தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் கூடிய மூன்றாண்டு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சீனிவாசன் செயலராக நியமிக்கப்பட்ட போதே, அவருக்கு அதற்கான தகுதி இல்லை என்றும், விதிகளை மீறி அவர் நியமிக்கப்பட்டதாகவும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அதே கே.சீனிவாசனுக்கு பதவி உயர்வுடன் கூடிய மூன்றாண்டு பணிநீட்டிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் சீனிவாசன் தமிழக சட்டப்பேரவைச் செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018 மார்ச் 11 அன்று எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
நெறிமுறைகளை மீறி நியமனம்!
அதில், “இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில் பணிமூப்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி, தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக சீனிவாசன் என்பவரை நியமித்திருப்பதற்கு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
விதிமீறல்களின் மொத்த நேர்வாக இருக்கும் இந்த நியமனத்தை தமிழக ஆளுநர் அவர்கள் எவ்வாறு அனுமதித்து ஒப்புதல் அளித்தார் என்பது வியப்பாக இருக்கிறது.
சட்டப்பேரவைச் செயலாளர் பதவி என்பது ஜனநாயகத்தின் குறிப்பாக, மக்களாட்சி மாண்பின் சின்னமாகக் கருதப்படும் தமிழக சட்டமன்றத்தில் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான பதவியும் கூட. இந்தப் பதவியில் சட்டப்பேரவை விதிகளுக்கு எதிராகவும், பேரவைப் பணியாளர்களில் பதவி உயர்வு பெற வேண்டியவர்களைப் புறக்கணித்தும், ஒரு செயலாளர் நியமனத்தை செய்திருப்பது, ஒட்டுமொத்த தமிழக சட்டப்பேரவை ஊழியர்களையும் அதிகாரிகளையும் கடுமையான மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாக்கி, சட்டப்பேரவை செயலகப் பணிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
சட்டப்படியான ஆட்சி நடைபெறவில்லை!
ஏற்கனவே, ஓய்வுபெற்ற சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.பி.ஜமாலுதீனுக்கு ஐந்து ஆண்டுகள் பணி நீட்டிப்பு அளித்து, பணிமூப்பு அடிப்படையில் செயலாளர் பதவிக்கு வர வேண்டியவர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டன.
இப்போது, அவசர அவசரமான ஒரு பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பதவியிலிருந்து 4 மாதங்களுக்குள் சிறப்பு செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சட்டப்பேரவைக்கு இப்போது செயலாளர் நியமிக்கப்பட்டு விட்டார் என்பது, சட்டப்படியான ஆட்சி நடைபெறவில்லை என்பதை உணர்த்துகிறது. இப்போது செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பவருக்காக, பூபதி என்பவரை செயலாளர் பதவியில் உடனே நியமிக்காமல், கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைச் செயலகத்தில் உள்ள பொது நிர்வாகப்பிரிவில் சீனிவாசன் பணியாற்றி இருந்தால், துணைச் செயலாளராக மட்டுமே பதவி உயர்வு பெற்றிருக்க முடியும் என்ற நிலையில், அவருக்கு பேரவைத் தலைவரின் சிறப்புச் செயலாளர் பதவியளித்து, தற்போது சட்டப்பேரவையின் செயலாளர் பதவியே கொடுத்து ஒருதலைப்பட்சமாக, பல படிநிலை உயர்வு, பதவி உயர்வு வழங்கியிருப்பது அலுவலக நடைமுறைக்கும், இயற்கை நீதிக்கும் முற்றிலும் மாறானது.
நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும்!
சட்டப்பேரவைத் தலைவருக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அவர் விரும்புகிறார் என்பதற்காக, விதிகளின் முதுகெலும்பை நிச்சயம் உடைக்க முடியாது. சட்டப்பேரவை அலுவலகம் ஒன்றும் தனியாருக்குச் சொந்தமான அலுவலகம் கிடையாது. பொது அலுவலகம் ( Public Office). பேரவைத் தலைவரிடம் பணியாற்றுகிறார் என்பதற்காக, பேரவைச் செயலகத்தில் செயலாளர் பதவிக்கு, தகுதி உள்ளவர்களையெல்லாம் புறக்கணித்து, ஒரு நியமனத்தை செய்துவிட முடியாது. இதுபோன்ற விதிகளை அப்பட்டமாக மீறிய சட்டத்திற்குப் புறம்பான நியமனம் சட்டப்பேரவைச் செயலகத்தின் நிர்வாகத்தை முடக்கி, அதன்மீது கறைபடியச் செய்துவிடும்.
ஆகவே, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் தாமாக முன்வந்து, தமிழக சட்டப்பேரவைக்கு விதிகளை மீறி தனியொருவருக்குச் சலுகை காட்டும் வகையில், பாரபட்சமாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் சீனிவாசனின் நியமனத்தை ரத்துசெய்து, சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் பணிமூப்பு அடிப்படையில், தகுதியான ஒருவரை பேரவைச் செயலாளராக நியமித்து நிர்வாக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அப்போது கடும் கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் அதற்கு நேர்மாறாக பணிநீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சியினரையே முணுமுணுக்க செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானால் ஒரு பேச்சா?: ராமதாஸ் கண்டனம்!
திடீரென ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் காரணம் என்ன?