செந்தில் பாலாஜிக்கு கடும் நெருக்கடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

அரசியல்

தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 16) முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்படுவதோடு, அவர் மீதான அமலாக்கப் பிரிவு விசாரணையும் வேகம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது செந்தில்பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டு அரசியலிலும் அடுத்த கட்ட பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது.

கடந்த ஆட்சிக்கு முந்தைய அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில்பாலாஜி.  அப்போது போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக செந்தில்பாலாஜி மீது புகார்கள் எழுந்தன. 2015 இல் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீது பல புகார்கள் வெளிப்படையாக பேசப்பட்டன. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த  கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.   இந்த புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் பேரில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் கூறியதை  அடுத்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து 2021 ஜூலை மாதம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் கடந்த 2022 செப்டம்பர் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், ‘சென்னை உயர் நீதிமன்றம் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்தது செல்லாது’ என்று குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து   ’மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி ஊழல் தடுப்பு அமைப்பும்… செந்தில்பாலாஜிக்கு எதிராக  அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறையும் மனுக்கள் தாக்கல் செய்தன.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனுக்கு போதுமான முகாந்திரங்கள் இல்லை என்று சொல்லி சம்மனுக்கு தடை விதித்தது. இதன் மூலம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கும் தடை ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராம சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (மே 16) தீர்ப்பளித்தனர்.

Senthil Balaji Money Case
நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராம சுப்பிரமணியன்

அதில்,  “செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில்  மத்திய குற்றப் பிரிவு விசாரணை தொடர வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த வழக்கில் அமைச்சர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்” என்றும்,  தேவைப்பட்டால் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் என்றும் உத்தரவில் கூறியுள்ளது.

மேலும்,  “அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழங்கிய சம்மன் செல்லுபடியாகும். அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் தனது விசாரணையைத் தொடரலாம்” என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ராமசுப்பிரமணியன் வாய்மொழியாக தெரிவித்த சில கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Senthil Balaji Money Case

”லஞ்சம் கொடுத்தவரும், லஞ்சம் பெற்றவரும் சமரசமாகப் போகின்றனரா? இந்த வழக்கில், இரண்டு அணிகள் உள்ளன, ஆனால் யார் எந்த அணிக்காக விளையாடுகிறார்கள் என்பதே தெளிவாகத் தெரியவில்லை” என்று நீதிபதி ராமசுப்பிரமணியன்  குறிப்பிட்டார். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ஏற்கனவே அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையை விட்ட இடத்தில் இருந்து தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து செந்தில்பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளை  அமலாக்கத்துறை மேற்கொள்ள இருந்த தடை நீங்கிவிட்டது. இதனால் அரசியல் ரீதியான பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

வேந்தன்

ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்?: பொன்முடி

ஸ்டாலினை சந்தித்த யெச்சூரி: பேசப்பட்டது என்ன?

+1
0
+1
1
+1
0
+1
3
+1
3
+1
0
+1
0

1 thought on “செந்தில் பாலாஜிக்கு கடும் நெருக்கடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

  1. கோடிகளை வைத்து நீதியை விலைக்கு வாங்கிட முடியாது டாஸ்மார்க் கொள்ளையர் சார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *