பாஸ்கர் செல்வராஜ்
உற்பத்தித் தொழில்நுட்பங்களைச் சீனா கைப்பற்றியதைத் தொடர்ந்தும் எரிபொருளை டாலர் அல்லாத நாணயத்தில் சீனாவுக்கு ரசியா விற்க முன்வந்ததை அடுத்தும் இவற்றில் அமெரிக்கா கொண்டிருந்த முற்றோருமையும் டாலர்மைய உலக வர்த்தகமும் உடைந்து பல நாணய வர்த்தகம் நடக்கும் பல்துருவ உலகம் உருவாக ஆரம்பித்தது.
இதனை முன்னெடுக்கும் சீன-ரசிய நாடுகளை வர்த்தக ரீதியாகத் தனிமைப்படுத்தி உலக நாடுகளைத் தன்னுடன் பிணைத்திருக்க முற்பட்டது அமெரிக்கா. பெரும்பாலான உலக நாடுகளை ஒரே சாலை ஒரே மண்டல (one road one belt) உள்கட்டமைப்பு வர்த்தக இணைப்புத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டு அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் அரசியலைச் செய்து வந்தது சீனா.
பாலஸ்தீனப்போர் உலக மாற்றத்தின் ஒரு அங்கம்
இருபக்கமும் ஊசலாடிய இந்தியாவைச் சீனாவுடனான எல்லைப் பிரச்சனையின் மூலம் தன்பக்கம் கொண்டுவந்த அமெரிக்கா இதேபோல ஊசலாடிய ஐரோப்பிய நாடுகளை உக்ரைன் பதிலிப்போரின் மூலம் தன்னுடன் வலுவாக இணைத்தது. ஆனால் அதன்மூலம் ரசியாவை வீழ்த்தி சீனாவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தோல்வியுற்றது. அது மாற்று நாணய வர்த்தகத்தை மேலும் ஊக்குவித்து உலக உடைப்பை இன்னும் தீவிரப்படுத்தியது. எரிபொருள் உற்பத்தியின் மையமாகவும் ஆசிய-ஐரோப்பிய நிலவழி வர்த்தகத்தின் இதயமாகவும் விளங்கும் மேற்காசிய நாடுகள் சீன-ரசிய அணியின் பக்கம் சாய ஆரம்பித்தன.
ரசியா மேற்காசிய நாடுகளைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டு எரிபொருள் வர்த்தகத்தின் தலைமையாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. மாபெரும் எரிபொருள் கையிருப்பையும், நிலவழி ஆசிய-ஐரோப்பிய இணைப்பிற்கு இன்றியமையாத இடத்திலும் இருந்துகொண்டு இராணுவ தொழில்நுட்ப சுயசார்பையும் எட்டி இருக்கும் ஈரான் இந்தப் பிராந்தியத்தின் தலைமையாக தன்னைக் கட்டமைத்துக் கொண்டது. தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி ஈரானை சவுதியுடன் அரச உறவுகளைப் ஏற்படுத்த வைத்து சமரசம் செய்து வைத்த சீனாவின் இணைப்புச்சாலை-இரயில்-கடல்வழித் திட்டங்கள் இந்தப் பகுதியில் வேகமெடுத்தன.
எதிரணியுடனான மேற்காசிய நாடுகளின் இணைவைத் தடுக்க இந்தப் பகுதியில் இருபக்கமும் ஊசலாடும் சவுதியை இஸ்ரேல் வழியாக இந்தியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பொருளாதாரத் திட்டத்திலும் (INSTC) துருக்கியை இஸ்ரேலின் எரிவாயுவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்திலும் (Israel-Turkey Energy corridor) இணைத்து இஸ்ரேலை மையப்படுத்தி இந்தப் பகுதியைத் தன்னுடன் இணைத்திருக்கும் வேலையில் இறங்கியது அமெரிக்கா. சீன-ரசிய-ஈரானிய அணியின் இணைப்பு முயற்சிக்கும் ரசிய-ஈரான்-கத்தார் நாடுகளின் எரிவாயு வணிகக் கூட்டுக்கும் (cartel) எதிரான இந்த நகர்வை இவர்கள் தடுக்கவேண்டிய சூழல். பாலஸ்தீனர்களுக்கான தனிநாடு உருவாவதற்கு முன்பே இந்தப் பகுதியின் முக்கிய இசுலாமிய நாடுகளான சவுதியும் துருக்கியும் இஸ்ரேலுடன் இணக்கமாகச் சென்றால் பாலஸ்தீனர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு சொந்த மண்ணில் இரண்டாம்தர மக்களாக வாழநேரிடும் சூழல் அவர்களுக்கு.
