திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7
கழகத்தில் இளையோருக்கும் சீனியர்களுக்குமான உள்பனிப்போர் தொடர்ந்து வருவதை ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அந்தப் பொறுப்பாளர்களில் பலர், ‘சின்னப் பயல்கள்’ என்று பல மாவட்டச் செயலாளர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள். இதற்கு முன்னரே ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்யச் சொல்லி 12 பேர் கொண்ட ஓர் படையை ஸ்டாலின் அமைத்தார்.
இதை முதன் முதலில் மின்னம்பலத்தில், [ஸ்டாலின் அமைத்த 12 பேர் படை!] என்ற தலைப்பில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியிட்டோம்.
இ.கருணாநிதி பல்லாவரம், மு.பெ.கிரி செங்கம், இன்பசேகரன் பென்னகரம், ஈஸ்வரப்பன் ஆற்காடு, எஸ்.ஆஸ்டின் கன்னியாகுமரி, ஜெ.ரவிச்சந்திரன் எழும்பூர், வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம், கோவிசெழியன் திருவிடைமருதூர், அன்பில் மகேஷ் திருவெறும்பூர், எழிலரசன் காஞ்சிபுரம், டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி, தாயகம் கவி என 12 எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் வீட்டுக்கு அழைக்கப்பட்டு நடந்த ரகசியக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது என்னவென்றால், “திமுகவுல சீனியர்கள், பெருந்தலைகள் நிறைய பேர் இருக்காங்க. சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. அவங்க என் முன்னால ஒண்ணு பேசுறாங்க, வெளியில போய் ஒண்ணு பேசுறாங்க. கட்சியில சில வேகமான நடவடிக்கைகளுக்கு அவங்க இடைஞ்சலாதான் இருக்காங்க. ஆனா அவங்கள என்னால பகிரங்கமா குத்தம்சொல்ல முடியாது” என்று சொல்லிய ஸ்டாலின், பூத் கமிட்டி பற்றிய உத்தரவுகளைப் போட்டார்.
இந்த 12 பேர் இரண்டிரண்டு டீமாக பிரிந்து தமிழகம் முழுதும் உள்ள மாவட்டச் செயலாளர்களை சந்தித்து பூத் கமிட்டி பணிகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் வேலூர் மத்திய மாவட்டத்துக்கு இந்த பூத் கமிட்டி குழு ஆய்வுக்கு வந்துள்ளது.
வேலூர் மத்திய மாவட்டத்துக்கான பூத் கமிட்டி கள ஆய்வு டீமில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. வி.பி.எம். எழிலரசன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் ஆகிய இருவரும்தான் இருந்தனர். துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் நந்தகுமாருடன், ஸ்டாலினின் நிழல் போன்ற மகேஷ் டீம் பூத் கமிட்டி பற்றி ஆலோசனை நடத்தியது. ஆய்வு நடத்தியது.
தான் நியமித்த இந்த பூத் கமிட்டியிடம் அவ்வப்போது ஸ்டாலின், ‘பூத் கமிட்டி பணிகள் எப்படி இருக்கின்றன?’ என்று விசாரித்திருக்கிறார். டீம் சொன்ன தகவல்களின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகள் 50% தான் முடிந்திருக்கிறது என்பதே உண்மை. மேலும், பல மாவட்டச் செயலாளர்கள் பூத் கமிட்டி டீம் உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பதும் ஸ்டாலின் முன் வைக்கப்பட்ட புகார். இந்த நிலையில்தான் வேலூர் மாவட்டத்தில் தனது ஆய்வு கடந்த மாதம் செய்துவிட்டுவிட்டுப் போனது பூத் கமிட்டி கூட்டம்.
இப்படி ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் சிறப்புரை ஆற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்முறை வேலூர் நாடாளுமன்ற இடம் திமுகவுக்கா, கூட்டணிக்கா, திமுகவுக்கு என்றால் யாருக்கு? துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கா வேறு யாருக்குமா?
இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் இப்போதைய அரசியல் சூழ் நிலைக்கும் துரைமுருகன் இந்த கூட்டத்தில் விரிவாக பதில் அளிப்பார் என்று கடைக்கோடி தொண்டன் முதல் தலைவர் ஸ்டாலின் வரைக்கும் காத்திருந்தனர். ஆனால் கூட்டம் வேலூர் மாநகர திமுக அவைத் தலைவர் விஜயசங்கரின் மறைவால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் நடக்க இருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டத்தில் துரைமுருகன் ஆற்றப் போகும் உரை முக்கியத்துவம் வாய்ந்தது
இதை வேலுர் மாவட்ட எல்லையோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. திமுகவின் தொண்டன், தலைமை, கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், திமுக அணிக்கு வரத் துடிக்கும் கட்சிகள் என்று பல்வேறு வட்டங்களிலும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இந்த கலந்தாய்வுக் கூட்டம்.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]