முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
(மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி சண்முகவேலனின் புதிய பத்தி இது. புதன்கிழமைதோறும் வரும் இந்தத் தொடரில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்களை, ஆளும் வர்க்கத்தினர் எவ்வாறு தங்கள் நலனுக்காக நசுக்கி ஒடுக்குகிறார்கள் என்பதைப் பற்றி அலசுகிறார். இந்த அலசல் லண்டனில் தொடங்கி, பல இடங்களில் பயணப்பட்டு, தூத்துக்குடியில் முடிவுறும். “விவாதிக்கப்படும் பொருளின் அனைத்துத் தரப்புக்களையும் குறிப்பாக பொதுப் புத்தியைத் தாண்டி சாமானியர்களின் நலன் குறித்த பார்வைகளை கவனப்படுத்துவதாக இத்தொடர் இருக்கும்” என்கிறார் முரளி. – ஆசிரியர்)
1948. பிரிட்டனின் காலனிய ஆதிக்கத்தில் கரிபீய நாடுகள் இருந்து வந்த காலம்.
பிரிட்டனின் காமன் வெல்த் நாடுகள் – அதாவது பிரிட்டனின் ஏகாதிபத்தியத்துக்குள் இருந்த நாடுகளில் உள்ள குடிமக்கள் யாவரும், ஏகாதிபத்தியத்தின் குடி உடமைகள். எனவே, காமன்வெல்த் நாடுகளில் இருந்தவர்கள் அனைவரும் பிரிட்டனின் குடிமக்களும் ஆவர். பிரிட்டனில் 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிட்டனின் [நாட்டுரிமைச் சட்டத்தின் – Nationality Act, 1948](http://www.legislation.gov.uk/ukpga/1948/56/pdfs/ukpga_19480056_en.pdf) நான்காம் பிரிவு சொல்வதும் அதுவே. அந்தக் காலகட்டத்தில் கரிபீயத் தீவுகள் எல்லாம் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.
கரிபீயத் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாடிலிருந்து புறப்பட்ட எம்பையர் விண்ட்ரஷ் என்றொரு கப்பல் ஜூன் மாதம் 22 அன்று லண்டனிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டில்பரி கப்பல்துறைக்கு 492 பேருடன் வந்தது . அதில் வந்த அனைவரும் நாட்டுரிமைச் சட்டத்தின்படி பிரிட்டனின் பிரஜைகளாகவே கருதப்பட்டனர். இதற்குப் பின்னர் 1948, 1949, 1956, 1962 ஆகிய ஆண்டுகளில் கரிபீயத் தீவுகளிலிருந்து பலர் பிரிட்டனுக்கு உழைக்க வந்தனர். இவர்களைக் கப்பலில் வலிய ஏற்றி பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லும் முடிவினை எடுக்கக் காரணம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தினால் வந்த ஆள் தேவையும், தொழிற்சாலை, மருத்துவம், சேவை நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டிய தேவையுமாகும்.
வரலாற்றுத் திரிபுகள்
ஆனால், கரிபீயக் கறுப்பர்கள் வேலை தேடிப் பிழைக்க வந்தவர்கள்; வந்த இடத்தில் எந்த வேலையையும் செய்து ‘நம் தாய் நாட்டின்’ செல்வத்தையும் முன்னேற்ற வந்தனர் என்பதே பிபிசி, கார்டியன், டைம்ஸ், டெலிகிராஃப் போன்ற ஊடகங்கள், காலனிய வரலாற்று ஆவணங்கள் ஆகியவை தொடர்ந்து சொல்லிவந்த விவரணை. இது முதல் திரிபு. கரிபீயக் கறுப்பர்கள் உள்ளே அனுமதிக்கப்படக் காரணம் வீழும் பொருளாதாரத்திலிருந்து பிரிட்டனைக் காப்பாற்றுவதே ஆகும்.
நவீன பிரிட்டனின் பன்மைக் கலாச்சார வரலாற்றை எழுதும்போது வெள்ளை பிரிட்டனுடன் கறுப்பர்கள் ஒன்றுபட்டதன் குறியீடாக விண்ட்ரஷ் நிகழ்வு செதுக்கப்படுகிறது. இது இரண்டாவது திரிபு. ரோமர்களின் காலத்திலிருந்தே கறுப்பர்கள் பிரிட்டனில் வசித்துவருவதாக இப்போது ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். ஒரு முக்கியமான உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
இக்னேஷியன் சாஞ்ச்சோ (1729 – 1780), பிரிட்டனில் முதல் முதலாக வாக்களித்த ஒரு கறுப்பர். அடிமைக் கப்பலில் பிறந்த சாஞ்ச்சோ, கோமகன் / கோமகள் மாண்டேகுக்கு அடிமை வேலை செய்ய நேர்ந்தது. சாஞ்ச்சோவின் அறிவுத் திறனை மெச்சிய மாண்டேகு குடும்பத்தினர் அவர் படிக்க, இசைக்க, எனப் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள உறுதுணையாய் இருந்தனர். சாஞ்ச்சோ பின்னாளில் இசைக் கோர்வையாளராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். பிரிட்டனின் கறுப்பின இலக்கியத்தின் முன்னோடி சாஞ்ச்சோ என்றால் அது மிகையாகது.
