What merits Annamalai?- Kanimozhi question

அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?- கனிமொழி கேள்வி!

அரசியல்

தமிழக பாஜக தலைவராக இருக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இன்று (ஜூன் 5) கேள்வி எழுப்பி உள்ளார்.

கனிமொழி வெற்றி:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நாடு முழுவதும் நடைபெற்றது.

இதன் முடிவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் தாமரை மலராது

இந்நிலையில் இன்று (ஜூன் 5) சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய கனிமொழி, “தூத்துக்குடியில் நான் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கும், என்னை ஆதரித்து வாக்கு சேகரித்த கட்சியினருக்கும், என்னை வெல்ல வைத்த வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

What merits Annamalai?- Kanimozhi question

தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக காட்டியுள்ளது. தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த தேர்தல் முடிவுகள் மீது நிறைய பேர் அதிக கனவுகளோடு இருந்தனர். ஆனால், அவையனைத்தும் தற்போது தெளிவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றத்தை தான். அதைத்தான் நானும் எதிர்ப்பார்க்கிறேன்.

இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

அண்ணாமலை தலைவராக இருப்பது கட்சிக்கு நல்லதல்ல!

தொடர்ந்து அவர், “அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து, ‘கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்று கேள்வி கேட்பார். 2வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் தற்போது அண்ணாமலைக்கு பதில் சொல்கிறேன்.

தமிழகத்தில் ஒரு இடத்தைக்கூட பெறாத மற்றும் மக்களால் ஒருமுறைக்கூட தேர்ந்தெடுக்கப்படாத அண்ணாமலை, இந்த தோல்விக்கு பிறகு பாஜகவின் மாநில தலைவராக இருக்க என்ன தகுதி இருக்கிறது?

அண்ணாமலை தொடர்ந்து பாஜகவின் மாநில தலைவராக நீடிப்பது நிச்சயமாக அந்த கட்சிக்கு நல்லதல்ல.

அதிமுக கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்கு மக்கள் தற்போது தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி போட்டியிட்ட தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதல் 4, 5 சுற்றுகளில் அவருக்கு பின்னடைவு இருந்தது. இந்த தேர்தல் முடிவில் பாஜகவின் இந்த தோல்விக்கு மோடியே தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தார்மீக பொறுப்பேற்பது என்பது அரசியலில் ஒன்றும் புதிதல்ல. நினைத்தால் நிச்சயமாக செய்யலாம்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அப்செட்டில் மோடி… ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?

தேர்தலில் பெரும் பாய்ச்சல் : மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0