அமெரிக்க அரசியல் குழப்பத்தின் அடிப்படை காரணம் என்ன? பகுதி 2

Published On:

| By Minnambalam

பாஸ்கர் செல்வராஜ்  What is the root cause of America’s political chaos?

அமெரிக்காவில் இயங்கும் மூலதனம்… தொழிற்துறை மூலதனம், வங்கி மூலதனம் ஆகிய இரண்டும் இணைந்த நிதி மூலதனம். போட்டி முதலாளித்துவ காலத்தில் அமெரிக்காவில் முதலில் குடியேறி தொழிற்துறை மூலதனத்தைக் கைகொண்ட வெள்ளையின முதலாளிகள் தமக்கான தேசியத்தைக் கட்டமைத்தார்கள். ஏகாதிபத்திய கால உலகப்போர்களின்போது வங்கி மூலதனக்காரர்களான யூதயின முதலாளிகள் இவர்களுடன் சென்று கைகோத்துக் கொண்டு அமெரிக்க மூலதனத்தை நிதி மூலதனமாக மாற்றி அந்நாட்டை உலகை ஆளும் ஏகாதிபத்தியமாக மாற்றினார்கள்.

முதல் வகை முதலாளிகளுடன் வெள்ளையின இன மேலாதிக்க எண்ணத்துடனும் கிறிஸ்துவமத நம்பிக்கையுடனும் சென்றவர்கள் அவர்களின் குடியரசுக் கட்சியின் அரசியல் அடித்தளமாகவும் இவர்களால் ஒடுக்கப்பட்டு வந்த கறுப்பின, லத்தீன் அமெரிக்க மக்களுடன் யூத வங்கி முதலாளிகளின் குடியேற்றத்தின் பின் சென்ற பல்லின மக்கள் இவர்களின் ஜனநாயகக் கட்சியின் அரசியல் அடித்தளமாகவும் இருக்கிறார்கள்.

What is the root cause of America's political chaos?

இரு வகை மூலதனங்களையும் இதுவரை இணைத்து வைத்திருந்தது எது?      

போட்டி முதலாளித்துவ காலத்திய நிலக்கரியை எரித்து உருவாக்கும் நீராவியில் இயங்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக, எரிநெய்யில் (Petroleum) இயங்கும் இயந்திரங்கள் உருவானது. உற்பத்திக்கான தொழில்நுட்பமும் இயக்கத்துக்கான எரிநெய்யும் ஒருங்கே பெற்ற நாடாக அமெரிக்கா விளங்கியதோடு உலகப்போர் நடைபெற்ற ஐரோப்பாவில் இருந்து தள்ளியிருந்து அதற்கான ஆயுத தளவாட ஏற்றுமதி செய்து அன்றைய மூலதனமும் உலகப் பணமுமான தங்கத்தை அதனிடத்தில் குவித்தது.

இந்த வெள்ளையின முதலாளிகளின் தொழிற்துறை மூலதன பலமும் இதனுடன் இணைந்த யூதயின வங்கி மூலதன முதலாளிகளின் உலக நிதி நிர்வாகமும் ஒன்றின் தேவையை இன்னொன்று பூர்த்தி செய்தது. எண்ணெய் வளமிக்க பகுதிகளைக் கட்டுப்படுத்தி அமெரிக்காவைப் போலவே இயற்கை வளமும் தொழில்நுட்பமும் ஒருங்கே பெற்ற சோவியத்தையும் அதன் சார்பு நாடுகளையும் சர்வாதிகார முகாம் என்றும் தாங்கள் ஜனநாயக முகாம் என்றும் ஒரு கருத்தியல் பிம்பத்தைக் கட்டமைத்துத் தனிமைப்படுத்தி (இவர்களின் ஜனநாயகமும் அவர்களின் சர்வாதிகாரமும் யாருக்கானது என்பதை மறைத்து) உலகை இரண்டு முகாம்களாகப் பிளந்தது.

எதிர் முகாமில் இருக்கும் நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்ற செய்த போர்களின் தோல்வி ஜனநாயக முகாமினுள் முரணைத் தோற்றுவிக்கவே தங்கத்தின் மதிப்பைத் தெரிவிக்கும் டாலருக்குப் பதிலாக எண்ணெயின் மதிப்பைத் தெரிவிக்கும் டாலராக மாற்றி அந்த டாலரைத் தந்தால்தான் எரிநெய் என்னும் சூழலை உருவாக்கியும் பிளாசா ஒப்பந்தத்தை ஏற்படுத்தியும் தனது முகாமில் உருவான பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான முரணையும் அதற்குக் காரணமான தொழிற்துறை போட்டியையும் நசுக்கியது. எண்ணெய் விலையை அனுதினமும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்கி டாலர் மதிப்பை மாற்றி, சொந்த நாட்டு மக்களையும் மற்ற நாட்டு மக்களின் உழைப்பையும் சுரண்டியது.

சொந்த அணியின் போட்டியை நசுக்கினாலும் எதிரணியான சோவியத்துடனான தொழில்நுட்ப, ஆயுத, எண்ணெய் ஆதிக்கச் சந்தைப் போட்டி தொடர்ந்தது. அந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய தேவையில் தகவல் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து வெற்றிபெற்று அந்த முகாமில் இருந்த நாடுகளின் சந்தையைக் கைப்பற்றியது. எழுபதுகளில் சீனாவின் சந்தைக்குப் பதிலாகத் தொழிற்துறை உற்பத்திக்கான தொழில்நுட்பங்களைக் கொடுத்தும் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகான ரஷியாவின் எரிபொருள் உற்பத்தியில் பங்கெடுத்தும் அவர்களை டாலர்மைய வணிகத்துக்குள் கொண்டுவந்து உலகை ஆளும் ஒற்றை வல்லரசானது. இந்தத் தங்கம் மற்றும் எண்ணெயின் மதிப்பைத் தெரிவிக்கும் காலத்திய தொடர் தொழிற்துறை உற்பத்திப் பெருக்கமும், சந்தை, வணிக விரிவாக்கமும் இரு வகை மூலதனங்களும் இணைந்த நிதிமூலதனத்துக்குள் எழுந்த முரண்களைக் கலைந்து முன்னோக்கிச் செல்ல வைத்தது.

போட்டிக்கு ஆளின்றியும் எவர்க்கும் எதிர்த்து நிற்கும் திறனின்றியும் போகவே ஏகபோக மமதையில் உருவாக்கி வைத்திருந்த தொழிற்துறை உற்பத்தி சங்கிலியை உருக்குலைய விட்டுவிட்டு பொருள்களை மலிவாகச் செய்து தரும் ஆசிய நாடுகளுக்கு மாற்றி அப்பொருள்களின் வணிகத்தைக் கட்டுப்படுத்தும் உலக நிதிமூலதன வணிக மையமாக மாறியது.

இப்போது அமெரிக்க நிதி மூலதனத்துக்கு என்ன பிரச்சினை? 

டாலர் மதிப்பை உயர்வாக வைத்து ஆசிய நாடுகளில் இருந்து மலிவாக இறக்குமதி செய்து விற்கும் அமெரிக்க சேவைத்துறை வணிக நிறுவனங்களின் லாபம் அதிகம். ஆனால், உண்மையான பொருள் செல்வத்தை உருவாக்கி தொழிலாளிகளுக்கு வாழ்வும் வருமானமும் தரும் தொழிற்துறை சுருங்கி தொழிலாளர்கள் தமக்கான பொருளை அதிக விலை கொடுத்து நுகரும்போது அவர்களின் சேமிப்பும், வாங்கும் திறனும் இல்லாமல் போகிறது. அதற்குத் தீர்வாகக் கொடுக்கப்பட்ட கடன் அட்டைகளைக் கொண்டு நுகர்ந்த அமெரிக்கத் தொழிலாளர்கள் கந்துவட்டி வங்கிக் கடன்காரர்களிடம் கடனாளி ஆகியிருக்கிறார்கள்.

உலக நாடுகளின் உற்பத்திக்கான இடுபொருள்களையும் தொழில்நுட்பங்களையும் விலை உயர்வான டாலரில் விற்கும் இந்த வணிக நிறுவனங்கள் அங்கே மலிவான உள்ளூர் நாணயத்தில் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுத்து பொருளை உற்பத்தி செய்கின்றன.விற்கும்போது மீண்டும் அதிக மதிப்பு கொண்ட டாலரில் விலையை நிர்ணயித்து அதிக லாபத்தில் விற்கின்றன. இதனால் உலக நாட்டு மக்களும் சொந்த நாட்டு மக்களும் இவற்றை அதிக அளவில் வாங்கி நுகரும் வாய்ப்பின்றி போகிறது.

டாலரில் இடுபொருளை வாங்கி பொருளை உற்பத்தி செய்து மலிவான ரூபாய் உள்ளிட்ட நாணய மதிப்பில் இருந்து வலுவான டாலரில் மாற்றி வெளிநாடுகளுக்கு விற்று லாபம் ஈட்டி வாங்கிய டாலர் கடனை அடைக்க முடியாமல் பெரும்பாலான உலக நாடுகளும் கடனாளி ஆகியிருக்கின்றன.

அதேசமயம் இந்த நிதி மூலதனம் தொடர்ந்து இயங்கி லாபத்தை ஈட்ட வேண்டுமானால் பொருள்களின் உற்பத்தி பெருகி அவற்றுக்கான சந்தை விரிந்துகொண்டே இருக்க வேண்டும். உலக மக்களோ, இந்தக் கந்துவட்டிக் கும்பலிடம் கடன்பட்டு வாங்க வழியற்றவர்களாகி விட்டார்கள். ஆக, சொந்த மக்களையும் உலகையும் கடனாளி ஆக்கியிருக்கும் டாலர் நிதி மூலதனத்தின் முக்கிய முதல் பிரச்சினை குறுகிப்போன சந்தை.

இதுவரையிலும் டாலர் மதிப்பை உயர்வாக வைத்தும், அவ்வப்போது அதன் மதிப்பைத் திரித்தும் நிதி மூலதனம் லாபத்தைப் பெருக்க முக்கிய காரணியாக இருந்தது உற்பத்திக்கான மூலப்பொருள்கள், எண்ணெய் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த முற்றொருமை. அவர்கள் சொல்வதுதான் இப்பொருள்களின் விலை என்றால் அதனடிப்படையில் அந்த விலையைத் தெரிவிக்கும் டாலரின் மதிப்பும் தேவையும் கூடும் குறையும்.

கடன் கொடுத்து உற்பத்தி சுழற்சியைத் தொடங்கும்போது டாலர் மதிப்பைக் குறைவாகவும் உற்பத்தி பெருகி வசூலிக்கும் காலத்தின்போது மதிப்பைக் கூட்டியும் லாபத்தைக் கறந்து வந்தார்கள். இப்போது உற்பத்திக்கான எண்ணெய் மற்றும் கனிம மூலப்பொருள்களைப் பெருமளவில் கொண்டிருக்கும் ரஷியாவும், அவற்றைச் சுத்திகரித்து மூலதனப் பொருள்களாகவும், உற்பத்தியில் ஈடுபடுத்தி மதிப்பு கூட்டப்பட்ட நுகர்பொருள்களாகவும் விற்கும் சீனாவும் கைகோத்துக் கொண்டு டாலர் அல்லாத சொந்த நாணயத்தில் வணிகம் செய்கின்றன. மற்ற மேற்கு, மத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் மற்ற கண்ட நாடுகளையும் அத்திசையில் நகர்த்துகின்றன.

கூடவே, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுக்கு இணையாகவும், சில துறைகளில் அதனைத் தாண்டியும் சீனா வளர்ந்து தற்சார்பை எட்டியிருக்கிறது. இது உற்பத்திக்கான தொழில்நுட்பம், எரிபொருள், மூலப்பொருள்களின் அமெரிக்கா கொண்டிருந்த முற்றொருமையை உடைத்து விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை இழக்கச் செய்திருக்கிறது. அது பொருள்களின் விலைகளை மாற்றி டாலரின் மதிப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றலின்றி அதன் மதிப்பை வீழச் செய்கிறது.

அது டாலர் மதிப்பின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கும் பங்குச்சந்தையைச் சரிக்கப் பார்க்கிறது. அதனைத் தடுக்க பணத்தை மேலும் வெளியிடுவது மென்மேலும் டாலர் மதிப்பைக் குறைக்கிறது. அந்த மதிப்பிழப்பை ஈடுசெய்ய பொருள்களின் விலையை உயர்த்துவது விலைவாசி உயர்வைக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, அமெரிக்க மூலதனத்தின் இரண்டாவது பிரச்சினை தொழில்நுட்பம், எரிபொருள், மூலப்பொருள்களின்மீது கொண்டிருந்த முற்றொருமை உடைவது.

மூன்றாவது மூலப் பிரச்சினை உற்பத்தியில் ஈடுபடாமல் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உலக உற்பத்தியின் மீது ஊகபேர வணிகம் செய்யும் பணப் பெருச்சாளிகளின் பணக்குவியல் (Hoard). அடிப்படையில் பொருள்களின் மதிப்பை அளக்கவும் (Measure of value), பரிவர்த்தனை செய்து கொள்ளவும் (Medium of exchange), செல்வக்குவிப்பாகவும் (Hoard), கொடுப்பனவாகவும் (Means of payment), உலகப்பணமாகவும் (Universal currency) விளங்கும் இந்தப் பணத்தின் மதிப்பு நிலையானது அல்ல; சார்புத்தன்மை (Relative) கொண்டது.

