பாஸ்கர் செல்வராஜ்
அமெரிக்கா உக்ரைனைப் பதிலியாகக் கொண்டு ரசியாவுடன் நடத்தி வரும் போரில் மேற்குலகின் ஆயுதக் கையிருப்பு தரையைத் தட்டியது; அமெரிக்காவின் கடன் உச்சத்தைத் தொட்டு உக்ரைன் போருக்கு நிதி ஒதுக்குதலில் ஏற்பட்ட சிக்கலில் அவைத்தலைவர் கெவின் பதவியிழந்து அலுவல்கள் முடங்கியது; இஸ்ரேலிய தீவிர வலதுசாரி அரசின் குடியுரிமை, அரசியல் அதிகார சட்டத்திருத்த முயற்சியால் அந்நாட்டில் போராட்டம் வெடித்து குழப்பத்தில் சிக்கியது ஆகிய சாதகமான அரசியல் இராணுவ சூழலைத் துல்லியமாகக் கணித்து ஹமாஸ் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி ஆரம்பகட்ட வெற்றியைப் பெற்றது.
இதன்மூலம் 1. இஸ்ரேலின் செருக்கைச் சிதைத்து உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது 2. இஸ்ரேலியக் குடியேறிகளின் அதீத பாதுகாப்பு உணர்வைக் கேள்விக்குள்ளாக்கி அவர்களின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை உடைத்தது 3. ஓராண்டுக்கும் மேலாக அமைதியாகப் போராடிய பாலஸ்தீனியர்களின் நீதிக்கான போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்ட உலகத்தைத் தன்பக்கம் திருப்பி தனக்கான நீதியைக் குறித்து பேசவைத்தது.
இந்த எதிர்பாராத தாக்குதலால் இஸ்ரேலிய அரசு அதன் மக்களிடம் நம்பிக்கை இழந்து இந்தப் பிராந்தியத்தில் இராணுவ வலிமையின் மூலம் நிலைநாட்டி இருந்த ஆதிக்கமும் கேள்விக்குள்ளானது. அதோடு ஹமாஸ் பிடித்துச் சென்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியப் பணயக் கைதிகளை எதிரியுடன் பேசி காப்பாற்றிக் கொண்டுவர வேண்டிய தார்மீகக் கடமையும் அதன்முன் நின்றது. பேச்சுவார்த்தை நடத்தி பிணைக்கைதிகளை மீட்டால் இஸ்ரேல் இந்தப் பகுதியில் நிலைநாட்டி இருக்கும் ஆதிக்கம் கேள்விக்குள்ளாகி நெதன்யாகு இனமத வெறியர்களின் ஆதரவை இழந்து பதவியிழப்பார். பிணைக் கைதிகளைக் கைவிட்டு தாக்குதல் நடத்தினால் அது உலகின் கவனத்தை ஈர்த்து பாலஸ்தீனர்களின் சொந்த நாட்டு உரிமைப் பிரச்சனை உலக அரங்கின் முன்னால் வந்துவிடும். இரண்டில் எது நடந்தாலும் அது பாலஸ்தீனர்களுக்கு வெற்றியாகவே முடியும் வகையான நகர்வைச் செய்து இஸ்ரேலைச் திரிசங்கு நிலைக்குத் தள்ளியது ஹமாசின் தாக்குதல்.
பலனாளி பாலஸ்தீனம் மட்டுமா?
எதிர்பார்த்தது போலவே மதவழி தேசியவெறியைக் கொண்டு ஆட்சிக்கு வந்த நெதன்யாகுவின் அரசு தன்னலனை முன்னிறுத்தி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி காஸா பகுதியை தரைமட்டமாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று தன் வஞ்சத்தைத் தீர்த்து வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பதிலாகப் பதிலடி தாக்குதலைத்தான் நெதன்யாகுவின் அரசு தேர்ந்தெடுக்கும் என்று ஹமாஸ் அமைப்பு நிச்சயம் கணித்திருக்கும். அதில் தானும் தனது மக்களும் கொல்லப்படும் ஆபத்து இருப்பதை அறிந்தே இந்தத் தாக்குதலில் ஹமாஸ் இறங்கி இருக்கிறது என்று முடிவுக்கு வந்தால் ஏன் இப்படியான வாழ்வா? சாவா? முடிவுக்கு வந்தது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
இந்தத் தாக்குதல் நடந்த விதத்தைப் பார்க்கும்போது இது நீண்டகால தயாரிப்புத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியெனில் இந்த அரசியல் சூழலைத் தாக்குதலுக்கு ஹமாஸ் தேர்ந்தெடுக்கக் காரணம் பாலஸ்தீன விடுதலை மட்டும்தான் என்று எண்ண முடியவில்லை. தாக்குதலுக்குப் பிறகு ஈரான் பம்பரமாகச் சுழன்று அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதேவேளை இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் தனது மொத்த ஆதரவாளர்களையும் இதில் ஈடுபடுத்துவேன் என்று மிரட்டி இஸ்ரேலை காசாவுக்குள் நுழைந்து தாக்காமல் தடுக்க முயன்றது அந்நாட்டுக்கும் இதில் பங்கும் பலனும் இருக்கிறது என்றே எண்ண வைக்கிறது. அதேபோல தாக்குதலுக்குப் பிறகான உலக நாடுகளின் நகர்வுகளும் இரு எதிரெதிர் துருவமாக இருப்பது எதேச்சையானது என்றும் சொல்லமுடியாது. ஆகவே இந்தத் தாக்குதலின் முழுபரிமாணத்தையும் உலக அரசியல் பொருளாதார நிகழ்வுகளின் தொடர்ச்சியாக காண்பதன் மூலமே சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
இன்றைய உலக அரசியலின் மையம்
இதுவரையிலான உலக அரசியல் பொருளாதாரம் உற்பத்திக்கு அடிப்படையான மூலதனத்தை உருவாக்கி நிர்வகிக்கத் தேவையான மின்னணு தொழில்நுட்பம், எரிபொருளில் அமெரிக்கா கொண்டிருந்த முற்றோருமையால் டாலர்மைய ஒற்றைத்துருவ உலகமாக இருந்தது. டாலர் உலகில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்கும் அளவியாகவும் அவற்றின் பரிவர்த்தனைக்கான ஊடகமாகவும் விளங்கி வந்தது. இப்போது மின்னணு தொழில்நுட்பத்தை எட்டிப்பிடித்திருக்கும் சீனா உலக உற்பத்தியின் மையமாக மாறி உலக அரசியலில் தனக்கான பங்கைக் கோருகிறது. உலக எண்ணெய், எரிவாயு, கனிமவள உற்பத்தியைப் பெருமளவு வைத்திருக்கும் ரசியா சீனாவுடன் இணைந்துகொண்டு கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசிய அரசியலின் மையமாகத் தக்கவைத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பாவின் உற்பத்தி மையமாக விளங்கும் ஜெர்மனி, பிரான்ஸைத் தன்னுடன் இணைக்க முயன்றது.
ஐரோப்பாவை ஒன்றிணைத்து டாலருக்கு அடுத்தபடியாக ஈரோ நாணயத்தின் வழியாக பெருமளவில் உலக வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்நாடுகள் இருபக்கத்தில் எந்தப் பக்கம் இணைவது என்று ஊசலாடியது. பெருமளவு மலிவான தொழிலாளர்களையும் சந்தையையும் வைத்திருக்கும் தெற்காசிய பிராந்தியத்தைக் கட்டப்படுத்த முனையும் இந்தியாவுக்கும் இதேநிலைதான். எண்ணெய், எரிவாயுவைப் பெருமளவில் வைத்திருந்தாலும் டாலர் வர்த்தகத்தில் இருந்து தள்ளிவைக்கப்பட்ட ஈரான் எதிரணியுடன் இணைந்து மேற்காசிய அரசியலின் மையமாக மாற முயன்றது.
அமெரிக்க எண்ணெய் சந்தையை இழந்துவிட்ட சவுதி அராபிய நாடுகள் ஆசிய சந்தையை இழக்க விரும்பாமல் எதிரணியை நோக்கிய நகர்வுகளைச் செய்தன. இப்படியான எல்லா உலக அரசியல் நகர்வுகளுக்குமான அடிப்படை உற்பத்தித் தொழில்நுட்பத்தைக் கைப்பற்றிய சீனாவும் உணவு, மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருளை வைத்திருக்கும் ரசியாவும் ஒற்றைத்துருவ உலகை உடைக்க முயல்வதும் அமெரிக்கா அதனைத் தக்கவைக்க முனைவதும்.
ஒற்றைத்துருவ உடைப்பு
இந்த உடைப்பைத் தடுக்க சீனாவின் மின்னணு உற்பத்தித் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அதேவேளை சீன-ரசிய கூட்டை உடைக்கும் வேலைகளில் இறங்கியது அமெரிக்கா. ரசியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரைனின் நாசிச தேசியவெறியர்களைப் பயன்படுத்திக்கொண்டு நேட்டோவை உள்நுழைத்து ரசியாவைப் போரிட தூண்டியது. பின்பு அதையே காரணமாக்கி ஐரோப்பியர்களின் துணையுடன் ரசியாவின் மொத்த நாணய கையிருப்பையும் கைப்பற்றி அதன் பொருளாதாரத்தை முடக்க முற்பட்டது. அதன்மூலம் வர்த்தக நிதிநெருக்கடியை ஏற்படுத்தி அந்நாட்டை உருக்குலைத்து போரில் தோற்கடித்து சீனாவைத் தனிமைப்படுத்துவது திட்டமாக இருந்திருக்கலாம்.
சீனாவின் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பினால் நிலைத்து நின்ற ரசியா இந்த மேற்குலக நாடுகளின் தாக்குதலை உலகின் மற்ற எல்லா நாடுகளையும் தன்பக்கம் அரசியல் ரீதியாகத் திரட்டி எதிர்கொண்டது. மேற்குலகு சார்பான இந்தியாவை அதன் 49 விழுக்காடு ரசிய ஆயுத இறக்குமதி சார்பையும் மலிவான எண்ணெய் கொடுத்து இந்திய பார்ப்பனியத்தின் காரியவாத பச்சோந்தித்தனத்தையும் பயன்படுத்தி தன்பக்கம் கொண்டுவந்தது. இது பாஜக அரசை மேற்குடன் முரண்பட வைத்தது. அடுத்து ரசியா டாலர் வர்த்தகத்தை உடைத்து அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைகுலைக்கும் பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியது.
நேட்டோவின் பதிலிக் கரமாக விளங்கும் உக்ரைன் இராணுவத்தை மெல்ல அரைத்துச் செறித்து அங்கிருக்கும் நாசிச ஆளும்வர்க்கத்தை ஒடுக்கி பதிலாகத் தனது ஆதரவு ஆளும்வர்க்கத்தை அங்கே ஆட்சியில் அமர்த்துவது; அமெரிக்க ஏவலனாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஈரோ-ரூபிள் எரிபொருள் வர்த்தகத்தை ஏற்கச் செய்வதன்மூலம் அதன் ஈரோ-டாலர்மைய வர்த்தகத்தை உடைத்து அவர்களைத் தன்பக்கம் கொண்டுவருவது என எதிர் நகர்வுகளைச் செய்தது. அமெரிக்கா இதனைத் தடுத்து நிறுத்த ரசிய-ஜெர்மனி நாடுகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட நோர்டு எரிவாயுத்தாரைகளை (nord streams) வெடிவைத்துத் தகர்த்து அதற்கு வாய்ப்பில்லாமல் தாழிட்டுச் சாத்தியது.
உலகெங்கும் பரவிய உடைப்பு
கருங்கடல் பகுதியில் நிலவும் உக்ரைன் பிரச்சனையை ரசியாவின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் அமைந்திருக்கும் பால்டிக் கடல் பகுதிக்கு நீட்டியது அமெரிக்கா. அந்தப் பகுதியில் ஜெர்மனிக்குப் போட்டியாக தொலைத்தொடர்பு, வாகன, தொழிற்துறை உற்பத்தியில் ஈடுபடும் சுவீடன், பின்லாந்து நாடுகளை நேட்டோவில் இணைத்து ரசியாவை சுற்றிவளைத்து அச்சுறுத்தி பணியவைக்க முயன்றது. அந்தப் பகுதியில் இருக்கும் தனது அணியான பெலாரஸில் அணுஆயுதங்களை வைத்து இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்ட ரசியா எரிவாயுக் குழாய்களைத் தகர்த்து ஜெர்மனியின் இறையாண்மையையே அதன் எஜமானர் கேள்விக்குள்ளாக்கிய போதும் ஏதும் செய்யாத இந்த எடுபிடி குத்தகை அரசைச் (vassal state) சுயசார்பாய் நிற்கச்சொல்வதில் எந்தப் பலனுமில்லை என்று முடிவெடுத்து தனது பொருளாதார வர்த்தக உறவுகளை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி நகர்த்தியது.
பால்டிக் கடல் வழியாக மேற்கு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கவுடன் வர்த்தகம் செய்து வந்த ரசியா அதற்குப் பதிலாக மாற்று வழிகளைக் காண ஆரம்பித்தது. காஸ்பியன் கடலுக்கும் பாரசீக வளைகுடாவுக்கும் நடுவில் இருக்கும் ஈரானுடன் கைகோர்த்துக் கொண்டு இதன் வழியாக இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவையும் ஆப்பிரிக்காவையும் குறுகிய காலத்தில் அடையும் வடக்கு-தெற்கு போக்குவரத்து இடைநிலத்தை (INSTC) உருவாக்கி மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்தியும் காட்டியது. ரசியாவுடனும் ஆசியாவின் முக்கிய சந்தையான சீனாவுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கு அருகில் இருக்கும் வடகொரியாவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு ராஞ்சின் துறைமுகத்தின் வழியாக இந்தப் பகுதியுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள முனையும் அதேவேளை இந்தப் பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நிலைகளையும் அதன் அணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தி அமெரிக்காவின் பால்டிக்கடல் பகுதி சுற்றி வளைப்புக்கு பதிலடி கொடுத்தது.
கூடுதலாக ஆப்பிரிக்காவின் நைஜர், மாலி, சூடான், புரக்கினோபாசோ உள்ளிட்ட நாடுகள் இருக்கும் சகேல் பகுதியில் ஆட்சி மாற்றத்தை ஊக்குவித்து அந்தப் பகுதியில் இருந்து பிரான்சும், ஜெர்மனியும் எண்ணெய், எரிவாயு, மாற்று அணுஆற்றலுக்கான எரிபொருளான யுரேனியம் பெறுவதற்கும் முட்டுக்கட்டை போட்டு அந்தப் பகுதியில் நேட்டோவின் ஆதிக்கத்தை உடைத்தது. உச்சமாக, சீனாவின் முயற்சியில் ஈரான்-சவுதி உறவைப் புதுப்பிக்கும் அறிவிப்பின் மூலம் சீன-ரசிய அணி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியதோடு அதன் அடியாளான இஸ்ரேலின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கியது. இதனை எதிர்கொள்ள சவுதி அரேபிய, இஸ்ரேலிய நாடுகளின் வழியாக இந்தியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்தோ-மேற்காசிய-ஐரோப்பிய பொருளாதார இடைநிலத்தை உருவாக்கும் ( India – Middle East – Europe Economic Corridor [IMEC] அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது.
ஒருங்கிணைந்த நலனும் தாக்குதலும்
மேற்கின் தொழில்நுட்பம் மத்தியகிழக்கின் எரிபொருளைக் கொண்டு இந்தியாவில் உற்பத்தி செய்து அமெரிக்க-ஐரோப்பிய சந்தையை அடையும் இந்தத் திட்டத்திற்கு இசைய சவுதி அணுஆயுத பாதுகாப்பைக் கோரியதாகவும் பதிலுக்கு இஸ்ரேலுடன் இயல்பான அரச உறவுகளை ஏற்படுத்த அமெரிக்கா கோரியதாகவும் செய்திகள் வந்தது. சொந்தமாக அணுஆயுத இராணுவ தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் ஈரான் இந்தப் பகுதியில் ஆதிக்கம் செய்வதைத் தடுக்கவும், இன்னமும் ஜனநாயக தேர்தல் வாடைகூட அடிக்காமல் மன்னாராட்சியில் நீடிக்கும் சவுதி மன்னர்கள் தனது இருப்பைத் தக்கவைக்கவும் இப்படியான முடிவுக்கு இசைந்திருக்கலாம். ஏற்கனவே ட்ரம்ப் காலத்தில் ஆபிரகாம் ஒப்பந்தம் (Abraham accord) மூலம் மொராக்கோ, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், சூடான் ஆகியவை இஸ்ரேலுடன் அரச உறவுகளை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் இந்தப் பகுதியின் தலைமையான சவுதியும் பாலஸ்தீன நாடு உருவாவதற்கு முன்பே அப்படியான அரச அங்கீகாரத்தை இஸ்ரேலுக்கு வழங்கினால் அவர்களின் உரிமைக்குரல் மரித்து அங்கே இரண்டாம்தர மக்களாகவே வாழநேரிடும். மேலும் இது மேற்காசிய இணைவைத் தடுத்து ரசிய-சீன-ஈரானிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு இந்தியாவை உள்ளடக்கிய வடக்கு-தெற்கு போக்குவரத்து இடைநில திட்டத்தையும் செயலிழக்கச் செய்யும்.
இதனிடையில் காஸ்பியன் கடல் பகுதியில் இருக்கும் அஜர்பெய்ஜான் ஆசிய-ஐரோப்பிய கண்டங்களின் இணைப்புப் பாலமாக விளங்கும் துருக்கியுடன் இணைந்து கொண்டு நகோர்னோ-கராபாக் (Nagorno-Karabakh) பகுதியில் இருந்து துருக்கி இஸ்ரேலிய ஆயுதங்களைக் கொண்டு ஆர்மேனியர்களை வெளியேற்றி ஈரான் நாட்டின் வழியாக துருக்கி எல்லைக்கு அருகில் இருக்கும் தனது பகுதியான நக்சிவன் (Nakhchivan) பகுதியை இணைக்கும் ஒப்பந்தத்தைத் செய்தது. இதன்மூலம் துருக்கி மத்திய ஆசியாவுடனான நிலவழி இணைப்பைப்பெறும். இதில் பங்கேற்றதன் மூலம் ஈரான் இந்த இணைப்பில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அஜர்பெய்ஜானின் எண்ணெயைக் குழாய் வழியாக இஸ்ரேலுக்கு விற்கும் வர்த்தகத்தில் பலனடையும் துருக்கி காஸா பகுதிக்கு அருகில் இங்கிலாந்தின் டோட்டல் நிறுவனத்தால் மத்திய தரைக்கடலில் இருந்து எடுக்கும் எரிவாயுவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்ய தயாரானது.
அது இஸ்ரேலின் மறைமுக ஆதரவுடன் பாலஸ்தீன ஒற்றுமையை உடைக்க ஹமாஸ் இயக்கத்துக்கு பில்லியன் கணக்கில் பணமும் அதன் தலைவருக்கு அடைக்கலமும் கொடுக்கும் கத்தாருக்கு ஏற்புடையது அல்ல. ஈரானுடன் உலகின் மிகப்பெரிய பார்ஸ் (Fars) எரிவாயு வயலைப் பகிர்ந்துகொள்ளும் கத்தார் அதனை ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முனைப்பில் இருந்து வருகிறது. ஆகவே இது கத்தார்-ஈரானிய நாடுகளின் நலனுக்கு எதிரானது.
இந்தப் பிராந்தியத்தின் முக்கிய அரசுகளான சவுதியும், துருக்கியும் இஸ்ரேலிய அரசை அங்கீகரித்து பொருளாதார ரீதியாக வலுவாக பிணைக்கபடும்போது அவர்கள் பாலஸ்தீன உரிமையைப் பின்னுக்குத்தள்ளி அவர்களின் மீதான அடக்குமுறையைக் கண்டும் காணாமல் செல்வது தவிர்க்கவியலாதது. அது பாலஸ்தீனர்கள் இரண்டாம்தர மக்களாகவோ அல்லது அங்கிருந்து அந்த இனமே துடைத்தெறியப் படுவதிலோதான் முடியும். இப்படி பலஸ்தீனர்கள், கத்தார், ஈரான்-ரசிய-சீன அணியினரின் நலன்களுக்கு எதிரான நகர்வுகளைத் தடுக்கவேண்டிய சூழலில்தான் நடந்த இந்த ஹமாசின் தாக்குதல் எல்லோரின் நலனையும் உள்ளடக்கியது என்பதைத்தான் உலக அரசியல் மாற்றங்கள் உணர்த்துகிறது.
இந்தத் தாக்குதல் மூலம் பாலஸ்தீனர்களின் உரிமை நிலைநாட்டப்படுமா? மேற்கண்ட பூகோள அரசியல் நகர்வுகள் முடக்கபட்டிருக்கிறதா? இந்தப்போரின் முடிவும் விளைவுகளும் என்னவாக இருக்கும்? அது இஸ்ரேலியே ஆதரவு நிலையெடுத்த இந்தியாவை எப்படிப் பாதிக்கும்? அதனால் தமிழர்களுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும்? அடுத்த கட்டுரையில் காணலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
அதிர்ச்சி ஓலத்தில் குமைந்த ஆதிக்கவாதிகள் ..-2
ஹமாஸ் தாக்குதலின் நோக்கமென்ன?-1