ஆரா
“2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு துரைமுருகன் யாருக்கு சீட் கேட்டார் என்பதும், கலைஞர் அதைக் கடைசி நேரத்தில் நிராகரித்தபோது என்ன நடந்தது என்பதும் ஸ்டாலின் அறிந்த செய்திதான்” என்று மினி தொடரின் கடந்த பாகத்தை முடித்திருந்தோம். அதைப் பார்த்துவிட்டு வேலூரில் இருந்து திமுகவினரும், முஸ்லிம் லீக் கட்சியினரும் பேசினார்கள், சில திருத்தங்களைச் சொன்னார்கள்.
“திமுகவுக்குச் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவராகிவிட்டார். ஆனால், வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் இன்னமும் செயல் தலைவராகவே இருக்கிறார் ஸ்டாலின். இம்மாவட்டத்தின் தலைவர் துரைமுருகன்தான். முஸ்லிம் லீக், காங்கிரஸ் இரண்டும் பழைய கஸ்டமர்கள் என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார் துரைமுருகன். பழைய கஸ்டமரின் கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை” என்று முன்னுரை கொடுத்துவிட்டு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
“2004 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லிம் லீக்குக்கு கொடுத்தார் கலைஞர். அப்போது துரைமுருகனின் வேலையை சும்மா சொல்லக் கூடாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் மொய்தீனுக்காக உழைத்தார் துரைமுருகன். பரப்புரை செய்து செய்து அவர் குரலே அப்போது மாறிவிட்டது. அந்த அளவுக்கு உழைத்தார். அவரது உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. 2009 தேர்தலிலும் முஸ்லிம் லீக் வேலூரில் வென்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அப்போது சிட்டிங் எம்.பி.யாக இருந்த அப்துல் ரகுமான் இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது எம்.பி. என்று ஆங்கிலப் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டார். அதேநேரம் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை வேலூர் தொகுதியில் போட்டியிட வைக்க விரும்பினார். நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கதிர் ஆனந்த் போட்டியிட வேண்டி திமுக தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
இந்தத் தகவல் அறிந்து முஸ்லிம் லீக் கட்சியினர் ஸ்டாலினிடம் சென்று, ‘எங்களால் திமுகவில் குழப்பம் வேண்டாம். அதனால் இந்த முறை வேலூர் வேண்டாம். மயிலாடுதுறை அல்லது ராமநாதபுரம் கொடுங்கள்’ என்று கேட்டனர். ஆனால் ஸ்டாலினோ, ‘இல்லை… சிறந்த எம்.பி. எனப் பெயரெடுத்திருக்கிறீர்கள். வேலூரிலேயே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டார்.
துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் அப்போது உறவு எப்படி இருந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் வேலூர் வேண்டாம் என்று சொல்லியும் எங்களிடமே கொடுத்தார்கள். 2009 களத்துக்கும் 2014 களத்துக்கும் அதிரடியான வித்தியாசங்களை எங்களால் உணர முடிந்தது.
வேலூர் மாவட்ட திமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தார்கள். சில திமுக நிர்வாகிகள் நேரடியாக, முஸ்லிம் லீக்குக்கு வேலை செய்யாமல் பாஜக கூட்டணியில் நின்ற புதிய நீதிக் கட்சி ஏ.சி. சண்முகத்துக்கு வேலை செய்தார்கள். எனவே இந்தியாவிலேயே சிறந்த எம்.பி. என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் எம்.பி. தோற்றார். இது கூட்டணிப் பிரச்சினையல்ல, திமுகவின் பிரச்சினை. அதுதான் இப்போதும் தொடர்கிறது” என்று முடித்தனர்.
2014இல் கதிர் ஆனந்துக்குக் கிடைக்காத சீட், 2019இல் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய திமுகவுக்குள் நிலவும் கேள்வி.
துரைமுருகன் துணை முதல்வர்
வேலூர் மாவட்ட திமுகவிலுள்ள துரைமுருகன் ஆதரவாளர்கள், “இப்போது இருக்கும் திமுகவின் மூத்த நிர்வாகிகளில் பொதுச் செயலாளர் பேராசிரியருக்கு அடுத்து துரைமுருகனே மூத்தவர். கட்சியில் துரைமுருகனின் ஜூனியர்களின் வாரிசுகள் எல்லாம் ஆளாகிவிட்டார்கள். ஆனால், கதிர் ஆனந்துக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. அவர் கட்சியில் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். அதனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு வேலூர் சீட், சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த பின் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி. இதுதான் இப்போது எங்கள் நோக்கம்.
சென்ற முறை முஸ்லிம் லீக்கே வேண்டாம் என்று சொல்லியும் அவர்களுக்கு சீட் கொடுத்தது தலைமை. இந்த முறை அப்படி விடமாட்டோம். இப்போதே கதிர் ஆனந்துக்கு வேலை செய்ய தொடங்கிவிட்டோம். இப்போது தளபதி எதிர்க்கட்சித் தலைவர், துரைமுருகன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர். ஆளுங்கட்சியானால் தளபதியை முதல்வர் ஆக்குவோம், எங்கள் துரைமுருகனை துணை முதல்வர் ஆக்குவோம்” என்கிறார்கள்.
இந்தத் தகவல் எல்லாம் தெரிந்து முஸ்லிம் லீக் கட்சியினர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் வேலூர் வேண்டாம் திருச்சியைக் கேட்கலாம் என்று இப்போதே லீக்கில் இருந்து குரல் லீக் ஆகிறது.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]