ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு: ஆ.ராசா என்ன சொல்கிறார்?

அரசியல்

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுதும் பாஜகவினரும், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகளும் ஆர்பாட்டம், போராட்டம், கடையடைப்பு என இறங்கி வருகின்றனர்.

ஆ.ராசாவின் எம்பி பதவியையே தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மனுக்களையும் அனுப்பி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே பேசியிருக்கிறார்.

ராசாவை மையம் கொண்டு இத்தகைய புயல் வீசுவதற்குக் காரணம் செப்டம்பர் 6 ஆம் தேதி அவர் சென்னை பெரியார் திடலில் இந்து என்றால் என்ன என்பது பற்றியும் சூத்திரர்களை மனுதர்மம் எப்படி சித்திரிக்கிறது என்பது பற்றிய பேச்சும்தான்.

இந்த பேச்சுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள பிடி.தியாகராய நகரில் முதல்வர் ஸ்டாலினின் தீரமிகு மடல்கள் நூல் வெளியிட்டு விழாவில் பேசினார் ஆ.ராசா.

மன்னிப்பு எதற்கு?

இந்த விழாவில் பேசிய ராசா, “கலைஞருக்கு பின்னாலும் திராவிட மாடலுக்கு மூப்பில்லை என்று சொல்லக்கூடிய மகத்தான தலைவரை பெற்றிருக்கிறோம்.

அதனால் தான் சங்கிகளுக்கு எல்லாம் கோவம். இப்போது என்ன சொல்கிறார்கள். ஆ.ராசா மன்னிப்பு கேட்கவேண்டும். இந்துக்களை எல்லாம் புண்படுத்திவிட்டார் என்கிறார்கள்.

மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு. மன்னிப்பே கேட்கமாட்டேன் என்று சொன்னால் அவனைவிட முட்டாள், வறட்டுத்தனமான அயோக்கியன் யாருமில்லை.

யார் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்கவேண்டும். நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் என்ன மன்னிப்பு என்று சொல்லவேண்டும்.  நான் என்ன சொன்னேன்.

இந்துக்களுக்கு யார் எதிரி

திருப்பதி நாராயணன் என்று ஒருவர். அவர், இந்து மதத்தில் சொன்னதெல்லாம் சரி தான். ஆனால் இப்போது அந்த இந்து மதம் இல்லை. அம்பேத்கர் இந்து சட்டம் கொண்டு வந்த பிறகு, ராசா சொல்வது பொருந்தாது. வேண்டுமென்றே சொல்கிறார் என்றார்.

நான் 2ஜியை பார்த்தவன். நான் ஏன் இந்து மதத்தை பற்றி பேசினேன். அதில் சனாதனத்தை பற்றி வருகிறது. இந்துக்களுக்கு ராசா எதிரியா. இங்கே அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் எதிரியா? இந்துக்களுக்கு யாரும் எதிரியில்லை.

இடஒதுக்கீடு யாருக்கு

1951 ல் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு என்று தமிழ்நாட்டில் கொண்டு வருகிறார் பெரியார். ஆனால் அது வேண்டாம் என்று 2 பிராமணர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னார்கள்.

யார் பிற்படுத்தப்பட்ட மக்கள். முக்குலத்தோர், கவுண்டர்கள், நாடார்கள், தேவர்கள், யாதவர்கள், வன்னியர்கள், செட்டியார்கள். இவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டது யார். பெரியார், அண்ணா.

எதிர்த்த இந்துக்கள்

60 சதவீதமாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று இருக்கும் அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று உரிமைகளை போராடி பெற்றுத்தந்த இயக்கம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும். தாழ்த்தப்பட்ட மக்கள் இதில் இடம்பெறவே இல்லை. அவர்களுக்கு 1946 லேயே ஆங்கிலேயரிடமே வாங்கிவிட்டார் அம்பேத்கர்.

இப்போது நான் பேசுவது எல்லாம் இந்து மதத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை பற்றிதான். இந்த இந்துக்களுக்கு தானே மத்திய அரசிடம் இட ஒதுக்கீடு கேட்டோம். இதை எதிர்த்தவர்கள் யார்? எதிர்த்தது பிராமணர்கள், ரஜ புத்திரர்கள், மேல்சாதியினர் தான். அவர்களும் இந்துக்கள் தான்.

இந்துவில் இரண்டு வகை

திராவிட மாடலுக்கு கீழ் இருக்கும் சாதாரண பிரஜையாக இந்த தேசத்துக்குச் சொல்கிறேன். பெரியாரை படித்தவன் என்பதால் சொல்கிறேன். அண்ணாவை அரசியல் ரீதியாக அறிந்தவன் என்பதால் சொல்கிறேன். கலைஞரோடு பயணித்தவன் என்பதால் சொல்கிறேன்.

