இண்டிகோ விமானத்தின் சேவை மோசமாக இருந்ததாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அவரிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று (ஜூலை 26) மதியம் சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார்.
அப்போது தனக்கும் சக பயணிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தனது சமூக வலைதளங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று( ஜூலை 26) இரவு வெளியிட்டுள்ள பதிவில், “ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் சரியாக வேலை செய்யாததால் 6E7028 இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிகளுக்கும் வியர்த்தது.
கூடவே, ஜூலை மாத வெப்பமான வானிலையும் சேர்த்து நேற்று இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தது என்பது ரோலர் ஹோஸ்டர்களுக்கே சவால் விடும் அளவுக்கு இருந்தது.
குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்குவதால் எந்த பாதுகாப்பும் இருக்கக் கூடாது என்ற அர்த்தமில்லை. பயணிகளிடம் மரியாதை, கவனிப்பு, பாதுகாப்பு என சேவைகளில் சிக்கனம் கூடாது.
எங்கேயோ வேலை பார்த்துவிட்டு தங்கள் குடும்பத்தினரை பார்ப்பதற்கு வந்திருந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தவர்களும் இந்த விமானத்தில் இருந்தனர்.
பலர் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்தனர். சிலர் தங்களது இருக்கைகளை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். மேலும் சிலர் பைலெட்டை திட்டிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
ஆனால் இந்த வானிலையிலும் விமானி சரியாக விமானத்தை தரையிறக்கிவிட்டார். திருச்சியை தொழில் நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டால் பயணிகள் விரும்ப மாட்டார்கள்.
திருச்சி விமான நிலையத்தை பலர் பயன்படுத்தி வரும் நிலையில் உலக தரத்திலான சேவைகளை வழங்க வேண்டும்.
ஆனால் இண்டிகோ விமான நிறுவனமோ பயணிகள் பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் காட்டாமல் லாப நோக்கில் செயல்படுகிறது.
இண்டிகோவில் சிறந்த விமானிகள், பணிப்பெண்கள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் இவர்களுடைய ஏடிஆர் குழு விமானங்கள் தான் இப்படி மிகவும் மோசமாக உள்ளன. திருச்சி தொழில் நகரமாக வளர்ந்து வரும் நிலையில் இங்கு வரும் விமானங்களில் சிறப்பான சேவை அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதில் அளித்துள்ள இண்டிகோ நிறுவனம், “எங்கள் விமானத்தில் பயணம் செய்த போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.; உங்களை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதும் அது முடியவில்லை. இது தொடர்பாக பேச உங்களை தொடர்பு கொள்ள எங்களுக்கு நேரம் தர முடியுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அடுத்த பதிவில், “ நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி, உங்கள் பதிலை எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று இண்டிகோ நிறுவனத்தின் சமூக வலைதள மேலாளர் சத்யேந்திரா பதிவிட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திருவள்ளுவர் கூட கசந்துவிட்டாரா? : ஒன்றிய அரசை கண்டித்து ஸ்டாலின் வீடியோ!
முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்… தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் பதில்!