வைஃபை ஆன் செய்ததும் அமித் ஷா, எடப்பாடி ஆகியோரின் சிறு வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மார்ச் மாதம் முழுதும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான போராட்ட மாதமாகவே அரசியலில் அமைந்துவிட்டது. மார்ச் 5 ஆம் தேதி பாஜக மாநில ஐடிவிங் தலைவர் நிர்மல்குமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேர்ந்தார். அவரோடு கொத்துக் கொத்தாக பாஜக புள்ளிகள் அதிமுகவில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் அதிமுகவை எதிர்த்து பகிரங்கமாக கருத்துகளை கூறினார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. அதோடு உள்ளரங்க நிர்வாகிகள் கூட்டத்தில், ‘பாஜக அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு தொண்டராக பணியைத் தொடர்வேன் என்று பேசினார் அண்ணாமலை.

இந்த சர்ச்சைகளுக்கும் சலசலப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய அதிகார சக்தியுமான அமித் ஷா மார்ச் 29 ஆம் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றின் கான்க்ளேவ் நிகழ்வில் பேசிய அமித் ஷா…தமிழ்நாடு, கேரளா பற்றிய கேள்விக்கு, ‘நாங்கள் வலிமை குறைந்த இடங்களில் கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு இருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி தொடர்கிறது’ என்று கூறினார்.
இதையடுத்து நேற்று (மார்ச் 30) சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது.
கடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் நாங்கள் கூட்டணியாகத்தான் போட்டியிட்டோம், வர இருக்கும் மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும்’ என்று கூறினார்.
எடப்பாடியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு அவரிடம் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் போன்றவர்கள், ‘என்னண்ணே…கூட்டணி பத்தி கேட்டால் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்’னு சொல்லிட வேண்டியதுதானே… இப்பவே ஏன் பாஜகவோட கமிட் ஆகணும்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

அதாவது கடந்த காலங்களில் பாஜக கூட்டணியை கடுமையாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்தவர்கள் சி.வி. சண்முகமும், முனுசாமியும். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததில் இருந்தே இந்த மோதல் தொடங்கிவிட்டது. சில மாதங்களுக்கு முன், விழுப்புரத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், ‘அடுத்த மக்களவைத் தேர்தலில் பிஜேபியும் திமுகவும் கூட்டணி அமைக்கும்’ என்று பேசினார். இதற்கு பாஜக கடுமையாக எதிர்க்கருத்துகளை வெளியிட்டது.
போனவாரம் சட்டமன்றத்திலேயே அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் மூத்த சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி, ‘உங்களுக்கும் எங்களுக்கும்தான் இங்கே போட்டி’ என்று ஆளுந்தரப்பான திமுகவை பார்த்து பேசினார். அதாவது தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி, இடையில் வேறு யாரும் இல்லை என்று பாஜகவுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார் கே.பி.முனுசாமி.
இந்த பின்னணியில்தான் இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம், ‘பாஜகவுடன் கூட்டணி பற்றி இப்போதே நாம் ஏன் கமிட் செய்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு எடப்பாடி அவர்களிடம், ‘நான் பொதுச் செயலாளராகி விட்டேன். கட்சி இப்போதுதான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது. கட்சியை வளர்க்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. பன்னீர் செல்வம் 2024 வரை நம்மை விடாமல் தொந்தரவு செய்வார். கோர்ட்டில் நாம் வெற்றி பெற்றாலும் கடைசியில் தேர்தல் ஆணையம் என்ற கிணற்றை நாம் தாண்டியாக வேண்டும்.
அதற்கு அவங்க ஒத்துழைப்பு அவசியம். அதனால இப்போதே ஏன் கூட்டணி இல்லை என்று சொல்லி பிஜேபியை பகைத்துக் கொள்ளவேண்டும்?,
தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியானபிறகு அதன் பின் கூட்டணி பற்றி அப்போதைக்கு முடிவெடுப்போம். இப்போது இப்படித்தான் அறிவிக்க வேண்டும். நீங்களும் பாஜகவுக்கு எதிராக இப்போது கடுமையாக பேசாதீர்கள்’ என்று சொல்லியனுப்பியுள்ளார் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?
IPL 2023: சிஎஸ்கே…பலம்? பலவீனம்?