திராவிட மாடலுக்கு தலைவனாக இருக்கக்கூடிய ஸ்டாலின் என்னும் தலைவனுக்கு பின்னால் இருக்கும் தொண்டனாக சொல்கிறேன், இந்துவில் இரண்டு வகை. அதை நான் சொல்லவில்லை. ஆளுநர் சொல்கிறார்.

சட்டத்தை மிதிக்கிறார் ஆளுநர்

தமிழ்நாட்டில் கவர்னராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி, இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த மாநிலத்தின் கவர்னராக இருந்து அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்தவர்.

அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று சொன்னீர்களே… இப்போது சனாதனம் எங்கிருந்து வந்தது. அரசியல் சட்டம் வந்தபிறகு மனுஸ்மிருதி இல்லை, சனாதனம் இல்லை என்று திருப்பதி நாராயணன் சொன்னார். சனாதனம் தர்மம் பேசும் இந்து வேறு, அரசியல் சட்டம் சொல்லும் இந்து வேறு.

ஆளுநர் சனாதனம் பேசுவது ஏன்?

சனாதனம் பேசும் இந்து ஆர்.என்.ரவி, சனாதனம் பேசும் இந்து சங்கராச்சாரி, சனாதனத்துக்கு வெளியே இருப்பது பாவம் அண்ணாமலை, பாவம் வானதி சீனிவாசன், பாவம் எடப்பாடி பழனிசாமி, பாவம் ஓ.பன்னீர்செல்வம்.

அரசியல் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்ட கவர்னர் சொல்லுகிறார் சனாதனம் தர்மம் தான் சிறந்தது என்று.

அரசியல் சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மை என்றால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் சனாதனம் எது என்று தெரியுமா உங்களுக்கு? தெரிந்துதானே பேசுகிறீர்கள்?

ஆரியர்களால் கொண்டு வரப்பட்டது

சனாதன தர்மம் புத்தகமே என்னிடம் இருக்கிறது. வெளியிட்டது யார் தெரியுமா? பனாராஸ் இந்து பல்கலைக் கழகம். இப்போது மோடி தொகுதி. 1916 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார்கள். (அந்த புத்தகத்தைக் காட்டுகிறார்) மோடி தொகுதி, வாரணாசி தொகுதி.

இங்கு தான் இந்துக்களுக்கு எல்லாம் ஆரம்பமாகிறது. சனாதனம் தர்மம் என்பது நம் பழைய தீர்க்கமான சட்டத்தின்படி, வேதத்தின் அடிப்படையில், புனித புத்தகத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இது ஆரியர்களால் கொண்டு வரப்பட்ட ஆரிய மதம். இதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

சனாதனத்தில் உள்ளதை சொன்னேன்

ஆரியம் என்றால் உன்னதமான இனத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர், ஒழுக்கமுடையவர்கள், இதற்கு முன்பிருந்தவர்களைவிட தோற்றத்தில் நன்றாக இருப்பவர்கள். இவர்களுக்கு தான் இந்த சனாதன தர்மம்.

சனாதன தர்மத்திற்கு எது அடிநாதம் என்றால், மனு ஸ்மிருதி, சாங்கலிக்தய ஸ்மிருதி, பிரசன்ன ஸ்மிருதி. இவர்களில் மனு என்பவர் தான் இந்துக்களுக்கான சட்டத்தை தந்தவர். இந்த மனு சட்டத்தில் தான், இத்தனாவது அத்தியாயத்தில், இப்படி எங்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன். நானா சொன்னேன்? நானாக எதையும் சொல்லவில்லை.

பெரியார் பேசியது

19-12-1973 ல் பெரியார் பேசியிருக்கிறார். சூத்திரன் என்ற பட்டம் ஒழியவேண்டும் என்று பிரச்சினையில் பெரியார் பேசியது… “கடவுளை வணங்காதீர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. கடவுள் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளவும் சொல்லவில்லை.

கடவுளை என்னவென்று சொல்லுங்கள் அதுபோதும். ஒன்றும் இல்லாமல் எந்த முட்டாளாவது சொன்னான் என்றால்  அரச மரம் கடவுள், வேப்பமரம் கடவுள், பல்லி கடவுள், ஓணான் கடவுள், பாம்பு கடவுள், நினைத்தது எல்லாம் கடவுள் என்னும் பைத்தியக்காரத்தனத்திற்கு நம்முடையே நேரம், பணம், அறிவு, நாசமாகிறது.

இழிவு ஒழிப்பு கிளர்ச்சி

ஆகவே தான் எந்த சங்கதி எப்படி ஆனாலும் நான் ஆரம்பித்துள்ள இழிவு ஒழிப்பு, சூத்திரன் என்ற பட்டம் போகவேண்டும் என்பதற்காக இழிவு ஒழிப்பு கிளர்ச்சி காரியம் நியாயமானது என்பதற்கு என்ன ஒரு உதாரணம் வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாளாகிறது.

8 ஆம் தேதி மாநாடு, ரகசியமாக எதுவுமில்லை. 10,000 பேருக்கு மேல் வந்தார்கள். 30 பத்திரிக்கையாளர்கள் வந்தார்கள். அனைத்து தீர்மானங்களும் எல்லா பத்திரிக்கையிலும் போடப்பட்டது. இந்தியா முழுவதும் பரவியது. இந்த 10 நாளில் ஒருவனாவது இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசினார்களா?

எவனுக்கு தைரியம் உண்டு

சூத்திரன் என்ற பட்டம் போகவேண்டும். இதை அழிக்கும் வரை ஒழியமாட்டேன் என்று போட்ட தீர்மானத்தை பற்றி யாரும் பேசவில்லை. நான் செய்தது எவ்வளவு நேர்மையான காரியம்.

எவனாலும் ஆட்சேபிக்க முடியவில்லை. எவன் தைரியமாக சொல்லுவான், நீ தேவிடியா மகனா தான் இருக்கனும் என்று எவன் தைரியமாக சொல்லுவான் என்று பெரியார் சொல்லுகிறார்.

நீ வேற நான் வேற

அவ்வளவு நேர்மையான காரியத்தை செய்திருக்கிறோம். இதற்கு பரிகாரம் செய்வதற்கு கிளர்ச்சி செய்வோமே, அதில் தான் நாம் யார் என்பதை காட்டவேண்டும். 5000, 10000 பேர் ஜெயிலுக்கு போவோம். தயாராக இருக்கிறோம். அவன் பரிகாரத்துக்கு வரவேண்டும்.

வரவில்லை என்றால் இதை சாக்காவது வைத்து, நீ போடாப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம். நீ 2000 மைல், வடக்கிருந்து வந்த, உன் பேச்சு சமஸ்கிருதம் எனக்கு புரியாது, என் பேச்சு உனக்கு புரியாது, உன் பழக்கம் வேற என் பழக்கம் வேற, உன் நடப்பு வேற என் நடப்பு வேற (என்று சொல்லிவிட்டு அய்யோ அம்மா வலிக்குதே என்று வயிற்றை பிடித்துக் கொள்கிறார்)

நீ கொடுத்த பட்டம் என்ன?

இதுதான் அவருடைய கடைசி பேச்சு. அய்யோ அம்மா என்று அரற்றுகிறார். பிறகு தன்னையே ஆசுவாசப்படுத்தி பேசுகிறார். மரியாதையாக போ, ரகளை வேணாம். நீ எதற்கு எங்களை ஆளுகிறாய், நீ இல்லை என்றால் தண்ணி இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா, நெல், கம்பு  இல்லையா, என்ன இல்லை எங்களுக்கு. உன்னால எங்களுக்கு என்ன ஆகுது. தேவிடியா மகன் என்ற பட்டத்தை தவிர வேறு என்ன கொடுத்த, நீ எங்களுக்கு பண்ண நன்மை என்ன?

மனுஸ்மிருதியில் என்ன பெயர்

இது எப்படி தப்பாகும் என்றார் பெரியார். இதுல ராசா எங்கிருந்து வந்தான். அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட  ஒரு ஆளுநர், அரசியல் சட்டத்தை காலிலே மிதித்துவிட்டு சனாதனம் தர்மம் தான் வேண்டும் என்று சொல்லுகிறபோது, அந்த சனாதன தர்மம் எதன் மீது கட்டப்படுகிறது என்றால் மனுஸ்மிருதி மீது கட்டப்பட்டு இருக்கிறது.

அந்த மனுஸ்மிருதியில் என்ன பெயர் என்பதை பெரியார் சாவதற்கு இரண்டு நாள் முன்பு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

சனாதனத்தை வீழ்த்தாமல் விடமாட்டோம்

இது பெரியார் மண் என்று எங்கள் தலைவர் சொல்லுகிறாரே? அப்போது அவர் பேசியதை பேசாமல் நீங்கள் பேசியதையா நான் பேசமுடியும்?

நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்ல. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படுகின்ற சனாதன தத்துவத்திற்கு எதிரிகள். அந்த சனாதனத்தை வீழ்த்தாத வரை அரசியல் சட்டம் வாழாது.

அரசியல் சட்டம் வாழா விட்டால் இந்தியா ஒரு நாடாக இருக்காது. எனவே அனைவரும் சேர்ந்து சனாதனத்தை எதிர்ப்போம். அதற்காக முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவோம் வாழ்க பெரியார்” என்று பேசி முடித்தார் ஆ.ராசா.

கலை.ரா

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்!

அம்பானியோட வேண்டுதல் என்ன? அப்டேட் குமாரு 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *