முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
(மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி சண்முகவேலன், மீண்டும் தன் பத்தியைத் தொடங்குகிறார். புதன்கிழமைதோறும் வரவிருக்கும் இந்தத் தொடரில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்களை, ஆளும் வர்க்கத்தினர் எவ்வாறு தங்கள் நலனுக்காக நசுக்கி ஒடுக்குகிறார்கள் என்பதைப் பற்றி அலசப்படும். இந்த அலசல் லண்டனில் தொடங்கி, பல இடங்களில் பயணப்பட்டு, தூத்துக்குடியில் முடிவுறும். “விவாதிக்கப்படும் பொருளின் அனைத்துத் தரப்புக்களையும் குறிப்பாக பொதுப் புத்தியைத் தாண்டி சாமானியர்களின் நலன் குறித்த பார்வைகளைக் கவனப்படுத்துவதாக இத்தொடர் இருக்கும்” என்கிறார் முரளி. – ஆசிரியர்)
பிரிட்டன் 2018.
தேசியப் பொருளாதாரத்தில், உலகத்திலேயே ஐந்தாவது பெரிய நாடு (இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது) பிரிட்டன் இரண்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து சொச்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு நாடு.
இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் முறையே ஒரு லட்சத்து முப்பதாயிரம்; ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஒன்று; மூன்று லட்சத்து ஏழு சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்புகளாகும். வங்காள தேசம் ஒரு லட்சத்து நாற்பத்து ஏழாயிரம் சதுர கி.மீ பரப்புள்ள தேசம். இந்தியா முப்பத்து இரண்டு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து இருநூற்று நாற்பது சதுர கி.மீ பரப்புள்ளது. ஆக இந்தியாவின் ஒரு மாநிலத்தின் சைஸில் உள்ள ஒரு நாடு உலகத்தின் ஐந்தாவது பணக்கார நாடு.
இது வெறும் உழைப்பினால் மட்டுமே நடந்த அற்புதமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் பணக்கார பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையில் கால் சதவிகிதத்தினர் வீடின்றித் தெருவில் வாழ்கின்றனர். செக் தேசத்திற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் தெருவில் வாழ்பவர்களின் அதிகமான எண்ணிக்கை பிரிட்டனுக்கே சொந்தம்.
பிரிட்டனில் அனைத்துக் குடிமக்களுக்கும் உலகத் தரத்தில் இலவசமாக மருத்துவ வசதி வழங்கப்பட்டுவருகிறது. அதே பிரிட்டனில்தான், பதின் பருவப் பெண்கள் கருவுறுவது – பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலேயே, மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது.
பிரிட்டனின் பல்கலைக்கழகங்கள் உலகப் பிரசித்தி பெற்றவைகளாகும். பிரிட்டனில் தொடர்ச்சியாக வெளிவரும் லவ் ஐலண்ட் (காதல் தீவு) என்ற ரியாலிட்டி டிவி தொடரில் கலந்துகொள்ள ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் விண்ணப்பித்ததாகச் சொல்லப்பட்டது. இந்த எண்ணிக்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைவிடக் கணிசமானது என ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
உலக விளையாட்டு அரங்குகளில் பிரிட்டன் எப்போதுமே முன்னணியில் இருக்கும். ஆனாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலேயே, பருமனான மக்கள் பிரிட்டனில்தான் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
பிரிட்டனில் நீங்கள் படிக்கும் செய்தித்தாளினைப் பொறுத்து உங்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற ஒரு கருத்து உண்டு (அதில் கொஞ்சம் உண்மையும் உண்டு). அதேபோல ஒருவரது ஆங்கில உச்சரிப்பினைக் கொண்டு அன்னாரின் பொருளாதாரத் தகுதி, வகுப்பின் நிறத்தினை அறிந்து கொள்ளலாம். அதனாலேயே மக்கள் சேவையாக பிபிசி தொலைக்காட்சி அறியப்பட்டாலும் அந்த நிறுவனமானது ஏழை மற்றும் மத்திய வடக்கு பிரிட்டனைப் பிரதிநிதிப்படுத்துவது கிடையாது என்ற ஒரு குறை பலருக்கும் உண்டு.
