திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4

அரசியல் சிறப்புக் கட்டுரை

– ஆரா

1960களில் கலைஞர் திமுகவில் தலையெடுத்தபோது படித்தவர்கள் அணி, படிக்காதவர்கள் அணி என்று இரு அணிகள் இருந்தன என்று திமுகவின் ஆதிவாசிப் பிரமுகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

படித்தவர்கள் அணியில் பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், இரா.செழியன், என்.வி.நடராஜன் போன்றவர்கள் இருந்தார்கள். படிக்காதவர்கள் அணியில் கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்ட பற்பலர் இருந்தனர். பிற்பாடு திமுகவை, ‘படிக்காதவர்கள்’ அணியில் இருந்த கலைஞரும், எம்ஜிஆரும்தான் திருப்புமுனைகளுக்கு இட்டுச் சென்றனர்.

படிக்காதவர்கள் அணியில் இருந்த கலைஞர் 50 வருடங்களாக திமுகவின் தலைவராக இருந்தார். படித்தவர்கள் அணியில் இருந்த பேராசிரியர் அன்பழகன் அவருடைய தலைமையை ஏற்று திமுக பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார், தொடர்கிறார். நேற்றைய செய்தி இன்றைய வரலாறு அல்லவா?

அதன் பிறகு திமுக எவ்வளவோ அணிகளையும், அதனால் ஏற்பட்ட பிணிகளையும் சந்தித்திருக்கிறது. ஆனால் இப்போதைய நிலைமையில், அதாவது ஸ்டாலின் தலைவராகப் பதவியேற்ற பிறகு சீனியர்களுக்கும், இளையோருக்கும் இடையே பெருத்த ஓர் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. (திமுகவில் இளையோர் எங்கே என்று சிலர் கேள்வி கேட்பார்கள். அதற்குத் தனி கட்டுரை காண வேண்டும். இங்கே இளையோர் என்றால் சீனியர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் என்று கொள்க)

இப்போது இருக்கும் திமுக மாவட்டச் செயலாளர்களில் பலர் பற்பல வருடங்களாக இருப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் குறுநில மன்னர்களைப் போல இருப்பவர்கள். சில வருடங்களுக்கு முன் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புகளை எல்லாம் பிரித்து கிழக்கு, மேற்கு, மாநகர், புறநகர் என்று பிரித்து 65 மாவட்டங்களாக மாற்றினார் ஸ்டாலின். இதில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் பெரும்பாலும், நடுத்தர வயதினர்.

அதேபோல சமீப தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு முழுக்க முழுக்க ஸ்டாலின் கைகளுக்குச் சென்ற நிலையில் தனக்கான ஆதரவு வட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் அதிகமாகவே உருவாக்கினார் ஸ்டாலின். இதெல்லாம் இன்று வளர்ந்து நிற்கும் நிலையில், சீனியர்களோ திமுகவில் புதிய மாவட்ட மன்னர்கள் உருவாவதை விரும்பவில்லை.

What is Happening in DMK Mini Series 4

சீனியர்கள் மீதான புகார்களை முற்று முழுதாக விசாரித்து அவர்களைப் புறந்தள்ளவே கள ஆய்வு என்ற நிகழ்வை நடத்தினார் ஸ்டாலின்.

“திமுகவின் வளர்ச்சிக்காகவே இந்தக் கள ஆய்வு நடத்தப்படுகிறது. கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது பற்றி மனம்திறந்து சொல்லுங்கள். ஏன், என்னைப் பற்றிய புகார்கள் இருந்தாலும் சொல்லுங்கள். கள ஆய்வு நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளில் உங்கள் புகார்களை எழுதிப் போடுங்கள். அவை மிக ரகசியமாக வைக்கப்படும். என் வீட்டுக்குக் கொண்டு சென்று நான் மட்டுமே அவற்றைப் பார்ப்பேன்.

