பிரதமர் மோடியை சந்தித்த பிடி.ஆர் -பின்னணி என்ன?

Published On:

| By Aara

background of PTR meeting PM Modi

பிரதமர் மோடி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்றிருக்கிற நேரத்தில், அவர் கடந்த முறை மதுரை வந்தபோது அவரை திமுக அமைச்சர் பிடிஆர் சந்தித்தது இப்போது பரபரப்பான விவாதமாகியுள்ளது.

பிப்ரவரி 27 ஆம் தேதி திருப்பூர் பல்லடம் வந்த பிரதமர் மோடி அன்று மாலை மதுரை சென்றார். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் வழிபட்டார்.

பிரதமர் மோடி மதுரையில் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை அமைச்சர் பிடிஆர் சந்தித்தார். இந்த சந்திப்பின் புகைப்படம் உடனடியாக வெளியாகவில்லை.

பிரதமர் நேற்று சென்னை வந்து சென்ற நிலையில் சமூக தளங்களில் பிடிஆர் பிரதமரை சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஏற்கனவே பிடிஆர் பேசியதாக ஒரு டேப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அதன் பின் நிதியமைச்சராக இருந்த பிடிஆர், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் மோடியை அமைச்சர் பிடிஆர் ஏன் சந்தித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்று (மார்ச் 5) சென்னையில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பிடிஆர்,

”இதே அரசு பத்து ஆண்டுகளாக ஒன்றியத்தில் நீடித்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் பல முறை வருகிறாரே தவிர, உண்மையாக மக்கள் பாதிக்கப்படும்போது தமிழ்நாடு வரவில்லை. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் அரசாங்க ரீதியாகவும் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த வாரம் பிரதமர் மதுரை வந்தபோது நான் அவரை சந்தித்தேன். இது தனி நபர் விருப்பமோ அரசியலோ இல்லை.

பிரதமர் ஒரு மாவட்டத்துக்கு வரும்போது அவரை வரவேற்பதற்கும், அவரது கான்வாயில் பயணிப்பதற்கும், அவரை வழியனுப்புவதற்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்துக்கும், மாநகர நிர்வாகத்துக்கும் பொறுப்பு உள்ளது. இது நிர்வாக ரீதியான நடைமுறை.

அந்த வகையில் பிரதமர் மதுரை வந்தபோது முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பிரதமரை சந்தித்தேன். இதில் வேறு அரசியல் இல்லை” என்று கூறினார் அமைச்சர் பிடிஆர்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தக் லைஃப்’ படத்தில் இருந்து முன்னணி நடிகர் விலகல்!

விஜய் தேவரகொண்டாவின் “ஃபேமிலி ஸ்டார்” டீஸர் எப்படி..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel