உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி அறிந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பொன்முடியின் ரியாக்ஷன் என்ன என்பது குறித்து அவர் தரப்பில் விசாரித்தோம்.
நேற்று டிசம்பர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு… விழுப்புரத்தில் உள்ள தனது இல்லத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே படியிறங்கிக் கொண்டிருந்தார் பொன்முடி. சரியாக காலை 10.10 மணிக்கு சென்னை வழக்கறிஞரிடமிருந்து போன், ‘சார் ஃபஸ்ட் கேஸ் நம்ம கேஸ்தான். இன்னும் கொஞ்ச நேரத்துல தீர்ப்பு சொல்லிவிடுவாங்க’ என்று சொல்லியிருக்கிறார் வழக்கறிஞர்.
‘சரி சரி…’என்னனு பாத்துட்டு சொல்லுங்க’ என்றபடியே கீழே வந்த பொன்முடி காரில் ஏறி நகர திமுக அலுவலகம் சென்றார். அங்கே பேராசிரியர் அன்பழகன் பிறந்த தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்றபோதுதான், சென்னையிலிருந்து மீண்டும் போன் வந்திருக்கிறது. ‘சார்… கன்விக்ட் பண்ணிட்டாங்க’ என்றதும் அதிர்ந்து போனார் பொன்முடி.
கண்கள் சிவந்துபோனது. அவரது முகத்தைப் பார்த்த கார் ஓட்டுநர் சங்கர், ’அண்ணா வீட்டுக்கு போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார்.
’இல்லல்ல… நிகழ்ச்சிக்கு போய்யா’ என்று பொன்முடி சொல்லி அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர், அமைச்சர் பொன்முடி மட்டும் சுருக்கமாக பேசிவிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் நிகழ்ச்சிக்கு சென்றார். மீண்டும் போன். அந்த போனுக்கு பதிலளிக்கும்போதுதான், ‘நானே சென்னைக்கு வர்றேன்’ என்று சொல்லி துண்டித்தார்.
வீட்டு அருகில் சென்றபோது முதல்வர் ஸ்டாலினிடமிருந்து போன் வந்துள்ளது. உடனே ஓட்டுநர் சங்கர் காரை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் அவசரமாக கீழே இறங்கினார்கள். ஓட்டுநர் மட்டும் அவரது சீட்டில் இருந்தார். சில நிமிடங்கள் ஸ்டாலின் பொன்முடியிடம் பேசினார். ‘சரிங்க… சரிங்க…’ என்று சொல்லிக் கொண்டே கண் கலங்கினார் பொன்முடி.
இதற்கிடையே பொன்முடியின் மகனான எம்பி கௌதம சிகாமணியும் தந்தையிடம் பேசினார். ’மதிய பிளைட்ல சென்னை வந்துடுவேன்ப்பா… நீங்களும் சென்னை வந்துடுங்க’ என்று சொல்லியிருக்கிறார் மகன் கௌதம சிகாமணி எம்பி.
உடனடியாக தனது மனைவி விசாலாட்சியோடு சென்னைக்குப் புறப்பட்டார் பொன்முடி.
இந்த வழக்கு குறித்து முதலமைச்சரிடம் என்ன சொல்லப்பட்டதோ அதுவே தான் அமைச்சர் பொன்முடியிடமும் வழக்கறிஞர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, ’சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு உயர்நீதிமன்றத்தாலும் உறுதிப்படுத்தப்படும். நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள்’ என்பது தான் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து பொன்முடிக்கு சொல்லப்பட்ட நம்பகமான தகவல்.
அதனால்தான் டிசம்பர் 19ஆம் தேதி தன்னுடைய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என்று தெரிந்த நிலையிலும் அந்த நேரத்தில் விழுப்புரம் மற்றும் தனது தொகுதியான திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் அரசு நிகழ்ச்சிகளில் ரிலாக்ஸ் ஆக கலந்து கொண்டிருந்தார். காரில் சென்னை செல்லும்போதே வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
தகவல் கேள்விப்பட்டு சில அமைச்சர்கள் பொன்முடியிடம் பேசுவதற்காக அவருக்கு போன் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் பொன்முடி பேசவில்லை. ‘வழக்கறிஞர்களோடு ஆலோசனையில் இருக்கிறார், அப்புறம் பேசுறதா சொன்னாரு’ என்று அவரது உதவியாளர்கள் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர். சென்னையில் பொன்முடியின் வீட்டுக்கு கட்சி நிர்வாகிகள் சிலர் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள். அவர்களையும் நேற்று பொன்முடி சந்திக்கவில்லை.
சீனியர் அமைச்சர்கள் சிலர் பொன்முடிக்கு போன் போட்டு தொடர்ந்து பேச முயன்றிருக்கிறார்கள். ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் ஃபோன் செய்த போது மட்டும் அவரிடம் பேசியிருக்கிறார் பொன்முடி.
சென்னை வீட்டில் நேற்று வழக்கறிஞர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டபோது திடீரென ஆளுநர் விவகாரம் பற்றியும் பேசியிருக்கிறார் பொன்முடி.
“நான் உயர் கல்வித் துறை அமைச்சர்ன்ற பொறுப்புல இருந்து தமிழ்நாடு அரசோட கொள்கைகள், திமுகவுடைய கொள்கைகளை பேசுறேன். அதையே அமைச்சகம் மூலமா செய்யுறேன். அது கவர்னருக்கு பிடிக்க மாட்டேங்குது. ஏதோ தனிப்பட்ட முறையில் அவரை நான் தாக்குறதா நினைச்சுக்கிட்டிருக்காரு’ என்று விவாதத்தின் இடையே கூறியிருக்கிறார் பொன்முடி.
அடுத்தடுத்த சட்ட ரீதியான ஆலோசனைகளுக்கு இடையே நம்பிக்கை குறைந்து காணப்பட்ட பொன்முடியை அவரது மனைவியான விசாலாட்சிதான் தைரியப்படுத்தியுள்ளார்.
‘கவலைப்படாதீங்க. சட்டரீதியாக அப்பீல் போய் பார்த்துக்கலாம்’ என்று தனது கணவரும் அமைச்சருமான பொன்முடிக்கு தைரியம் சொல்லி இருக்கிறார் விசாலாட்சி என்கிறார்கள் பொன்முடிக்கு நெருக்கமானவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி, வேந்தன்
சனிப்பெயர்ச்சி : திருநள்ளாறில் விடிய விடிய கோயில் நடை திறப்பு!
IPL2024: பிரீத்தி ஜிந்தாவுக்கே விபூதி அடித்த சென்னை கிங்ஸ்… ஏலத்தில் நடந்த தரமான சம்பவம்!