வைஃபை ஆன் செய்ததும் ஆடியோ புயல் பற்றிய நிதியமைச்சர் பிடிஆரின் ஆங்கில மறுப்பு அறிக்கை இன்பாக்ஸில் வந்து விழுந்தது. பிடிஆரின் அறிக்கையை படித்த பிறகு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பேசுவதாக வெளியான 28 நொடி ஆடியோவில் உதயநிதி, சபரீசன் ஆகியோர் ஒரு வருடத்தில் முப்பதாயிரம் கோடி ரூபாய் சேர்த்துவிட்டதாக இருந்தது. இந்த ஆடியோ வெளியாகி ஓரிரு நாட்கள் வரையிலும் பிடிஆரிடம் இருந்து எதிர்வினை ஏதும் இல்லை.
இந்த நிலையில் சட்டமன்றம் ஏப்ரல் 21 ஆம் தேதி முடிந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இரவு பிடிஆரிடம் இருந்து விரிவான ஆங்கில அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் மின்னம்பலத்திலும் வெளிவந்துள்ளது.
முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட ஆடியோ என்று இதை வர்ணித்துள்ள பிடிஆர், அந்த ஆடியோவை பகுப்பாய்வு செய்து அதன் ரிசல்ட்டையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் 26 நொடிகள் பேசியிருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் வெவ்வேறு உரையாடல்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு… ஒரே உரையாடலாக ஒட்டப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் பிடிஆர்.
அந்த ஆடியோவில் இருக்கும் சொற்களின் ஏற்ற இறக்கம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது என்பதையும் அளவீடுகளோடு குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல… ஓர் உரையாடல் பதிவு செய்யப்படும்போது அதன் பின்னணி சத்தமும் இணையாகவே ஒலிக்கும். அதை பேக் ரவுண்டு நாய்ஸ் என்பார்கள். சாதாரணமாக ஓர் உரையாடலை நாம் கேட்கும்போது இதை பிரித்தறிய இயலாது.
ஆனால், குறிப்பிட்ட ஆடியோவை ஆய்வுக்கு உட்படுத்தினால்… உரையாடலை ஒரு லேயராகவும், பின்னணி சத்தத்தை ஒரு லேயராகவும் பிரிக்க முடியும். அந்த வகையில் இந்த ஆடியோவின் பின்னணிச் சத்தத்தை பிரித்துப் பார்த்து ஆய்வு செய்தபோது அது ஒரே சீராக இல்லை என்றும் பின்னணி சத்தமே பல்வேறு துண்டுகளாக இருப்பதாகவும் பிடிஆர் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்த பிடிஆர், ‘இதுபோன்ற தீங்கிழைக்கும் அவதூறுகளை நான் புறக்கணித்துவிடுவேன். இதுபோன்ற அவதூறுகள் எல்லை மீறுவதாக அமைந்தால் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். அத்தகைய நடவடிக்கைகள் என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பவர்களுக்கு விளம்பரத்தை தேடி தருவதாக அமைந்துவிடும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் இந்த ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது பிடிஆர் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாரா என்ற கேள்வியும் திமுக வட்டாரங்களில் இருந்தே எழுந்தது.
இதற்கிடையே ஏப்ரல் 22 இரவு பெங்களூருவில் இருந்து சென்னை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் சார்பில் மனு அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுத்து அதன்படியே அசைன்மென்ட் கொடுத்துவிட்டு பெங்களூருவுக்குப் புறப்பட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது போலி ஆடியோ என்றால் அதே மாதிரி நான் பேசுவது போல ஓர் ஆடியோவை தயார் செய்து வெளியிடுங்கள் என்று சவால் விட்டுள்ளார். அண்ணாமலையின் அறிவுறுத்தல்படி இன்று (ஏப்ரல் 23) மாலை தமிழக பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

முன்னதாக இன்று பிற்பகல் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் நாங்களும் ஆளுநரை சந்தித்து முறையிடுவோம்’ என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
இப்படி எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக ஆகியவை இந்த ஆடியோ விவகாரத்தை சீரியசாக எடுத்துச் சென்றுகொண்டிருக்கிற நேரத்தில் திமுக இதில் காட்டும் நிதானம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையே யோசிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டு நான் தான் வெளியிட்டேன் என்று யுட்யூப்களில் சிலர் க்ளைம் செய்கிறார்கள். அண்ணாமலை இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துச் செல்கிறார். அதிமுகவும் ஆளுநரை சந்திப்பதாக அறிவிக்கிறது. இதை வைத்து திமுகவுக்கு எதிரான பெரிய அஸ்திரமாக இந்த ஆடியோ விவகாரத்தைக் கொண்டு செல்ல முயல்கிறது பாஜகவும் அதிமுகவும்.
ஆனால் பிடிஆரோ, ‘வழக்கு போட்டால் அது வெகு காலமாக நடக்கும். மேலும் இந்த வழக்கு மூலம் சிலருக்கு வீண் விளம்பரம்தான் கிடைக்கும்’ என்றெல்லாம் தனது அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்.
இதை பார்த்துவிட்டு திமுக முக்கிய நிர்வாகிகள், ‘நாம் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் அதையும் நமக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள்’ என்று தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது லண்டனில் இருக்கும் சபரீசன் வரும் செவ்வாய் கிழமைதான் சென்னை வருகிறார். அவர் சென்னை வந்ததும் பிடிஆருடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்துவிட்டு அதன் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.