மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (செப்டம்பர் 20) சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசியதாகக் கூறியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது. அதோடு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் உள்துறை அமைச்சரைச் சந்திப்பதற்கு அதிமுக தரப்பிலிருந்து அமித்ஷாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. இன்று காலை 11 மணியளவில் அமித்ஷாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்தது.
அவருடன், லஞ்ச ஒழிப்பு சோதனையை மூன்று முறை சந்தித்த முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரும் உடன் சென்றனர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், “இன்றைய தினம் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை, நானும், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்வராக இருந்த போதே பிரதமரின் கவனத்துக்குச் எடுத்துச் சென்றேன்.
ஒன்று கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழக விவசாயிகளுக்கும், குடிநீருக்கும் போதுமான நீர் கிடைக்கும்.
இதுகுறித்து அப்போது பிரதமரிடம் சொன்னபோது பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். தற்போது அதற்கு டிபிஆர் தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்த திட்டத்தை வேகப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
இரண்டாவது நடந்தாய் வாழி காவேரி திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதை பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் இளைஞர்கள் சீரழிவது தொடர்பாகவும் பேசியிருக்கிறோம்.
போதை பொருள் தொடர்பாகப் பலமுறை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தேன்.
எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் மத்திய உள் துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகளவு நடப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அனைத்து துறையிலும் கரெப்சன் நடக்கிறது. அதுதொடர்பாகவும் தெரிவித்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. பிரதமரைச் சந்திப்பதற்கான திட்டம் தற்போது வரை இல்லை.
அதிமுக பிரச்சினை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி எதுவும் பேச முடியாது.
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் இதுவரை 20 மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்துள்ளேன்” என்றார்.
மின் கட்டணம் குறித்துப் பேசிய அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில் இவ்வளவு கட்டணத்தை உயர்த்தலாமா” என்று கேள்வி எழுப்பினார்.
பிரியா
அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி
எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம் : பின்னணி என்ன?