ராஜன் குறை
ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு ஜூன் 25-ம் தேதியை “சம்விதான் ஹத்ய திவஸ்”, ஆங்கிலத்தில் சொன்னால் “Constitution Murder Day”, அதாவது “அரசியலமைப்புச் சட்டம் கொலையுண்ட தினம்” என்று அறிவித்துள்ளது. இவ்விதமான எதிர்மறை பொருள் கொண்ட ஒரு தினத்தை அரசே அறிவிப்பது அபத்தமானது என்பது ஒரு புறமிருக்க, உண்மையில் 1975 ஜூன் 25 அன்று அரசியலமைப்புச் சட்டம் கொல்லப்பட்டதா என்பது முக்கியமான கேள்வி. நீதியரசர் சந்துரு டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டில் இவ்விதமான அறிவிப்புதான் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று விளக்கியுள்ளார்.
எப்படி என்று பார்ப்போம்
நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜூன் 25-ம் தேதி குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அஹ்மத் தேசிய உள்நாட்டு நெருக்கடி நிலையை அறிவித்தார். அவ்வாறு அவரை அறிவிக்கக் கோரியவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவ்வாறு அறிவிப்பதற்கு அரசியலமைப்பு சட்ட விதி எண் 352 அனுமதிப்பதின் பேரில்தான் குடியரசுத் தலைவர் அறிவித்தார். போர்க்காலங்களிலோ, உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போதோ நாட்டின் சில பகுதிகளிலோ, ஒட்டுமொத்த நாட்டிலுமோ நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல விதி எண் 359 வழங்கும் அதிகாரத்தின் அடிப்படையில்தான் அடிப்படை உரிமைகளும் முடக்கப்பட்டன.
மிசா சட்டத்தினை குறித்தும், ஊடக தணிக்கை குறித்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் அரசின் நெருக்கடி நிலை அறிவிக்கும் உரிமையை அங்கீகரித்தது. அரசியல் சட்ட விதிகள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியக் குடியரசின் தலைவர் அறிவித்த நெருக்கடி நிலையை, உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்த நிகழ்வை எப்படி அரசியலமைப்பைக் கொலை செய்த செயலாகச் சொல்ல முடியும் என்பதுதான் கேள்வி.
அவசர நிலை அறிவிப்பின் பிரச்சினை என்ன?
அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்படிதான் நிகழ்ந்தது என்பதால் நெருக்கடி நிலை அறிவிப்பு சரியானது என்று பொருளல்ல. மக்களாட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் என்பவை உயிர்நாடி போன்றவை. நெருக்கடி நிலை என்றால் வழக்கமாக மக்களுக்குள்ள உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கண்காணிப்புக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஆளாகும். அதன்படி 1975-ம் ஆண்டு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை கடும் தணிக்கை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு நெருக்கடி நிலையை ஆதரிக்காததால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. தி.மு.க தலைவர்களும், தொண்டர்களும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். முன்னாள் சென்னை மேயரான சிட்டிபாபு, இளைஞரான ஸ்டாலினை தாக்குதலிலிருந்து தப்புவிக்கும் முயற்சியில் கடுமையாக காயம்பட்டு சிறையிலேயே மரணமடைந்தார்.
அரசை விமர்சிக்கும் வாய்ப்பே ஊடகங்களுக்கு இல்லாததால் அரசு இயந்திரத்தின் பல மட்டங்களில் எதேச்சதிகாரம் தலை தூக்கியது. உதாரணமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் பல இடங்களில் ஏராளமானோருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கட்டாயமாகச் செய்து வைக்கப்பட்டது. இது போல எதேச்சதிகாரப் போக்குகளால் நாடெங்கும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். போராடும் உரிமைகள் பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் பல இடங்களில் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். இதையெல்லாம் கணக்கில்கொண்டு பார்க்கும்போது மக்களாட்சி கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலாகத்தான் நெருக்கடி நிலையைப் பார்க்க முடியும்.
மக்கள் அளித்த தண்டனை
நெருக்கடி நிலையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இருபது அம்ச திட்டம் என்ற பெயரில் பல முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவை தனக்கு வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கையில் 18 மாத நெருக்கடி நிலைக்குப் பிறகு பிரதமர் இந்திரா அதனை விலக்கிக்கொண்டு 1977 மார்ச் மாதம் பொதுத் தேர்தலை அறிவித்தார். ஆனால், எதேச்சதிகாரக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் வட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு முழுத் தோல்வியை பரிசளித்தார்கள்.
