திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி காலை 11:15 மணியிலிருந்து 11.35 மணி வரை 20 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
பொதுவாகவே ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்பும் பிரதான கட்சிகள் தங்களது சட்டமன்ற வியூகத்தை வகுப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டுவது வழக்கம்.
ஜனவரி ஒன்பதாம் தேதி மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்த நிலையில்… ஜனவரி 10 காலை திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
ஜனவரி ஒன்பதாம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது ஏற்பட்ட சர்ச்சைகள் சலசலப்புகளுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஆளுநர் உரை தொடர்பாகவும் கடைசி நேரத்தில், தான் முன்மொழிந்த அந்த தீர்மானம் தொடர்பாகவும் சில விஷயங்களை வெளிப்படையாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “நாம் தயாரித்துக் கொடுத்த உரைக்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் அதை சட்டமன்றத்தில் மாற்றிப் பேசி இருக்கிறார் ஆளுநர். அதனால்தான் நாம் உடனடியாக ஆளுநர் தவிர்த்தும் சேர்த்தும் பேசிய உரையை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு தீர்மானம் கொண்டு வந்தோம்.
சிலர் இந்த தீர்மானம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தயாரித்து வைக்கப்பட்டிருந்ததாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

ஆளுநர் அவர்களுக்கு மாநில அரசின் சார்பாக உரை தயாரித்து அனுப்பப்பட்டது. அந்த உரையில் சில விளக்கங்களையும் சந்தேகங்களையும் ஆளுநர் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக நமது நிதித்துறை செயலாளர் ஆளுநரை சந்தித்து விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.

ஆளுநர் எதையெல்லாம் எதிர்ப்பார் என்று நாம் நினைத்தோமோ அது பற்றி எல்லாம் ஒன்றும் சொல்லாத ஆளுநர், அந்த உரையின் 59ஆவது பத்தியாக அமைந்திருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த இயலாது, அது சமூக நீதிக்கு எதிரானது.
ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடு முறையை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கும் நமது நிதித்துறை செயலாளர் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். அதை ஆளுநர் ஏற்று கொண்டு விட்டார். இதுதான் நடந்தது.
இந்த நிலையில் ஆளுநர் உரை சுமுகமாகவே செல்லும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசித்தபோது அதில் சில பத்திகளை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.

இது குறித்து அப்போதே ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அண்ணன் துரைமுருகன் அவர்கள் என்னிடம் பேசினார். இந்த நிலையில் உடனடியாக சட்டமன்றத்திலேயே இதுகுறித்து ஆலோசனை நடத்தி 17 வது விதியை தளர்த்தி அந்த தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்தோம்.
முதலில் துரைமுருகன் அண்ணனையே இந்த தீர்மானத்தை முன்மொழியச் செய்ய நான் நினைத்தேன். ஆளுநர் உரையாற்றி முடித்த நிலையில் முதலமைச்சராகிய நாமே இதை முன்மொழிந்து விடுவோம் என்றுதான் அந்த தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன்.
இதுதான் நடந்தது. நாம் முன்கூட்டியே திட்டமிட்டு தீர்மானத்தை தயார் செய்யவில்லை. சட்டமன்றத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அங்கேயே ஆலோசித்து இந்த முடிவை எடுத்தோம்.
மற்றபடி ஆளுநருக்கும் நமக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரண்பாடுகளும் இல்லை. எனவே சட்டமன்றத்திலோ பொதுவெளிலோ, ஆளுநரை அரசியல் ரீதியாக நாம் விமர்சிக்கலாமே தவிர அவரை எக்காரணத்தை முன்னிட்டும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது” என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
வேந்தன்
சோகத்தில் முடிந்த துணிவு கொண்டாட்டம்: உயிரிழந்த அஜித் ரசிகர்!
ஆளுநர் விவகாரம்…விளக்கம் தந்த தமிழக அரசு…சட்டமன்றத்தில் நடந்தது என்ன?