ஷாவுக்கு சவாலாக இருக்கிறது. இதை ஒரு பந்தயமாகவே எடுத்துக்கொண்டு கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டு அரசியலை இண்டு இடுக்காக ஆய்ந்து வருகிறார் அமித்ஷா. அதன் அடிப்படையில் அவரிடம் இரண்டு அஜென்டாக்கள் இருக்கின்றன.
1. அதிமுக-வைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இரட்டை இலையை முடக்கியாகிவிட்டது. தினகரனையும் ஒதுக்கியாகிவிட்டது. இப்போது இரு அணிகளையும் இணைத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டுக் கொடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைத்து கணிசமான எம்.பி-க்களைக் கைப்பற்றுவது.
2. அது முடியவில்லை என்றால்… அதாவது பி.ஜே.பி-யின் கணக்குப்படி அதிமுக-வில் இரு அணிகளும் சேருவதில் சிக்கல்கள் தொடரும் என்றால் இரட்டை இலையை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு அதிமுக-வின் இரு அணித் தலைவர்கள் இடையேயும் பகையை வளர்த்து வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலையே களத்தில் இல்லாமல் செய்வது.
இந்த இரண்டு அஜென்டாக்கள்தான் அமித்ஷாவின் முன் இருக்கின்றன. இதில் எந்த அஜென்டா நடைமுறைக்கு வரும் என்பது பன்னீரும் பழனிசாமியும் நடந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது.
தினகரன் ஒதுங்கினாரா… பதுங்கினாரா?
இந்த திருவிளையாடலை புரிந்துகொண்ட தினகரன்… ‘மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, மச்சானுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’ என்றவகையில் இப்போது அதிமுக-வில் இருந்து ஒதுங்கினால் அது கட்சியையும் காப்பாற்றிய மாதிரி இருக்கும், வழக்குத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டது மாதிரியும் இருக்கும் என்று கணக்குப் போடுகிறார். அதேநேரம் அவர் தனது நெருக்கமான நண்பர்களுடன் அரசியல் ரீதியான ஆலோசனைகளைத் தொடர்ந்துகொண்டிருப்பதன் மூலம் தான் ஒதுங்கவில்லை, பதுங்கியிருக்கிறேன் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.
தினகரனை அறிந்தவர்களுக்குத் தெரியும்… அவர் எங்கும் அரசியல் செய்பவர். அதனால் இப்போது அதிமுக-வில் இருந்து தள்ளிச் சென்றிருப்பதும் அவரது அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றுதான்.
எடப்பாடியும் பன்னீரும் என்றைக்கும் ஒன்றாக மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் மீண்டும் ஒரு கட்டத்தில் தன் தயவு தேவைப்படும் என்று கருதி தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களோடு பேசிவருகிறார் தினகரன். அவரது இந்த பதுங்கல் பார்முலாவை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான், அவர் ஒதுங்குவதாகச் சொன்ன பிறகும் அவர் மீதான வழக்குகளை முடுக்கும் வேலையை செய்கிறது டெல்லி.
எம்.ஜி.ஆர். காட்டிய வழி!
1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தனிக் கட்சிப் பணிகளைத் தொடங்கியதும் தேர்தல் ஆணையத்திடம் சின்னத்துக்காக விண்ணப்பித்தார். அப்போது தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலக் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மூன்று சின்னங்களைக் கொடுத்து அதில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம் என்று சாய்ஸ் கொடுக்கும்.
அந்த வகையில்… எம்.ஜி.ஆருக்குத் தேர்தல் ஆணையம் மூன்று சின்னங்களைக் கொடுத்தது. முதல் சின்னம் இரட்டை இலை, இரண்டாவது தாமரை, மூன்றாவது சிங்கம். அப்போது இந்த மூன்றில் எந்த சின்னத்தை நம் கட்சிக்கு பெறலாம் என்று எம்.ஜி.ஆர். ஆலோசனை நடத்தினார். சிலர் தாமரை என்றார்கள், சிலர் இரட்டை இலை என்றார்கள். இந்த இடைவெளியில் சைதை துரைசாமி போன்ற ஒரு சில தலைவர்கள் அதிமுக கொடியில் தாமரையைப் பொறித்து கொடிகளைக் கூட ஏற்றிவிட்டார்கள்.
சின்னத்தைத் தேர்வு செய்யும் நேரம் வந்தது. எது மக்களிடையே எளிதில் சென்று சேரும் என்ற உத்தியில் கரை கண்டவர் எம்.ஜி.ஆர். அந்த உத்தியால்தானே சினிமாக்கள் மூலம் மக்கள் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தார்! சின்னத்தை தேர்வு செய்யும் நேரம் வந்தபோது, எம்.ஜி.ஆர். இரட்டை இலையைத் தேர்ந்தெடுத்தார்.
அப்போது சிலர் இது பற்றிக் கேட்டபோது எம்.ஜி.ஆர். சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? இன்றைய ஓ.பன்னீர்கள், எடப்பாடிகள் எல்லாரும் கவனமாக அறிந்துகொள்ள வேண்டிய விளக்கம் அது.
எம்.ஜி.ஆர். சொன்னார்…
“சின்னத்தை மக்கள்கிட்ட எளிதாக கொண்டு சேர்க்கணும். நீ சுவத்துல ஒரு தாமரையை வரையறதுக்குள்ள நூறு இரட்டை இலைய வரைஞ்சிடலாம். அதனால மக்கள்கிட்ட எளிதா போய் சேரும். இரட்டை இலை என்னிக்கும் வெற்றி இலையா இருக்கும்” என்பதுதான் எம்.ஜி.ஆர். சொன்ன விளக்கம்.
காலம் நடத்தும் விளையாட்டைப் பாருங்கள். 45 ஆண்டுகளுக்கு முன், எம்.ஜி.ஆர். தூக்கி எறிந்த தாமரை சின்னத்தை அதற்குப் பல ஆண்டுகள் பின் உருவாக்கப்பட்ட பி.ஜே.பி. பெற்று, இன்று அந்தத் தாமரையே எம்.ஜி.ஆரின் இரட்டை இலையை முடக்கியும் அடக்கியும் வைத்திருக்கிறது.
பன்னீரும், பழனிசாமியும் பதவி ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இணைந்தால், எம்.ஜி.ஆர். சொன்னபடியே ஒரு தாமரை வரைவதற்குள் நூறு இரட்டை இலைகளை, ஏன் ஆயிரம் இரட்டை இலைகளை வரைந்துவிட முடியும். ஆனால் பன்னீரும், பழனிசாமியும் தாங்கள் போட்டுக்கொள்ளும் ‘எம்,ஜி.ஆரின், அம்மாவின் உண்மை விசுவாசி’என்ற பட்டத்தை உண்மையாக்கினால் மட்டுமே இது நடக்கும்.
-ராகவேந்திரா ஆரா
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 1
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 2
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 3
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 4
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 5
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 6