சிறையிலிருந்து விடுதலையான எதிர்க்கட்சித் தலைவர்கள் துரிதமாக ஒன்றிணைந்து ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஜனதா கட்சி என்ற கட்சியினைத் தொடங்கினார்கள். அந்தக் கட்சி பெருவெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்திரா காந்தியும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தோல்வி அடைந்தார்கள். அதன்பின் ஜனதா கட்சி ஆட்சியில் நெருக்கடி நிலை கால கொடுமைகள் வெளிவந்தபோது இந்திரா காந்தி அவற்றுக்குப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் அனைவர் சார்பாகவும் மன்னிப்பும் கேட்டார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் உருவான பதற்றமான நிலையைச் சமாளிக்கத்தான் நெருக்கடி நிலையை அறிவித்ததாகக் கூறினார். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல என்றாலும், இந்திரா பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டது பலராலும் அங்கீகரிக்கப்பட்டது. மற்றொருபுறம் ஆட்சியில் அமர்ந்த ஜனதா கட்சியில் ஐக்கியமான ஜனசங்க தலைவர்கள் தங்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக மறுத்ததால், கட்சி பல பிரிவுகளாக உடைந்து சிதறுண்டது. ஆட்சியும் கவிழ்ந்தது. மக்களிடையே நிலையான ஆட்சி வேண்டும் என்ற கவலை உருவானது.
அதனால் 1980 தேர்தலில் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் பெரு வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பனிப்போர் கால உலக அரசியலின் பகுதியாகவும் நெருக்கடி நிலையைக் காண முடியும். இந்திரா காந்தி சோஷலிசக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றினார். அவருக்கு அதனால் ரஷ்ய ஆதரவு இருந்தது. இந்திராவுக்கு எதிராக இருந்த மொரார்ஜி தேசாய் உள்ளிட்டவர்கள் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்களாக இருந்தனர். அவர்கள் அமெரிக்க கருத்தியல் மேலாதிக்கத்துக்கு அனுசரணையாக இருந்தனர். அதனால்தான் வலது கம்யூனிஸ்ட் எனப்பட்ட சி.பி.ஐ கட்சி நெருக்கடி நிலையை ஆதரித்தது.
நெருக்கடி நிலையில் திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டம்
நெருக்கடி நிலை காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்திய குடியரசின் பெயரில் சோஷலிச, மதச்சார்பற்ற ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அதாவது Indian Democratic Republic என்பது Indian Socialist Secular Democratic Republic என்று மாற்றப்பட்டது. இன்றுவரை அந்த மாற்றம் தொடர்கிறது. மற்றோர் உதாரணம்… மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்றுவரை அந்த நிலையே நீடிக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டு முதல்வர், நெருக்கடி நிலையை எதிர்க்கும் பாஜக அரசு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தயாரா என்று கேட்டுள்ளார். நெருக்கடி நிலை காலத்தில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் இருந்ததால்தானே அதனை திருத்த முடிந்தது? அந்தத் திருத்தங்கள் இன்று வரை நீடிக்கும்போது எப்படி அவசர நிலை அறிவிப்பை அரசியலமைப்பு சட்டக் கொலை என்று கூற முடியும் என்று கேட்டுள்ளார் நீதியரசர் சந்துரு.
அரசும், அரசாங்கமும்
அரசு என்பது இறையாண்மையின் தொடர்ச்சியாகும். அதை ஆங்கிலத்தில் ‘ஸ்டேட்’ (State) என்று அழைக்கிறோம். அரசாங்கம் என்பது மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் ஆதரவைப் பெறுபவர், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தலைவர் அமைக்கும் மந்திரி சபையின் பெயர். அன்று நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது இந்திரா காந்தியின் தலைமையில் ஒரு காங்கிரஸ் அரசாங்கம் இயங்கியது. இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஆட்சி செய்கிறது.
ஆனால், அன்றும் இன்றும் அரசு என்பது இந்தியக் குடியரசுதான். அதன் தலைவர்தான் குடியரசுத் தலைவர். இந்திரா காந்தியின் அரசாங்கம் நெருக்கடி நிலையில் எதேச்சதிகாரமான செயல்கள் நடைபெறக் காரணமாயிருந்ததை பாஜக அரசு விமர்சிக்கலாம். காங்கிரஸ் மக்களாட்சி விழுமியங்களை சிதைத்தது எனலாம். அது அரசியல் விமர்சனம்.