லண்டனில் உள்ள ஹைட் பூங்காவில் உள்ள பேச்சாளர் முனையில் (speaker’s corner) யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். இன்றும் வார இறுதியில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறித்துவ / வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களும் [மிகக் கடுமையாக வாதத்தில்](https://www.youtube.com/watch?v=Ap7FLVc0mVo&t=26s) ஈடுபடுவது வழக்கம். பிரிட்டனில் பேச்சுச் சுதந்திரம் மட்டுமல்ல; ஒருவரின் புனிதத்தைக் காரண காரியமின்றி நையாண்டி செய்வது மிகச் சாதாரணமான ஒன்று. யாரை வேண்டுமானாலும் யாரும் கேலி செய்வது பிரிட்டனின் ஒரு விழுமியமாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் – ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர – இப்படிப் பகடி செய்ய முடியாது. ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் இம்மாதிரியான பகடிகள் அதிகரித்துள்ளன. ஆனால், பிரிட்டனில் பகடி செய்வது ஒரு தேசிய குணம் என்றே சொல்லலாம். நெருங்கிய அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவரைப் பொது வெளியில் கிண்டல் செய்வது, சுய எள்ளல், அரசியல்வாதிகளைப் பிரித்தெடுப்பது எல்லாம் பிரிட்டனில் சாதாரணமான ஒன்று. ஆனால், இரண்டு பொருள்களை பற்றி மட்டும் பிரிட்டனின் பொதுவெளியில் விமர்சனம் செய்ய முடியாது.
அரச குடும்பம். ராணுவம், குறிப்பாக வீரர்கள் (பாய்ஸ்!).
அரச குடும்பத்தையும், ராணுவத்தையும் இணைக்கும் புள்ளி – பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அவற்றின் காலனிய வரலாறும் ஆகும். சோஷலிசம் பேசும் பேராசிரியரிலிருந்து, வறியவர் வரை – அரச குடும்பத்தைப் பெருமையின் சின்னமாகவே கருதுகின்றனர். நீங்கள் அரச குடும்பத்தின் புனிதத்தைக் கேள்வி கேட்பீர்களேயானால், உங்களின் தேசப்பற்று கேள்விக்குள்ளாக்கப்படும். என்னைப் போன்ற பழுப்பு நிறம் கொண்டவர் அரச குடும்பத்தின் அதிகார நிலை குறித்து கேள்வி எழுப்பினால் வந்தேறி அரசியல் குறித்து முணுமுணுப்பர்.
சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்த பிரிட்டனின் அரச குடும்பத்தின் திருமணம் நினைவிருக்கலாம். ராமாயணத்தில் ராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடந்தபோது மக்களனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததாகப் படித்திருப்போம். பிரிட்டிஷ் அரச குடும்பத் திருமணமும் அப்படியே. அரசியல், பகுத்தறிவு ஆகியவைகளில் நெடிய விவாத வரலாறு கொண்ட பிரிட்டன், அரச குடும்பத்தைப் பொறுத்தமட்டில் பண்டைய கால விசுவாசத்தை விட்டு முன்னேறியதாகத் தோன்றவில்லை.
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு முன்னதாக நான் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்குச் செல்லும்போது ரஸ்ஸல் சதுக்கத்தின் நிலத்தடி ரயில் நிலையத்திலிருந்து மேலே வரும்போது ஒரு விளம்பரத் தட்டி கண்ணில் பட்டது: அரச குடும்பத்தின் திருமணத்திற்குச் செல்பவர்களுக்கு ஏற்படும் பிரயாணச் சிக்கலைப் பற்றிய எச்சரிக்கை அது. அதாவது பொதுமக்கள் அனைவரும் சொக்கர் – மீனாட்சி திருமணத்திற்குச் செல்வது போல் அரச குடும்ப திருமணத்திற்கும் தயாராகிவருவதின் அடையாளமே அந்தத் தட்டியின் அறிவிப்பு.
வழக்கமாக இரவு 11 மணிக்கு மூடப்படும் பார்களும் மதுவிடுதிகளும் நள்ளிரவு தாண்டி மறுநாள் காலை 1 மணி வரை திறக்க [சிறப்பு அனுமதி](https://www.bbc.co.uk/news/newsbeat-43277799) அளிக்கப்பட்டது.
பிரிட்டனில் உள்ள ஊடகங்கள் அரச குடும்பத் திருமணத்தை பிரிட்டனின் கலாச்சாரப் பண்டமாக விற்றது. பிபிசி, ஐடிவி, ஸ்கை போன்ற முக்கியத் தொலைக்காட்சிகள் சனிக்கிழமை (19 மே) காலை ஒன்பதிலிருந்து மதியம் வரை நேரடி ஒளிபரப்பு செய்தது.
கோடையில் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவதன் மூலம் சுற்றுலா வர்த்தகத்தையும் அதிகரிக்க பிரிட்டன் முற்பட்டது. உணவு விடுதிகளில் எல்லாம் திருமணத்தை ஒட்டி சிறப்பு மெனு தயாரிக்கப்பட்டது. பன்னாட்டு விமான நிலையங்கள், போக்குவரத்து நிலையங்களில் விளம்பரத் தட்டிகள், டிஜிட்டல் ஒளி / ஒலிக் கோர்வைகள் எல்லாம் அரச குடும்பத்தின் திருமணத்தைக் கலாச்சாரப் பண்டமாக மாற்றி வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டது என்றால் மிகையாகாது. மேகன் மார்க்கிளுக்குப் பிடித்த ரோஸ் கோல்ட் அமெரிக்காவின் நகைச் சந்தையில் அதிக அளவில் விற்பனையானதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
மே 19ஆம் தேதி நடந்த ஹாரியின் திருமணம் வழக்கமான’ அரச குடும்பத் திருமணம் அல்ல என்றும் புரட்சிகரமான நிகழ்வு எனவும் வெகுஜன ஊடகங்கள், அரச குடும்ப ஊடகவியலாளர்கள் (royal correspondents), அறிவுஜீவிகள், கல்விமான்கள் என அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
இளவல் ஹாரி, ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேகன் மார்க்கிளை மணந்ததே அதற்குக் காரணமாகும். பிரிட்டனின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளை நிறத்தவர் தவிர வேற்று நிறத்தவரை மணப்பது இதுவே முதன்முறையாகும் (மேகன் மார்க்கிளின் தாயார் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்; தந்தை வெள்ளை இனத்தவர்).
ஆக பிரிட்டனின் வெள்ளை அரச குடும்பத்தில் வெள்ளையரல்லாத ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் குடும்ப உறுப்பினராகியது அரச குடும்பத்தின் முற்போக்குத் தன்மையையும், அக்குடும்பம் காலத்திற்கேற்ப மாறிவருவதையும் குறிப்பதாக பிரிட்டனில் உள்ள முற்போக்குவாதிகள் பெருமை கொண்டனர்.
பிரிட்டனில் உள்ள மூன்று சதவிகிதக் கறுப்பினத்தார்களோ, அரச குடும்பத்தில் தாங்கள் முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதாகக் கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
மேகன் மார்க்கிள் பெண்ணியவாதி என்றும், எனவே அரச குடும்பத்தில் பெண்ணியம் பேசும் ஒரு கறுப்பினப் பெண் குடியேறுவது 21ஆம் நூற்றாண்டின் சாதனையாகவும், அரச குடும்பத்தின் தாராளவாதத்தையும் பறைசாற்றுவதாக பிரிட்டனின் ஊடகங்கள் கூவின.
ஹாரியும் மேகன் மார்க்கிளும் தங்களது திருமண அறிவிப்பை பிபிசியில் வெளியிட்டபோது, மார்க்கிளிடம் அவர் அணிந்து கொண்டிருந்த திருமண நிச்சய மோதிரம் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. மார்க்கிள், [மிக்க பெருமிதத்துடன்](https://www.bbc.co.uk/news/av/uk-42146147/how-prince-harry-designed-meghan-s-ring), தனது வருங்காலக் கணவர் தானே வைரங்களைத் தேர்ந்தெடுத்து டிசைன் செய்ததாகக் கூறினார். ஹாரி, இந்த மோதிரத்தின் பிரதான வைரக்கல் போட்ஸ்வோனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறினார் (மற்ற இரண்டு சிறிய கற்கள் அவரது தாய் இளவரசி டயானாவுடையது). பிரிட்டனுடைய காலனிய ஏகாதிபத்தியத்திற்கும், சிசில் ரோட்ஸின் தலைமையில் தொடர்ந்து அண்மைக் காலம் வரை இயங்கிவந்த வைரச் சுரங்கத்தின் அரசியலுக்கும் கறுப்பின அடிமை வரலாறுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். அது பற்றிப் பிறகு பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கான உடனடியான கேள்விகள் என்னவென்றால்…
ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேகன் மார்க்கிளை மணந்துகொள்வதன் மூலம் அரச குடும்பம் தங்களை வெள்ளை இனத் தூய்மைவாதிகள் என்ற பிம்பத்தை மாற்ற முயற்சிக்கிறதா?
இக்கலப்புத் திருமணம், பிரிட்டனும் அரச குடும்பமும் மாற்று நிறத்தார்களைச் சமமாக பாவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் குறியீடா?
மேகன் மார்க்கிள் தன்னை ஒரு கறுப்பினப் பெண்ணியவாதியாகக் கட்டமைக்க விரும்புவது அவரது பேட்டிகளிலிருந்து தெரியவருகிறது. இது சாத்தியமா?
இக்கேள்விகளுக்கான பதில் தேட ஹாரி – மேகனின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்னால் செல்ல வேண்டும். ஹாரி – மேகனின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பாக இரண்டு முக்கியமான நிகழ்வுகள் பிரிட்டனில் நடந்தன. ஒன்று காமன்வெல்த் போட்டி: ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 15 வரை. இன்னொன்று காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு: ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 20 வரை.
இம்மாதிரியான உலக மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் பிரிட்டனில் கோடையில்தான் நடைபெறும் என்றாலும் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும், அரச குடும்பத் திருமணத் தேதிகளும் கவனமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றால் மிகையல்ல. ஏப்ரல், மே என்ற இரண்டு மாதங்களுமே பிரிட்டனின் காலனியப் பெருமை பேசும் மாதங்களாக அமைந்திருந்தன என்றால் மிகையல்ல. அதாவது மே மாதத் திருமணத்துக்கு, ஏப்ரல் முதலே அரச குடும்பத்துப் பெருமிதங்கள் ஊடகங்களில் நிறைந்துவிட்டிருந்தன என்று சொல்லலாம்.
அரச குடும்பத்துத் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்னர் பிரிட்டனின் காலனியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அனைத்து முன்னாள் காலனிய நாடுகளின் தலைவர்களும் ராணியாரின் பக்கத்தில் வரிசையாக அமர்ந்து லண்டனில் போஸ் கொடுப்பது ஒரு விபத்தல்ல என்பது சாமானியருக்குக்கூடத் தெரியும்.
ஆனால், இந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரிட்டனின் அரசுக்கும், அரச குடும்பத்துக்கும் தர்மசங்கடம் விளைவிக்கும் ஒரு சம்பவம் நடந்தது. காமன்வெல்த் தலைமைப் பொறுப்பிலிருந்து ராணியார் தனது பதவியிலிருந்து இறங்கித் தனது மகனும் இளவரசருமான சார்லஸை அத்தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவரும் வேளையில் (காமன்வெல்த் தலைவர்களைத் தேர்ந்தெடுப்புக்கான விதி என்னவோ போட்டி மூலம் என்றாலும்) அரசுக்கு ஒரு தர்மசங்கடம் பொதுவெளியில் நேர்ந்தது.
காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்திருந்த முன்னாள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த சுதந்திர கரீபிய நாடுகளின் தலைவர்கள் பிரதமர் தெரெஸா மேயைச் சந்திக்க நேரம் கேட்டனர். இத்தலைவர்கள் பிரிட்டன் கரீபியத் தீவுகளிலிருந்து குடியேறிய கறுப்பர்களையும் அவர்களது சந்ததியினரையும் பிரிட்டன் நடத்தும் விதம் குறித்து மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் தெரிவித்தனர். பிரிட்டன் விரும்பிக்கொண்டுவந்த கரிபீயக் கறுப்பர்களைக் கண்ணியமற்ற முறையில் நடத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களில் பலரையும் விதிகளுக்குப் புறம்பாக நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை எடுத்துவருவது மனித உரிமைகளுக்குப் புறம்பான செயல் எனத் தங்கள் குமுறலைத் தெரிவிக்க விரும்பினர்.
ஒருபுறம் சார்லஸ் தலைமைப் பொறுப்புக்குத் தயாராகிவரும் சூழல்; மறுபுறம் ஹாரி – மேகனின் நிறக் கலப்புத் திருமணத்தை பிரிட்டனின் ஊடகங்கள், அறிவுஜீவிகள் அரச குடும்பத்தின் ‘சகிப்புத்தன்மையை’ப் பிரகடனப்படுத்தும் ஒரு நிகழ்வாக பரப்புரை செய்துவரும் சூழ்நிலை – இதற்கிடையில் இப்படியொரு தர்மசங்கடம்.
முதலில் அகம்பாவத் தொனியில் பிரதமர் கரீபிய நாட்டுத் தலைவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் அரசியல் அழுத்தம் கூடிய பின், வேறு வழியின்றி, சந்திக்க சம்மதித்தார். ஒப்புக்கு மன்னிப்பும் அளித்தார்.
ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேகன் மார்க்கிள் அரச குடும்பத்தின் மருமகளாகவும், இளவரசியாகவும் வருவதை நிறப் புரட்சியாக எண்ணிப் பலரும் பெருமிதம் கொண்டாலும், பிரிட்டனின் கள நிலவரம் என்னவோ தலைகீழ். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வேலை தருகிறோம், வாருங்கள் – எங்கள் நாட்டில் தேவையான உடல்பலம் இல்லை (காரணம்: போரில் ஏற்பட்ட அதிக பட்ச உயிர் இழப்பு) என்று சொல்லிக் கூட்டி வந்தவர்கள் பிரிட்டனில் தங்கிக் குடியுரிமை பெற்றுப் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் எந்த விதச் சட்டப் பாதுகாப்பும் இன்றி இரவோடிரவாகச் ‘சொந்த ஊருக்கு’ அனுப்பப்படுவதே பிரிட்டனின் உண்மை முகம். இதை மாற்றும் புரட்சி பலமெல்லாம் மேகன் மார்க்கிளுக்கு இருக்கும் என நம்பினால் அது நம்முடைய புத்தியின்மையே ஆகும்.
கரீபியக் கறுப்பர்களுக்கு, பிரிட்டனினால் நேர்ந்த அநீதி என்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன், (https://mobile.twitter.com/muralisvelan) ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
ஓலா, ஊபர் வெறும் சேவைகள் அல்ல! – முரளி சண்முகவேலன்