உதயநிதி அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக பேசியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டியதாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் இன்று(நவம்பர் 28)ஆஜரானார்.
அப்போது அவரிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறது என்றார்.
மேலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த சீமான், உதயநிதி அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும், சிங்கப்பூர் போன்று தமிழகம் மாறிவிடும் என்று கிண்டலாகப் பேசினார்.
அதிமுக பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அப்படி ஒரு நிலை இல்லை என்று நினைக்கிறேன். பாஜக தான் தமிழகத்தில் யார் காலடியிலாவது கிடக்கவேண்டும்.
பெரிய கட்சி என்று சொல்லுகிறார்கள். ஆனால் தனித்து நிற்க பயப்படுகிறார்கள். 2024 தேர்தலிலும் நானும் தனித்து போட்டியிடுகிறேன்.
பாஜகவும் தனித்து போட்டியிடட்டும். யார் பெரிய கட்சி என்பது அப்போது தெரிந்துவிடும் என்றார்.
மொழி அரசியலை கட்சிகள் கையில் எடுத்துள்ளார்களே? அதைப்பற்றி சீமானின் கருத்து என்ன என்று கேட்டபோது, நான் வேலை தூக்கினால், அவர்களும் தூக்குவார்கள், நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்.
நான் ஈழத்தைப் பற்றி பேசினால் அவர்களும் பேசுவார்கள். ஆனால் நான் கட்சத்தீவை மீட்கவேண்டும் என்று சொன்னால் அதைப்பற்றி மட்டும் வாய் திறக்கமாட்டார்கள்.
காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத்தரவேண்டும் என்று சொன்னால் மவுனம் காப்பார்கள். தேவைக்கு மட்டுமே பேசுவார்கள்.
நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இல்லை. கோயில்களில் இல்லை. தமிழ்நாட்டிலேயே தமிழ் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கு உரிமை இல்லை. உலகத்தில் பல நாடுகள் 21 மொழிகளை ஆட்சி மொழியாக வைத்திருக்கின்றன.
இந்தநிலையில் காசியில் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
கலை.ரா
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கச் சொல்வது இதற்காக தான்: செந்தில் பாலாஜி விளக்கம்!