2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 20) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வரிவடிவ பட்ஜெட் வெளியாகும் போது அதனை பிரிண்ட் செய்ய வேண்டும் என்பதால் அமைச்சர்களுக்கு தங்களது துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பட்ஜெட் தாக்கல் ஆவதற்கு சில நாட்கள் முன்பே தெரிந்துவிடும்.
ஆனால் தற்போது இ-பட்ஜெட் காரணமாக முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது பட்ஜெட்.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி மாநில அமைச்சர்களுக்கும் பட்ஜெட் குறித்த அறிவிப்புகள் சஸ்பென்ஸாகவே இருக்கின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் விளையாட்டுத் துறைக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று அவரும் எதிர்பார்க்கிறார்.
அதுமட்டுமின்றி நாளை அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட்டில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் முக்கிய அறிவிப்புகளாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பானது வெளியாகலாம். சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போதும், சர்வதேச மகளிர் தினத்தின்போதும் முதல்வர் ஸ்டாலின் ’வரும் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகைக்கான அறிவிப்பு நிச்சயம் வெளியாகும்’ என்று அறிவித்து இருந்தார்.
அதேபோல சிலிண்டருக்கான ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு போன்றவற்றின் மீதும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் உதவித்தொகை பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் திமுக அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே அதுகுறித்தும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
மேலும் சமீபத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பை மகிழ்ச்சிபடுத்தும் வகையில் அவர்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து நாளைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.
கிறிஸ்டோபர் ஜெமா
பண அரசியல் : அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி பதில்!
உதயநிதியை மீண்டும் நடிக்க வைப்பேன்: வடிவேலு