ஆரா
கலைஞர் திமுக தலைவராக இருந்தபோது பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகன் சில முறை அவரது முடிவுகளில் முரண்பட்டிருக்கிறார். ஆனால், அதை நேராக கோபாலபுரம் சென்று கலைஞரிடம் நேரடியாகச் சொல்லிவிடுவார். உங்களுடைய இந்த முடிவு இன்ன விளைவை ஏற்படுத்தும் என்று நேரடியாகச் சொல்லிவிடுவார்.
கலைஞர் அதற்கு விளக்கம் கொடுப்பார். தேவையெனில் தன் முடிவில் மாற்றம் செய்வார். இல்லையெனில் அம்முடிவை பேராசிரியரும் ஏற்றுக்கொள்ளும்படி பதில் அளித்துவிடுவார். இருவரும் இணைந்து கட்சியை நடத்திய பல தருணங்களில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது.
சில முறை, தலைவரின் இந்த முடிவைப் பேராசிரியர் கடுமையாக எதிர்ப்பார் என்று மூத்த நிர்வாகிகள் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் மற்றவர்களை விட அந்த முடிவை அதிகமாக வரவேற்றுப் பேசிவிட்டு அம்முடிவின் நியாயத்தை வலியுறுத்திவிட்டு அமர்வார் பேராசிரியர்.
கலைஞருக்கும் பேராசிரியருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, தற்போது ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையே இல்லை என்று குறிப்பிடுகிறார் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.
பொதுச் செயலாளர் அன்பழகன் இப்போது உடல் நிலை குன்றியிருக்கிறார். அதனால் பெரும்பாலும் மிக முக்கியமான விஷயங்களை மட்டும் அவரிடம் வீட்டுக்குச் சென்று ஆலோசித்துவருகிறார் ஸ்டாலின். மற்றபடி பல முடிவுகளை துரைமுருகன் போன்ற சீனியர்களிடம் விவாதித்துவருகிறார்.
இந்த நிலையில் துரைமுருகன் கூட்டணி குறித்து அளித்த பேட்டிதான் ஸ்டாலினுக்கும், சீனியர்களுக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை திமுகவுக்குள் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு துரைமுருகன் தரப்பினர் அழகாக விளக்கம் அளிக்கிறார்கள்.
“சார்… துரைமுருகன் பேசின கருத்து முழுக்க முழுக்க ஸ்டாலின் கருத்துதான். பேசின சமயம் நெருடலானதா இருக்குனு நினைச்சிருக்கலாமே தவிர மதிமுக, விடுதலை சிறுத்தைகள் விஷயத்துல ஸ்டாலினின் அடிமனக் கருத்து துரைமுருகனோட கருத்துதான்” என்று தொடங்கிப் புதிய விளக்கம் அளிக்கிறார்கள்.
“வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல அணிச் சேர்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்க்கவே முடியல. பல அணிகள் பற்றிய யூகச் செய்திகள் வந்துகிட்டிருக்கு. திமுக தலைமையில ஒரு அணியை ஃபார்ம் பண்ணி ரொம்ப நாளா ஆர்பாட்டம், பொதுக்கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம்னு தலைவர் தளபதி நடத்திக்கிட்டு வர்றாரு. காவிரி உரிமை மீட்பு நடைப் பயணத்துலகூட கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் சேர்த்துக்கிட்டுத்தான் நடந்தாரு. அவர் கூட்டணினு நினைக்கிறாரு. ஆனா கூட்டணியில இருக்குற சில தலைவர்கள் அப்படி நினைக்கலையே?
திமுக கூட்டணியில இருந்துக்கிட்டே ஆல்டர்நேட்டிவ் அலையன்ஸ் பத்தியும் பேசிக்கிட்டிருக்காங்க. திருமாவளவன் அவ்வப்போது முதல்வரப் பாக்குறாரு. அவர் ஒரு கட்சித் தலைவர். அவர் முதலமைச்சரப் பாக்குறதுல தப்பு இல்ல. ஆனா அதுக்குப் பின்னாடி திமுகவுக்குக் கிடைக்கிற செய்திகள் அவ்வளவு நல்லதா இல்ல. இப்படித்தான் கொஞ்ச நாள் முன்னாடி தினகரன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கொடுத்த பேட்டியில, திமுக பாஜக தவிர பல கட்சிகள் என்கூட பேசிக்கிட்டிருக்காங்கன்னு ஓப்பனா சொல்லியிருக்காரு.
அப்ப என்ன அர்த்தம்? திமுக அணியில இருப்பாங்க. ஆனா தேர்தல் நெருங்க நெருங்க மத்த ஆப்ஷன்ஸ் பத்தியும் பேசிக்கிட்டு கதவைத் திறந்து வைச்சிருப்பாங்க. அவங்கள நம்பி திமுக ஒரு முடிவெடுத்து கடைசி நேரத்துல அவங்க வேற மாதிரி முடிவெடுத்துட்டா? அதுக்காக துரைமுருகன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் தான் இது.
அரசியல்ல நம்ம கதவைத் திறக்கறதைவிட எதிரியின் கதவை அடைக்குறதுதான் முக்கியம். துரைமுருகன் கொடுத்த பேட்டி மூலமா திமுக கூட்டணிக் கட்சிகள்ல சில கட்சிகளை இழுக்கறதுக்காக வேற கட்சிகள் செய்த முயற்சிக்கான கதவு அடைக்கப்பட்டிருக்கு” என்கிறார்கள்.
இப்படிப் பல விளக்கங்கள் தரப்பட்டாலும் துரைமுருகன் போன்ற சீனியர்களுக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான ஒரு மெல்லிய கோடு இந்த காட்சிகள் மூலம், ‘ஜூம்’ ஆகியிருக்கிறது.
துரைமுருன் போட்டு உடைத்த கருத்தில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு கருத்தைத் தலைமையைத் தாண்டிப் பொதுவெளியில் பேசிவிட்டார் என்பதற்காகவே இருவருக்கும் இடையே இந்த வருத்த மேகங்கள் திரண்டிருக்கின்றன.
உதிரி பாகங்களாகக் கழன்று கிடக்கும் அதிமுகவில்கூட, “கூட்டணி பற்றி எடப்பாடியும், ஓ.பன்னீரும் இணைந்து முடிவெடுப்பார்கள்’’ என்றே பலரும் சொல்கிறார்கள். அமைச்சர்கள் வாயைத் திறந்து பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டாலும் கட்சி என்ற அளவில் அவர்கள்கூட இன்னும் எடப்பாடியை எதிர்த்துப் பேசவில்லை
எடப்பாடியைவிட எந்த விதத்தில் குறைந்தவர் ஸ்டாலின் என்பதுதான் திமுகவில் இளையோரிடையே எழுந்திருக்கும் கேள்வி.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]