டாலரை தங்கம், எரிநெய் என ஏதேனும் ஒன்றைச் சார்ந்து மதிப்பிடும்போது அந்தச் சரக்கைப் பொறுத்து அதன் மதிப்பு மாறும். இந்தச் சரக்குகளின் மதிப்பு இவற்றை உருவாக்கச் செலுத்தப்படும் மனித உழைப்பின் அளவைப் பொறுத்து மாறும். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒவ்வொரு பொருளையும் உருவாக்கத் தேவைப்படும் மனிதரின் நேரத்தைக் குறைத்து அப்பொருள்களின் உற்பத்தியைக் கூட்டும். அப்படிக் கூட்டும்போது அதில் செலவிடப்படும் மனித உழைப்பு குறைந்து அது மலிவாகும். எனவே பணத்தின் மதிப்பும் உற்பத்தித்திறன் பெருக்கமும் எதிர்மறை தொடர்பு கொண்டது (Inversely proportional).

அமெரிக்கா, சீனா இரண்டுமே செய்யறி தொழில்நுட்பத்தைக் (Artificial Intelligence) கண்டறிந்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் அதனைக் கொண்டு சேவைத்துறை சார்ந்த செயலிகளை உருவாக்கி சந்தைப்படுத்துகின்றன. சீனர்களோ சிக்கலான சில்லுகள், மின்கல வண்டிகள், திறன்பேசிகளின் உற்பத்தித்திறன் பெருக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த வேறுபாட்டுக்குக் காரணம், பொருள் உற்பத்தியைப் பெருக்கினால் பொருள்கள் மலிவாகி சந்தை விரியும். ஆனால், அதன் மதிப்பு வீழும். டாலர் பணக்குவியல் அடிப்படையில் இந்தப் பொருள்களின் மதிப்பையும் எண்ணெயின் மதிப்பையும் தெரிவிக்கக் கூடியது. அதன்மீது பந்தயம் கட்டி விளையாடுவது. அதனைச் சந்தையில் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற சூழலாலும் சில பொருள்களை இதைக் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற கட்டாயத்தாலும் மற்றவர்களால் குவிக்கப்பட்டது.

இப்போது டாலர் இல்லாமலும் எரிநெய் வாங்கலாம் என்ற சூழலும், அது லாபம் கொழிக்கும் என்று பந்தயம் கட்டிய பொருளின் மதிப்பும் வீழும்போது இந்தக் காகித ரசீதின் மதிப்பு காற்றில் கரைந்த பெருங்காயமாகக் கரைந்து ஆவியாக வேண்டும். எனவே, சீனர்களைப்போல நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க விடாமல் தனது பணக்குவிப்பின் மதிப்பைக் குறையாமல் பாதுகாக்க முனைவது அமெரிக்க உற்பத்திக்கு மட்டுமல்ல; உலக உற்பத்திப் பெருக்கத்துக்கே தடையாக நிற்கிறது.

நிதி மூலதனம் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினை இதற்குள் இணைந்திருக்கும் வங்கி, தொழிற்துறை மூலதனங்களுக்கு இடையில் எப்படி முரணைத் தோற்றுவிக்கிறது? இவ்விரு பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசியல் கட்சிகளும் என்ன அரசியல் தீர்வை முன்வைக்கின்றன? அது எப்படி டிரம்பை கொலை செய்யத் தூண்டுமளவுக்கு எதிர்த்தரப்பைக் கொண்டு சென்றது?  

அடுத்த கட்டுரையில் காணலாம்…

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

கட்டுரையாளர் குறிப்பு  

What is the root cause of America's political chaos? Part 2 by Baskar Selvaraj Article in Tamil

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

விவசாயம், மருத்துவத் துறையில் தன்னிறைவு.. நான்கு சுழற்சிகளை முன்வைத்த வாதங்கள்! : பகுதி 5

வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு : 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி இல்லாத கேபினட் கூட்டம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! 

”1.50 கோடி ரூபாய் பெற்றேனா? உண்மை தெரியாம எழுதாதீங்க” : பாரிஸ் ஒலிம்பிக்கில் தோற்ற பிரபல வீராங்கனை ஆதங்கம்!

அடுத்த ஒலிம்பிக் குள்ளயாவது தீர்ப்பு வந்துருமா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share