ஆனால், இந்திய அரசு தான் ஐம்பதாண்டுகளுக்கு முன் அறிவித்த நெருக்கடி நிலையை அரசியலமைப்பு சட்டத்தின் கொலை என்று அதுவாகவே கூறிக்கொள்ள முடியாது. அன்றும் இன்றும் அதே அரசியலமைப்பு சட்டம் நிறுவிய குடியரசுதானே இயங்குகிறது? அது எப்படி தானே அரசியலமைப்பு சட்டத்தைக் கொலை செய்ததாக அறிவிக்க முடியும்? அரசியலமைப்பின் இந்த அடிப்படையே புரியாமல்தான் மோடி தலைமையிலான மந்திரி சபை ஆட்சி செய்கிறதா என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அரசியல் தத்துவத்தில் அரசின் தொடர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. தேர்தலுக்குத் தேர்தல் அரசாங்கங்கள் மாறலாம்; ஆனால் அரசு என்பது மாறாது; மாறக்கூடாது. அதை உறுதி செய்வதுதான் அரசியலமைப்புச் சட்டம்.
அரசின் இறையாண்மையும், சட்ட வடிவமும்
அரசியலமைப்பு சட்டம் உட்பட அனைத்து சட்டங்களையுமே அரசு தனக்குள்ள இறையாண்மையின் அடிப்படையில்தான் இயற்றுகிறது. அந்தச் சட்டங்களுக்கு அரசும் கட்டுப்பட்டது. அதே சமயம் அதன் இறையாண்மை அது இயற்றிய சட்டத்துக்கும் அப்பாற்பட்டது; சட்டத்தையே மாற்ற வல்லது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசின் இறையாண்மை அரசியலமைப்பு சட்டத்துக்கு மூலாதாரமாகவும் இருக்கிறது. அதே சமயம் அதைக் கடந்தும் இருக்கிறது. இத்தகைய நிலையை அகெம்பென் என்ற தத்துவவாதி விதிவிலக்கு நிலை (State of Exception) என்று அழைக்கிறார்.
உதாரணமாக யாரும் கொலை செய்யக் கூடாது என்பது சட்டம். அனைவருக்கும் உயிர் வாழும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு மரண தண்டனை உள்ளிட்ட வடிவங்களில் உயிரைப் பறிக்கும் உரிமையையும் வைத்துக் கொள்கிறது. கேட்டால், அபூர்வத்திலும், அபூர்வமான வழக்குகளில்தான் மரண தண்டனை வழங்கப் படுவதாக் கூறப்படும். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் அரசும் யார் உயிரையும் பறிக்கக் கூடாது என்றுதான் கூறுவோம். ஆனால், அரசின் விதிவிலக்கு நிலை அதை மரண தண்டனை மூலம் உயிர்களைப் பறிக்க அனுமதிக்கிறது. அது தேவையா, இல்லையா என்று விவாதிக்கலாம். ஆனால், இறையாண்மையின் விதிவிலக்கு என்பதை முற்றிலும் தவிர்க்க முடியாது என்பதே அகெம்பென், கார்ல் ஷ்மிட் என்ற அரசியல் சிந்தனையாளரை அடியொற்றிக் கூறுவது.
சுருக்கமாகச் சொன்னால் அரசின் இறையாண்மையின் வடிவம்தான் அரசியலமைப்புச் சட்டம். அதே சமயம் சட்டத்தை வடிவமைக்கும் அரசின் இறையாண்மை அவ்வாறு செய்யும்போது சட்ட வடிவத்துக்கு வெளியில் இருக்கிறது. உள்ளேயும், வெளியேயும் இருக்கும் இறையாண்மையின் இரட்டை வடிவம்தான் விதிவிலக்கு நிலை எனப்படுவது. அரசியலமைப்பு சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையே கட்டுப்படுத்தும் நெருக்கடி நிலை குறித்த சில ஷரத்துகளை கொண்டிருப்பது அந்த இறையாண்மையின் விதிவிலக்கு நிலையைக் குறிப்பதுதான்.
அந்த நிலை இல்லையென்றால் அது இறையாண்மையாக இருக்க முடியாது. எனவே அரசியலமைப்பு சட்டமே சாத்தியமாகாது. விதியாகவும், விலக்காகவும் ஒரே நேரத்தில் இருப்பதுதான் இறையாண்மை. இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ளாமல் நெருக்கடி நிலை அரசியலமைப்பு சட்டத்தைக் கொல்வதாகச் சொல்வது பரிகசிப்புக்குரியது. அதனால்தான் பாஜகவின் அரசியல் சட்ட கொலை தினத்தை மிகப்பெரிய ஜோக் என்று கூறுகிறார் நீதியரசர் சந்துரு.
பாஜக அரசு ஏன் இதனைச் செய்கிறது?
பாஜக அரசு மோடி தன்னிச்சையாக செயல்படும் திறனை விளம்பரப்படுத்தியே செயல்படுகிறது. ஒருவரையும் கலந்தாலோசிக்காமல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததை அவரது துணிகரமான செயல்பாடுகளின் உதாரணமாகக் கொண்டாடியது. ஆனால், அந்த நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்படவில்லை; மக்கள் பெரும் அல்லலுக்கு ஆளானதுதான் மிச்சம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், குறிப்பாக ராகுல் காந்தியும் அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மாற்றத் துடிக்கிறது; அதனிடம் இருந்து அரசியலைப்பு சட்ட த்தைக் காக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது பரவலாக மக்கள் கவனத்தை ஈர்த்தது.
“மோடிக்கு பதில் யார்?” என்ற கேள்வியை “மோடியா, அரசியலமைப்பு சட்டமா?” என்று மாற்றியமைப்பதில் காங்கிரஸ் கணிசமாக வென்றது எனலாம். அதனால்தான் காங்கிரஸ் கட்சி நெருக்கடி நிலையை அறிவித்து அரசியலமைப்பு சட்டத்தைக் கொன்றது என்று மாய்மால வேடம் போடுகிறது பாஜக அரசு. அதற்காகத்தான் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு கொலை தினமாக அனுசரிக்க நினைக்கிறது. ஆனால், இந்திரா காந்தி இறையாண்மையின் விதிவிலக்கினை செயல்படுத்தும்போது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவே செய்துள்ளார் என்பது தெளிவு.
மாறாக பாஜக-வின் கருத்தியல் மூலாதாரங்களை வழங்கியவர்கள் அடிப்படையிலேயே அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களை ஏற்காதவர்கள். கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி போன்றவற்றிற்கும் பாஜகவின் சித்தாந்த அடிப்படைகளுக்கும் உள்ள முரண்பாடு, அதனை அரசியலமைப்பு சட்டத்திற்கு அந்நியமாகவே வைத்துள்ளது.
உதாரணமாக மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லும். பிரதமர் தானே அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று தெய்வச் சிலையை பிரதிஷ்டை செய்வார். ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் கொடுத்த செங்கோலை நாடாளுமன்றத்தில் பிரதிஷ்டை செய்வார். கல்வியிலும், சமூகத்திலும் பின் தங்கியவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்று சட்டம் சொன்னால், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஆதிக்க ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வார். பிரதமர் பெயரில் பி.எம்.கேர்ஸ் என்று பெரிய நிதி ஆதாரத்தை உருவாக்கி அதுகுறித்து யாரும் கணக்குக் கேட்கக் கூடாது என்பார். குடியுரிமையையே மத அடையாளத்துடன் தொடர்பு படுத்தும் சட்டத்தை செயல்படுத்துவார். இப்படி பல்வேறு வடிவங்களில் அரசியலமைப்பு சட்டத்தை விதவிதமாகக் கொல்பவர்கள், இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்த தினத்தை அரசியலமைப்பு கொலை தினம் என்றழைப்பது நகைப்புக்குரியது என்றுதான் கருத முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலும், தமிழ்நாட்டு அரசியல் வரலாறும்!
பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?
கிச்சன் கீர்த்தனா : சியா சீட்ஸ் டிரிங்க்
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு தள்ளிப் போகும் துணை முதல்வர் பதவி… துரைமுருகன் காரணமா?
12,000 பேருக்கு வேலை வழங்கும் விப்ரோ! மீண்டும் ஆர்.சி.பி அணிக்கு கேப்டனாக திரும்பும் நட்சத்திர வீரர்!