தாக்குதலினால் மாறிய உலக அரசியல்
இந்த இக்கட்டான சூழலில்தான் ஈரானின் எதிர்ப்பியக்கத்தில் (axis of resistance) இணைந்திருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிலைகளின் மீதான தாக்குதலைத் தொடுத்தது. அதனைத் தொடர்ந்து அடிபட்ட சிங்கத்தைத்போல இஸ்ரேல் பழிவாங்கும் குரூர வஞ்சத்துடன் காசா பகுதியைத் தரைமட்டமாக்கி பொதுமக்களைக் கொன்று வருவது மேற்காசிய இசுலாமிய மக்களிடம் சியோனிச அரசின் மீதும் அவர்களுக்கு ஆயுதம் தந்து அரசியல் ரீதியான அழுத்தத்தில் இருந்து காத்து ஆதரித்து வரும் அமெரிக்கா மீதும் கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் மீது குண்டுகளைவீசி போர்க்குற்றங்களை இழைத்து வருவதை மேற்குலக அரசுகள் வேடிக்கை பார்ப்பதோடு அதனைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையென (right to self-defense) நியாயப்படுத்தவும் செய்யும் நிலையில் அந்நாடுகளின் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு தமது கண்டனங்களைப் பதிவு செய்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெகுமக்களின் அரசியல் நிலைப்பாடும் கத்தாருடனான நெருக்கமான பொருளாதார பிணைப்பும் துருக்கி அமைச்சர் இஸ்ரேலுக்கு எரிபொருள் ஒப்பந்த பேச்சுவார்தைக்கு செல்வதைக் கைவிட வைத்ததோடு பின்னர் அந்நாட்டின் அதிபர் அந்தத் திட்டத்தையே கைவிடுவதாகவும் அறிவிக்க வைத்திருக்கிறது. சவுதி அரசும் அணுஆயுத பாதுகாப்புக்குப் பதிலாக இஸ்ரேலுடன் இணங்கி இயல்பான அரச உறவுகளை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
சவுதி முழுவதுமாக இதனைக் கைவிடவில்லை என்றாலும் சீன-ரசிய-ஈரானிய அணி இஸ்ரேலை மையப்படுத்திய அமெரிக்காவின் மாற்று பொருளாதார நகர்வைத் தடுத்து இசுலாமிய நாடுகளை வலுவாக ஒன்றிணைப்பதில் கிட்டத்தட்ட வெற்றிபெற்று இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இதனைச் சாதிக்கக் காரணமான இஸ்ரேலின் மீதான தாக்குதலை நடத்திய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தனது குறிக்கோளான தனிநாடு பெறுவதில் வெற்றி பெற்றிருக்கிறதா?
பாலஸ்தீனர்களின் அரசியல் வெற்றி
ஈரான்-சவுதி சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட உடனே அதனை முன்னின்று நடத்திய சீனா இஸ்ரேல், பாலஸ்தீனப் பிரச்சனையையும் இருநாடுகள் உருவாக்கத்தின் அடிப்படையில் தீர்வுகாண உதவத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அப்போது யாரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அதனைக் கண்டிக்க மறுத்ததோடு அதே 1967ஆம் ஆண்டு எல்லையை அடிப்படையாகக் கொண்ட இருநாடுகள் தீர்வை முன்வைத்து தீர்வுகாண வலியுறுத்தியது.
சொல்லி வைத்தாற்போல ரசியாவும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஒருபடி மேலேசென்று அந்நாட்டின் ஐநா தூதர் “ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேலுக்குத் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமையில்லை” என்ற சர்வதேச சட்டத்தை முன்வைத்துப்பேசி மேற்குலக வாதத்தைத் தவிடுபொடி ஆக்கினார். பாலஸ்தீன இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ரசியா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களின் மீது இஸ்ரேலிய போர்விமானங்கள் தாக்குவதைத் தடுக்காமல் மறைமுக ஆதரவு அளித்து வந்த ரசியா இம்முறை இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் காரணம் உக்ரைன் போரில் இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு, ரசியாவின் ஐரோப்பிய சந்தையை அவர்களுடன் சேர்ந்துகொண்டு பகிர்ந்துகொள்ள முற்படுவது ஆகியவை தவிர இதற்கு வேறு காரணம் இருக்க முடியாது.
இஸ்ரேல், ஈரான், ஹமாஸ் தவிர உலகின் அனைத்து நாடுகளும் இருநாடுகளை உருவாக்குவதுதான் தீர்வு என தாக்குதலுக்குப் பிறகு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன. இப்படி பாலஸ்தீன உரிமையை குறைந்தபட்சம் உலக நாடுகள் உறுதிசெய்ய முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான். ஆனால் அது நடக்கும் சாத்தியம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
இருநாடுகள் தீர்வா? இனச்சுத்திகரிப்பா?
அரபு நாடுகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் எரிபொருள் இயற்கை வளத்தைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்த இந்தப் பிராந்தியத்தின் ஏகாதிபத்திய அடியாளாக வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்ரேலின் இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சி உச்சமாகவும் வலுவான அதன் இராணுவம் வெல்லமுடியாததாகவும் (invincible) கட்டமைக்கப்பட்டது.
அதன் அரசியல், நிர்வாகம் முன்னாள் இராணுவத் தலைமைகளால் நிரம்பியதாகவும் யூதமதம் மக்களை மடமையில் ஆழ்த்தி இனவெறியூட்டி அராபிய வெறுப்பரசியலின் மூலம் ஒருங்கிணைக்கும் பிற்போக்கான அரசியல் கருவியாகவும் விளங்கி வருகிறது. இந்த ஆதிக்க பொருளாதார அரசியலுக்கு அடிப்படையாக இருப்பது வெல்லமுடியாத இராணுவ மேலாதிக்கம் வழங்கும் அதீத பாதுகாப்பு உணர்வும் யூத மேலாதிக்க இனமதவெறியும்.
இஸ்ரேல் மீதான ஹமாசின் வெற்றிகரமான தாக்குதல் இந்தப் பாதுகாப்பு உணர்வையும் இறுமாப்பையும் உடைத்து இந்தக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. தாக்குதல் நடந்தவுடன் இஸ்ரேலில் இருந்து வெளியேற யூதர்கள் விமான நிலையத்தில் குவிந்தது அதனை உறுதிபடுத்துவதாக இருந்தது.
உடைந்து சிதறிய அந்த ஆதிக்க பிம்பத்தையும் இழந்த பாதுகாப்பையும் மீட்க 1. இந்தத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பைக் கருவறுப்பது 2. எதிர்காலத்தில் இப்படியான தாக்குதல் நடக்காததை உறுதிப்படுத்த அந்த இனத்தையே அதனிடத்தில் இருந்து வெளியேற்றுவது ஆகிய இருகுறிக்கோளுடன் போரை அறிவித்து குண்டுமழை பொழிந்து அந்தப் பகுதியைத் தரைமட்டமாகியது இஸ்ரேல்.
முதலில் வாழ்வதற்கு அடிப்படையான நீர், உணவு, மருந்து, எரிபொருட்கள் காசா பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்துக் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல நாடகமாடி நைச்சியமாக அவர்களைத் தெற்கு நோக்கி இடம்பெயரச் சொன்னது. இடம்பெயர்ந்தால் திரும்பிவர இஸ்ரேல் அனுமதிக்காது என்று தெரிந்த பாலஸ்தீனியர்கள் நகரவில்லை.
இது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) நடவடிக்கை என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தில் குறைந்தபட்ச நிவாரணப் பொருட்கள் தெற்குப் பகுதிக்குள் செல்ல அனுமதித்துக் கொண்டே வடக்கின் முக்கிய நகரான காசாவை சுற்றிவளைத்து அந்தப் பகுதிக்கு இவை செல்லவிடாமல் தடுத்து கடும் தாக்குதலை நடத்தியது. இதன்மூலம் மக்களை வேறுவழியின்றி வெளியேற வைத்துத் தனது முதல் இலக்கில் பாதி வெற்றி பெற்றியைப் பெற்றது.
மீதி வெற்றி அங்கிருக்கும் போராளிகளை முற்றிலுமாகத் துடைத்தெறிவதில் இருக்கிறது. பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்ட தெற்குப் பகுதியையும் தாக்கப்போவதாக இஸ்ரேலிய நிர்வாகம் சொல்கிறது. எகிப்தின் சினேய் பகுதியில் பாலஸ்தீன அகதிகளைக் குடியேற்ற அந்நாட்டின் கடன்களைத் தள்ளுபடி செய்ய யாரும் தங்களுடன் பேசவில்லை என்று எகிப்தின் அமைச்சர் கூறுகிறார்.
ஒருபக்கம் உலக நாடுகள் இருநாடுகள் தீர்வை முன்வைக்கும்போது மறுபக்கம் இஸ்ரேல் அந்த இனத்தையே அந்தப் பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேற்றி சுத்திகரிக்கும் வேலையில் ஈடுபடுகிறது. இந்த இனச்சுத்திகரிப்பு குறிக்கோளிலும் ஹமாஸ் இயக்கத்தைக் கருவறுப்பதிலும் இஸ்ரேல் வெற்றிபெறுமா? ஈரான் எதிரப்பியக்கமும் உலக நாடுகளும் அதனை அனுமதித்து வேடிக்கைப் பார்க்குமா? இதையெல்லாம் மீறி இந்தப் போரின் இறுதியில் பாலஸ்தீன நாடு உருவாகும் சாத்தியம் இருக்கிறதா? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இஸ்ரேல் – ஹமாஸ் : தாக்குதல் நோக்கமும் அரசியல் வியூகமும்!-3
அதிர்ச்சி ஓலத்தில் குமைந்த ஆதிக்கவாதிகள் ..-2
ஹமாஸ் தாக்குதலின் நோக்கமென்ன?-1