யார் மீது புகார் சொல்லியிருக்கிறீர்கள், அந்தப் புகார் எத்தன்மையது என்பது பற்றி ஒரு விசாரணைக் குழு உங்கள் மாவட்டங்களுக்கு வரும். அந்த விசாரணைக்கு யார் வருகிறார்கள் என்பது உங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் வருவார்கள். அவர்கள் தரும் விசாரணை அறிக்கைக்குப் பின் நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் செயல் தலைவர் என்ற பதவியில் இருந்து பயன் இல்லை” என்று கள ஆய்வு நிகழ்ச்சிகளில் மிகவும் மனம்திறந்து பேசினார் செயல் தலைவர் ஸ்டாலின்.

பழந்தின்று கொட்டை போட்ட பல மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராகப் பல புதிய இளங்கன்றுகள் தைரியமாக புகார் சொன்னார்கள். கள ஆய்வில் பல வேட்பாளர்கள், ’நாங்களெல்லாம் ஜெயித்திருந்தால் இந்நேரம் நீங்கள் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பீர்கள்’ என்றும் தாங்கள் யாரால் தோற்கடிக்கப்பட்டோம் என்றும் அழுதுகொண்டே ஸ்டாலினிடம் முறையிட்டார்கள். மேலும் திமுக போட்டியிட வேண்டிய பல இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்குத் ‘தள்ளிவிடப்பட்டதில்’ மாவட்ட மன்னர்களின் உட்கட்சி கோஷ்டி அரசியல் எந்த அளவுக்கு இருந்தது என்பதை எல்லாம் விவரித்தனர்.

ஸ்டாலினை நம்பி பல மாவட்டச் செயலாளர்கள் மீதே புகார் சொன்ன அடுத்தகட்ட நிர்வாகிகள் இன்று அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் சிற்சில நடவடிக்கைகளோடு தொடங்கிய கள ஆய்வு முடிவுகள் அதோடு நின்றுவிட்டன. நடவடிக்கைக்கு உரியவர்களின் பட்டியலில் பல மாவட்ட மன்னர்கள் இடம்பெற்றிருந்ததால் நடவடிக்கைகளை தள்ளிப்போட்டார் ஸ்டாலின். கடந்த ஆகஸ்ட்டில் கலைஞர் மறைவுக்குப் பின் தலைவர் ஆனார். செயல் தலைவராக இருந்து கள ஆய்வு நடத்திய ஸ்டாலின் தலைவர் ஆனபின், யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க நினைத்தாரோ, அவர்களை எல்லாம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்.

இதை அப்பட்டமாக உணர்த்தியது கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த கூட்டம். 2019 மக்களவைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டிருக்கிற தொகுதிப் பொறுப்பாளர்களின் கூட்டம், மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் தொடங்கியது. இதுபற்றி முழுமையாக நாம் மின்னம்பலத்திலேயே செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

What is Happening in DMK Mini Series 4

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் பொறுப்பாளர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நியமனம் வெளியானபோதே திமுகவின் சீனியர் மாவட்டச் செயலாளர்கள் இதை ரசிக்கவில்லை. தங்கள் வட்டாரத்தில் வெளிப்படையாகவே திமுக தலைமையின் நடவடிக்கையை விமர்சித்தனர்.

ஏனெனில் தொகுதியில் இதுதான் நிலைமை என்று மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்குக் கொடுக்கும் அறிக்கைக்கு மாற்றாக, பரிந்துரைக்கும் வேட்பாளர்களுக்கு மாற்றாக அல்லது எதிராக தொகுதிப் பொறுப்பாளர்கள் ஓர் அறிக்கை கொடுக்கக் கூடும். மாசெ.க்களின் உட்கட்சிப் பூசல்களால் சட்டமன்றத் தேர்தல் போல கட்சிக்குப் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் நினைத்திருக்கக்கூடும். அதனால்தான் அவர் பொறுப்பாளர்களை நியமிக்கிறார்.

ஏனெனில் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு துரைமுருகன் யாருக்கு சீட் கேட்டார் என்பதும், கலைஞர் அதைக் கடைசி நேரத்தில் நிராகரித்தபோது என்ன நடந்தது என்பதும் ஸ்டாலின் அறிந்த செய்திதான்.

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *