எடப்பாடி பன்னீர் நேருக்கு நேர் : அதிமுக தலைமை அலுவலகம் என்னவாகும்?

அரசியல்

இன்று (ஜூலை 11) எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக எடப்பாடி டீம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். அவரை வரவேற்று நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட பலரும் பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்துகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களும் பன்னீரை இப்போதே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது மேடையில் இருந்த சி.வி.சண்முகம் அவரை இப்போதே நீக்கி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வேகமாக வலியுறுத்தினார். அவரை சமாதானப்படுத்தி எடப்பாடி பழனிசாமி அமரவைத்தார்.

இந்தநிலையில் தான் அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அலுவலகம் வெளியே இரு தரப்புக்கிடையே மோதல், அதிரடிப்படை குவிப்பு, போலீசார் தடியடி கைது என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்தசூழலில் பொதுக்குழுவில் உள்ள எடப்பாடி டீம் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தலைமை அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் எப்போது வெளியே வருவார் என தெரியாத நிலையில், புதிதாக தேந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியும் மெரினா சென்று அங்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு தலைமை அலுவலகம் செல்லலாமா அல்லது நேரடியாக தலைமை அலுவலகத்துக்கு செல்லலாமா என ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்குள் தலைமை கழகத்தில் இருந்து பன்னீரை அகற்ற வேண்டும் என்பதற்காக அவர் மீது போலீசிலும் எடப்பாடி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி டீம் தலைமை அலுவலகம் வந்தால், தற்போது இருக்கிற நிலையை விட மேலும் பரபரப்பான சூழல் ஏற்படும். காரணம் தற்போது அலுவலகத்தில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை விட, வானகரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி வெளியில் ஏராளமான தொண்டர்களும் குவிந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தலைமை அலுவலக பகுதிக்கு வந்தால் நிலைமை இன்னும் பதற்றமாகிவிடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக போலீசார் இன்னோரு பக்கம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதிமுகவினர் அடுத்தடுத்த நகர்வுகள் பரபரப்பை உண்டாக்கி வரும் நிலையில் எடப்பாடி தரப்பினர் தலைமை அலுவலகம் வந்தால் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *