”வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், மீண்டும் பெரியார் குறித்து கருத்து பேசியுள்ளார்.
முதலில் பொங்கலன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று சீமான் அறிவித்தார்.
தொடர்ந்து பெரியார் குறித்து பேசுகையில், “பெரியாரை எதிர்த்தால், திராவிடத்தை எதிர்த்து பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று பேசினார்கள். ஆனால் திராவிடத்தை ஆதரித்த பெரியார், ஆரியத் தலைமையுடன் கடைசிவரை நட்புடன் இருந்தார். ஆரியத்தோடு கைகோர்த்து கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும், அண்ணாவும் கூறினர். பெரியார் மணியம்மையை திருமணம் செய்த போது ஆரியர் ராஜாஜியை துணைக்கு அழைத்தார். திமுகவை ஆரம்பித்து 1962 தேர்தலில் போட்டியிடும்போது ராஜாஜியின் கட்சியுடன் அண்ணா கூட்டணி வைத்தார். அப்போது ஆரிய கூட்டு இனித்தது? இப்போது பெரியாரை எதிர்த்தால் ஆரியம் உள்ள வந்துவிடும் என்பீர்களா?
வள்ளலார், அய்யா வைகுண்டரை விட என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். அம்பேத்கர், பெரியார் கொள்கைகள் ஒன்று என நிரூபிக்க என்னுடன் விவாதிக்க தயாரா? பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? பெரியாரை போற்றும் நீங்கள் ஏன் வள்ளலார், வைகுண்டரையும் போற்றவில்லை?
பெரியாரை போற்றும் திமுக அமைச்சரவையில் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இடம் உள்ளது? பெண்ணுரிமை பற்றி பேச என் தலைவன் பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. பாரதியார், வள்ளுவர் ஆகியோர் பெண்ணுரிமைக்காக பேசியுள்ளனர்.
என் மீது 7000 வழக்கு கூட போடுங்கள்? அம்பேத்கரையும், பெரியாரையும் ஒரே கோட்டில் நிறுத்தாதீர்கள். பெரியார் குறித்து விவாதிக்க நான் தயார். பெரியாரும் அம்பேத்கரும் இந்த சிந்தனையில் ஒத்து போகிறார்கள் என்பதை என்னிடம் நிரூபித்துக்காட்டுங்கள்.. நான் மன்னிப்பு கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது தானே? பெரியாரை ஆதரித்து பேசும் இத்தனை தலைவர்களில், யாராவது ஒருவர் பொதுத்தேர்தலில் பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்களை பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறீர்களா?
தடை செய்யப்பட்ட இயக்கம், பயங்கரவாதி என்று சொல்லும் என் தலைவனின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறேன். அப்படிதான் 36 லட்சம் வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்திருக்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் இருந்து மட்டுமே 2 அமைச்சரவை எடுத்து கொள்கிறீர்கள். இது எப்படி சமூகநீதியாகும். இது தான் சனாதனம். வீட்டில் இருக்கும் சனாதனத்தை ஒழிக்காமல் வெளியில் வந்து சனாதனத்தை ஒழிப்பேன் என்றால் வேடிக்கையாக இருக்கிறது. எதன் பொருட்டு எனக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டதோ, அதனை வைத்தே வகுத்து பிரித்து கொடுப்பதே சமூகநீதி” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்!
இப்படி ஒரு பதிலா? எஸ்.என்.சுப்ரமணியனை நோஸ்கட் செய்த ஆனந்த் மஹிந்திரா