What to do on social media Stalin address of Dravida Month

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா-பத்து மாநாட்டுக்கு சமம்: திராவிட மாத நிறைவுரையில் ஸ்டாலின்

அரசியல்

திமுக  தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளான இன்று (30-09-2023) ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பேசஸ் நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின்  சிறப்புரை வழங்கினார்.

“ இந்த ‘ஸ்பேசஸ்’ கருத்தரங்கை ஆர்கனைஸ் செய்திருக்கும் ஐ.டி. விங் செயலாளர் – தம்பி டி.ஆர்.பி.ராஜா  அணியினருக்கு, நன்றி! ஒரு காலத்தில், நம்முடைய கொள்கைகளைப் பரப்ப, பேச்சு மேடை – நாடக மேடை – திரையுலகம் – எழுத்துலகம் என்று மக்களை ‘ரீச்’ செய்வதற்கான அனைத்து மீடியத்தையும் பயன்படுத்திக் கொண்டோம்.

ஒரு முறை, பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒரு தொண்டருக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார், ஆனால் அந்த தொண்டர், தனக்கு அந்த பொறுப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ‘என்ன காரணம்?’ என்று அண்ணா கேட்டார். “எனக்கு வசதி இல்லை… ஏழை” என்று அந்தத் தொண்டர் சொன்னார். அவருடைய தயக்கத்தைப் புரிந்துகொண்ட அண்ணா என்ன சொன்னார் தெரியுமா? “உன் ஊரில் கரிக்கட்டை இருக்கும் அல்லவா… அதை வைத்து ‘உதயசூரியன்’ சின்னத்தை வரை… அதுதான் சிறந்த இயக்கப் பணி!” என்று சொன்னார்.

ஒரு சாதாரண கரிக்கட்டையைக் கூட கருத்தியல் ஆயுதமாகப் பயன்படுத்கொள்ளத் தெரிந்தவன் தி.மு.க.காரன்! அதனால்தான், சமூக வலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், சமூகத்தை முன்னேற்றுவதற்கான திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஃபேஸ்புக் – யூடியூப் – வாட்ஸ்அப் – ட்விட்டர் – இன்ஸ்டாகிராம் – ஷேர்சாட் – டெலிகிராம் என்று நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது எல்லாவற்றையும் நம் கொள்கைகளைக் கொண்டு செல்ல – கட்சியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! நம்முடைய சாதனைகளை சொல்ல வேண்டும்! மக்களை திசைதிருப்ப – ஏமாற்ற அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்! இதையெல்லாம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இதைக் கவனத்தில் வைத்து செயல்படுங்கள்.

உங்களின் பெரும்பாலான ‘எக்ஸ்’ பதிவுகள் என்னுடைய கவனத்திற்கு வந்துவிடும். சிலரின் பதிவுகளை ரசித்துப் படிப்பேன். அதேசமயம், ஏதாவது குறையோ – புகாரோ சொன்னீர்கள் என்றால், உடனே அதைத் தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். அந்த வகையில், உங்களோடு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பாகத்தான் சமூக வலைத்தளங்களை நான் பார்க்கிறேன்.

இதையேதான் உங்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன். சக மனிதர்களிடம் நெருக்கமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடம் நம்முடைய கொள்கைகளை – சாதனைகளை சொல்லுங்கள். ஒரே வட்டத்திற்குள் நாம் சுருங்கிடாமல், வெவ்வேறு தளங்களை நாம் ‘ரீச்’-ஆக சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது.

அதனால்தான், நான்கூட இப்போது ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற பாட்காஸ்ட் சீரிஸ்-ஐத் தொடங்கியிருக்கிறேன். ஏற்கனவே இரண்டு எபிஸோட் வந்துவிட்டது, விரைவாகவே அடுத்ததும் வரும். இந்தப் பாட்காஸ்ட் சீரிஸ், தமிழ்நாட்டை தாண்டி நம்முடைய கருத்துகளை, தெலுங்கு – மலையாளம் – கன்னடம் – இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் கொண்டு செல்கிறோம்.
இந்தியாவுக்காகப் பேசுவோம் – எபிஸோட் 1 & 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம்” என்று  பேசினார்.

What to do on social media Stalin address of Dravida Month

மேலும்,   “அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் பொய்ச் செய்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதற்காகவே சம்பளம் கொடுத்து வேலைக்கும்   கூலிக்குத் தனியாகவும் ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் என்றைக்காவது கொள்கையைப் பேசிப் பார்த்து இருக்கிறீர்களா?
இப்போதுகூட, பேரறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று ஒரு செய்தியைப் பரப்பினார்கள், அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இந்து ஆங்கில நாளிதழே மறுத்துவிட்டது. அடுத்து, மருதமலை கோயிலுக்கு, தி.மு.க. ஆட்சி மின் இணைப்பு தரவில்லை என்று பரப்பினார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு 5 வருடத்திற்கு முன்பே மருதமலை கோயிலில் மின் இணைப்பு வந்துவிட்டது என்று கல்வெட்டு ஆதாரம் காட்டி இருக்கிறார்கள்.

பா.ஜ.க.விற்குப் பொய் சொல்வது எந்த அளவிற்கு பழக்கம் ஆகிவிட்டது என்றால், பிரதமர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பொய்களை உண்மை என்று நினைத்து நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பொய் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். நாம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா? நமக்கு ஆக்கப்பூர்வமான நிறைய வேலை இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். எவ்வாறு, நீட் தேர்வின் அபாயத்தை முன்பே உணர்ந்து, நாம் போராட ஆரம்பித்தோமோ, அவ்வாறு நிறைய வேலைகள் நமக்கு இருக்கிறது.

கள்ளக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு. ஆனால், நம்முடைய கொள்கைகளுக்கு வலிமை அதிகம்! அதனால்தான், 75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இளமை மாறாமல் இருக்கிறது. மக்களும், ஆறு முறை தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. ‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று நம்முடைய முழக்கத்தை சொல்லி வருகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது.  இந்தியா முழுவதும் நம்முடைய ’இந்தியா கூட்டணி’தான் வெற்றி பெற வேண்டும்.அதற்கு பா.ஜ.க.வின் பொய் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக, கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல், பா.ஜ.க. பம்மாத்து செய்துகொண்டு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

‘டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்’தான் அவர்களின் ஆயுதம். உண்மையான பிரச்சினைகளைப் பற்றி எப்போதுமே பேச மாட்டார்கள். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் பற்றி, திரும்ப திரும்பப் பேசிப் பிரச்சினையாக ஆக்குவார்கள். அதற்கு சில ஊடகங்களும் துணை செல்லும். இதைக் கரெக்ட்டாக புரிந்துகொண்டாலே போதும்!

‘சந்திராயன் விட்டோம். ஜி-20 மாநாடு நடத்தினோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி படம் காட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது என்று நினைவூட்டி, அந்த வீடியோக்களை அதிகம் பரப்புங்கள்.

‘ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு, ரூபாய் 15 லட்சம் கொடுப்போம்’ என்று பிரதமர் மோடி சொன்னதையும் – ‘அதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக சொன்ன ஜூம்லா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதையும் அதிகமாகப் பரப்புங்கள்.

“இந்திய மகள்களுக்காக இப்போது உருகுகிற மாதிரி நடிக்கும் பிரதமர் அவர்களே! மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மணிப்பூருக்குப் போய் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்புங்கள். “மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க. எம்.பி. மேல் சொன்ன பாலியல் புகார், பல மாத காலமாகப் பிரதமர் காதில் விழாமல் போனது ஏன்?” என்று கேள்வி எழுப்புங்கள்.

பா.ஜ.க.வின் கடந்த காலத் தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரச்சாரம் செய்யுங்கள். இதைச் சரியாக செய்தாலே, நாற்பதும் நமதாகும்! நாடும் நமதாகும்! இந்த ’செப்டம்பர் – திராவிட மாதம்’, தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் வந்திருக்கிறது.  அடுத்த ’செப்டம்பர் – திராவிட மாத’த்தை, ‘வெற்றி விழாக் கொண்டாட்ட மாத’மாகக் கொண்டாடுவோம்” என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

வேந்தன்

ஆசிய போட்டிகள் 2023: 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம், 4வது இடத்தில் இந்தியா!

குன்னூரில் பள்ளத்தில் பேருந்து கவிந்து விபத்து: 8 பேர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *