வைஃபை ஆன் செய்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த பேட்டியின் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“செப்டம்பர் 22, 23ம் தேதிகளில் டெல்லி பயணம் மேற்கொண்ட அதிமுக ஐவர் குழு அமித் ஷாவை சந்திக்க முடியாமல் திரும்பி வந்த நிலையில், செப்டம்பர் 24ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக உடனான கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் கட்சியின் கருத்து என்று குறிப்பிட்டு அறிவித்தார். இதன் பிறகு அதிமுக பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் விமர்சிக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தன.
இந்நிலையில் மீண்டும் கோவையில் அண்ணாமலை கொடுத்த பேட்டி உஷ்ணத்தைக் கிளப்பியது. நான் மோடியை பிரதமர் ஆக்குவேனே தவிர, எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குவேன் என்று சொல்ல மாட்டேன் என்று தெளிவாக கூறினார் அண்ணாமலை.
இந்த நிலையில் நேற்று டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டது போல… 2017 முதல் 21 வரை நமது ஆட்சிக்கு ஒத்துழைத்த பாஜக மேலிடத்திற்கு கூட்டணி முடிவு என்பதை வெறும் செய்தியாளர் சந்திப்பு மூலம் தெரிவித்தது நெருடலாக இருக்கிறது. அதனால் ஜெ.பி. நட்டாவை சந்தித்து நமது நிலைப்பாட்டை உரிய வகையில் தெரிவித்து விட்டு வர வேண்டும். ஏற்கனவே நாம் கூட்டணி நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்து விட்டதால் இந்தப் பயணம் அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதனால் ஊடகங்களுக்கு தெரியாமல் சென்று வாருங்கள்’ என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதன்படியே தங்கமணியும் வேலுமணியும் கொச்சி சென்று அங்கிருந்து டெல்லி சென்றார்கள். கே.பி. முனுசாமி தர்மபுரியில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்றார். நத்தம் விஸ்வநாதன் ஒருநாள் முன்னதாகவே தனியாக டெல்லி சென்று விட்டார். ராஜ்யசபா எம் பி.யான சி.வி சண்முகம் டெல்லியில் தான் இருந்தார்.
இப்படி தனித்தனியாக புறப்பட்டு டெல்லி சென்ற அதிமுக தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள். அப்போது டெல்லியில் சில ஊடக நண்பர்கள் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஒன்றாக இருக்கும் தகவலை அறிந்து அதன் பிறகுதான் இது வெளியிலே வெடித்திருக்கிறது.
கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு பாஜகவின் தேசிய தலைமையிடம் அதிமுகவின் ஐந்து முக்கிய தலைவர்கள் என்ன பேசப்போனார்கள் என்பது அதிமுகவுக்கு வெளியே மட்டுமல்ல, அக்கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள்- மத்தியிலும் விவாதம் ஆனது.
இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை இன்று செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் அறிவிக்க வைத்தார்.
மேலும் நாளை அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறார் எடப்பாடி.
இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி பற்றி உறுதியான ஒரு முடிவு எடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி… ‘பாஜக கூட்டணி பற்றி நாம் எடுத்த முடிவு தொடர்பாக தொண்டர்கள் நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள்?’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், ‘பாஜக கூட்டணி முறிந்தது மிக்க மகிழ்ச்சி. தொண்டர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த முடிவை எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடக்கூடாது’ என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளார்கள். இந்த பின்னணியோடு தான் நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் ஒரு படி மேலே போய் பாஜக அல்லாத கூட்டணி அதிமுக தலைமையில் அமையும் பட்சத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனையும் எடப்பாடி வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு உள்ளிட்ட வார்த்தைகளைக் கொண்டதாக அந்தப் பெயர் இருக்க கூடும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
’பாக்சிங்… ஒரே நாளில் சீமான் தோத்துட்டாரு’: வீரலட்சுமி அறிவிப்பு!