சாஞ்ச்சோவின் வரலாற்றை இங்கு குறிப்பிடக் காரணம், பிரிட்டனில் உள்ள கறுப்பின வாழ்க்கை வரலாற்றின் ஆரம்பம் காலனியத்தின் கரிசனையாகவும் ஏகாதிபத்தியத்தின் உதவியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் பதி (British Pathé), பிபிசி போன்ற பிரிட்டனின் வரலாறுகளைப் பதிவு செய்யும் ஊடகங்கள் மிகக் கவனமாக, திட்டமிட்டே இதைப் பதிவு செய்துள்ளன எனக் கூறலாம்.
பிரிட்டனில் அடிமை விற்பனை புழக்கத்தில் இருந்தபோது, கறுப்பின அடிமைகள் தப்பித்து ஓடுவது சாதாரணமானதொரு நிகழ்வு. அச்சமயங்களில், கறுப்பர்களைப் பற்றி உள்ளூர் பத்திரிகைகளில் ‘பிடித்து ஒப்படைத்தால் பரிசு’ போன்ற விளம்பரங்கள் Runaway slaves என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ஆனால், கறுப்பின மக்களின் வரவு என்னவோ பிரிட்டனில் காலனியக் கருணையிலிருந்தே தொடங்குகிறது எனக் காலனிய வரலாறு திரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மாற்று விவரணை அவ்வப்போது வெளிவரத் தொடங்கினாலும் காலனியத்தின் பரிவே கறுப்பர்களின் இருப்புக்குக் காரணம் என்பது பிரிட்டனின் பொதுப்புத்தியில் இன்றளவும் இருந்துவருகிறது. இதை எதிர்த்து ஆதாரத்துடன் [விவாதித்தால்](https://www.theguardian.com/commentisfree/2017/aug/12/black-people-presence-in-british-history-for-centuries) வெறுப்புப் பேச்சும் மிரட்டலுமே மிஞ்சும்.
நிற்க. மீண்டும் 1948க்குச் செல்வோம்.
பிரிட்டனில் கரீபியக் கறுப்பர்களின் நிலை
வந்திறங்கிய 492 பேரும் நற்குடி மக்கள் என உள்ளூர் ட்ரினிடாட் நீதிபதி நடத்தைச் சான்றிதழ் வழங்கியிருந்தார். வந்திறங்கிய ட்ரினிடாடியர்களோ சொர்க்க பூமிக்குள் காலெடுத்து வைத்ததாக உணர்ந்தனர் என்று ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால் அக்கனவு அதிக காலம் நிலைத்திருக்கவில்லை. டில்பரியிலிருந்து வாட்டர்லூ (லண்டனின் உள்ள ஒரு ரயில் நிலையம்) வந்தவுடன் உண்மை நிலவரம் தெரிய ஆரம்பிக்கிறது.
வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். பார்களின் வெளியே ‘ஐரிஷ், கறுப்பர், நாய் ஆகியவைகளுக்கு அனுமதி இல்லை’ என்ற தட்டி வரவேற்கிறது. தனியாக நடந்து போனால் கல், குப்பை (மாடி வீட்டு ஜன்னலில் இருந்து), கூட்டமாக வந்து சிறுவர்கள் தாக்குவது எல்லாம் சகஜமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் யாரும் அதிகம் வாழாத அபாயகரமான கிழக்கு லண்டனில் கறுப்பர்கள் அதிகளவில் குடியேறினர். இன்றும் கிழக்கு லண்டனில் அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
இதை நான் இங்குப் பதிவிட முக்கியமான காரணம், பிரிட்டனில் உள்ள சில சோஷலிச தாராளவாதிகளேகூட கரிபீயக் கறுப்பர்கள் காலனியப் பரிவினால் ‘சொர்க்க பூமிக்கு’ அழைத்து வரப்பட்டனர் என்ற ஒரு பிரமையின் மேல்தான் கறுப்பர்களுக்கான ஆதரவு அரசியலை முன்வைக்கின்றனர். அதாவது சுய இனப் பெருமையைக் கலக்காது மாற்றினத்தாருக்கெனத் தனி மதிப்பு, சுய மரியாதை கிடையாது என்கிறார்கள். அது தவறு. வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்க பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது என்பதே உண்மையாகும்.
1948இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கரீபிய ஆள் இறக்குமதி 1971வரை தொடர்கிறது. இதற்கிடையில் கரிபீய நாடுகள் விடுதலை பெற இங்குள்ளவர்கள் தொடர்ந்து பிரிட்டனில் வாழலாம் என 1971இல் குடியேறல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த உள்துறை அமைச்சகம் முன்வரவில்லை. அமைச்சகத்திடம் 1948முதல் 1971 வரை வந்திறங்கிய கரிபீயக் கறுப்பர்கள் பற்றிய எந்தத் தரவும் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை எனப் பின்னர் சொல்லப்பட்டது. அதே சமயத்தில் ட்ரினிடாடிலிருந்து வந்த கறுப்பர்களோ தங்களது வாழ்க்கையை பிரிட்டனில் தொடங்கி வாழ்ந்தது மட்டுமல்லாமல் புதிய தலைமுறைகளும் தோன்றியாகிவிட்டது. இவர்களில் பலரும் அரசாங்க வேலையில் (மருத்துவச் சேவை, கல்வி நிலையங்கள் போன்றவை) பணிபுரிகின்றனர்; வரி கட்டிவருகின்றனர்; தேர்தலில் வாக்களித்தும்வருகின்றனர். ஆனால் இவர்களில் பலரும் சொந்த நாட்டுக்குத் திரும்பப் போகாததாலும், மற்ற வகையான பிரயாணத் தேவை இல்லாததாலும் பாஸ்போர்ட், குடியுரிமை அத்தாட்சி என எதையும் தேடிப் பெறத் தேவையில்லாது இருந்தனர்.
அப்படி இருந்த ஒருவர்தான் எல்வல்டோ ரோமியோ.
63 வயதான எல்வல்டோ ரோமியோவுக்கு ஒரு நாள் பிரிட்டனின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரிட்டனில் கள்ளத்தனமாகத் தங்கியிருப்பதாகவும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தது. விண்ட்ரஷ் குழப்பம் பெரிதாக ஆனதால், அவரது நாடு கடத்தல் ஒத்தி வைக்கப்பட்டு ‘மறுபரிசீலனை’ செய்யப்படுவதாக அரசாங்கம் சொல்லியிருக்கிறது.
61 வயதான பாவ்லெட் வில்சன் கதையோ இன்னும் மோசம். 50 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்துவரும் இப்பெண்மணி கள்ளத்தனமாகத் தங்கியுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனின் மிக மோசமான சிறைகளில் ஒன்றான யார்ல்ஸ்வுட் கள்ளக் குடிபுகல் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசி நேரத்தில் அவரது தொகுதி எம்.பி.யின் முயற்சியால் வெளியிலெடுக்கப்பட்டார்.
இதற்கெல்லாம் காரணம் பிரிட்டனின் தற்போதைய பிரதமர் தெரஸா 2012ஆம் ஆண்டு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம். அத்திருத்தத்தின்படி வீடு வாடகைக்கு விடுபவர்கள், தேசிய மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியோர் தங்கள் வாடிக்கையாளர்களிடம் குடியுரிமைப் பத்திரம் கேட்டு வாங்கி அவர்கள் சட்ட ரீதியான குடிமக்கள்தானா என்று உறுதிப்படுத்த வேண்டும். இது அவர்களின் பொறுப்பே. தவறினால் அவர்கள் தண்டச் செலவு (மிக அதிகம்) கட்ட வேண்டும் என்ற ஒரு விதியைக் கொண்டுவந்தார். இந்த விதி வந்த பிறகு அதுவரை நிம்மதியாக வாழ்ந்துவந்த விண்ட்ரஷ் மக்களுக்குப் பிரச்சினை ஆரம்பமானது. ஏனெனில் அவர்களுக்கான ஆவணங்களை அளிக்காதது உள்துறை அமைச்சகத்தின் கோளாறு. ஆனால் பயனை அனுபவிப்பதோ சாமானியக் கறுப்பர்கள்.
ஏதோ வெள்ளை இன வலதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் இப்படி நிறவெறியும் காலனியப் பெருமையும் பேசுகிறார்கள் என நினைக்க வேண்டாம். ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் உள்ள பழம்பெரும் கல்விமான்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஊடகங்களோ கள்ளத்தனமாகக் குடியேறியவர்களைக் காவல் துறை பிடிப்பதை ரியாலிட்டி டிவி ஷோ பாணியில் சுவாரசியமாக சீரியலாகக் காட்டுகின்றன. வரும் வாரங்களில் இதைப் பற்றி பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன், (https://mobile.twitter.com/muralisvelan) ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
சிறப்புப் பத்தி: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?