திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 22
ஆரா
திமுக தலைவர் பதவி ஏற்றதும் ஸ்டாலின் எதிர்கொள்ள இருக்கும் முதல் தேர்தல் வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். ஆனால், எதார்த்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் இது இரண்டையுமே திமுக சார்பாக முன்னின்று நடத்திக் காட்டியவர் ஸ்டாலின்தான். 2014 தேர்தலில் கலைஞர் தெம்பாக இருந்தார். வேட்பாளர் தேர்வுகளில் ஆலோசனைகள் சொன்னார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் உடல்நலம் சுழன்றடிக்கும் பிரச்சாரத்துக்கு ஒத்துழைக்கவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவின் மூன்று வருட அதிருப்தியை அறுவடை செய்யும் நிலையில் திமுக இல்லை. கடைசிக் கட்டத்தில் மோடியா, லேடியா என்ற முழக்கத்தை முன்வைத்தும் பணப் புழக்கத்தைப் பின்வைத்தும் தேர்தல் களத்தை அதிமுக சந்தித்தது. 37 தொகுதிகளை வென்றது.
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று இன்று ஆட்சியில் இருந்திருக்க வேண்டியது. ஆனால் தனக்கு வெற்றி கிடைக்குமென்றால் அது எதிரிகளின் பிளவில்தான் என்பதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா மக்கள் நலக் கூட்டணியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். இப்படி ஒரு கூட்டணி உருவாகப் போகிறது. எனவே, இடதுசாரிகளையும், மதிமுகவையும், தேமுதிகவையும் கொஞ்சம் அனுசரணையோடு அணுகினால் திமுக மெகா அணியாக உருவெடுக்கும் என்ற ஆலோசனையை ஸ்டாலின் அப்போது சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே கருத வேண்டும்.
ஆனால், அதையெல்லாம் தாண்டி திமுகவின் தனித் தன்மையைக் காப்பாற்ற நமக்கு நாமே பயணத்தை முன்னெடுத்த ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழையில் தவறவிட்டார். இதற்குக் காரணம் மக்கள் நலக் கூட்டணிதான் என்பது பிரித்தாளும் கொள்கை அறிந்தவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.
இந்தப் புறக் காரணிகளைவிட திமுகவின் அகக் காரணிகளும் தோல்விக்கு மிகப்பெரும் துணை புரிந்தன. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் முழு ஒத்துழைப்பை திமுக கொடுத்திருந்தால், காங்கிரஸ் 20 இடங்களிலாவது ஜெயித்திருக்கும். ஆனால் 8 இடங்களில்தான் ஜெயித்தது. அதற்குக் காரணம் லோக்கல் திமுகவினரின் ஒத்துழையாமை இயக்கம் என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து 2016 தேர்தல் முடிந்த உடனேயே குரல்கள் கிளம்பின.
“காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களிலும் பூத் கமிட்டிகளில் திமுகவினர் இடம்பெற்று, தனது வாக்கு வங்கியை காங்கிரஸுக்குக் கொண்டு வந்திருந்தால், 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்திருக்கும். கலைஞர் முதல்வராக ஆகியிருப்பார். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான ஒத்துழையாமையால்தான் எடப்பாடி பழனிசாமியிடம் மெரினா நினைவிடத்துக்காகக் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று கலைஞர் மறைவின்போது நம்மிடம் சுட்டிக் காட்டினார் தமிழக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்.
அரசியலில் ஒவ்வொரு தேர்தலும் மக்களுக்கு மட்டுமல்ல; அரசியல் கட்சிகளுக்கும் பாடப் புத்தகம்தான். கடந்த தேர்தல் நடத்திய பாடங்களைச் சரியாகப் படித்தால் மட்டும் போதாது. இந்தத் தேர்தலுக்கு உரிய பாடத் திட்டங்களையும் உணர்ந்து அப்டேட் ஆக வேண்டும்.
அந்த வகையில் கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் தலைவர் என்ற இடத்தில் இருந்து முன்னின்று நடத்த இருக்கும் முதல் தேர்தலில் வேட்பாளர் தேர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி தலைமை ஒரு வியூகம் வைத்திருக்கும். தலைவரின் ஓஎம்ஜி டீம் ஒரு வியூகம் வைத்திருக்கும். ஆளாளுக்கு ஒரு வியூகம் வைத்திருப்பார்கள்.
ஆனால், தொண்டர்கள் ஒரு வியூகம் வைத்திருப்பார்கள். அவர்களின் நாடிபிடித்துப் பார்த்து அவர்களுடைய வியூகத்துக்கு நெருக்கமான வியூகத்தை அமைத்தாலே போதும் வெற்றியை எட்டிவிடலாம்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்கள் வகுத்து வைத்திருக்கிற வியூகம் என்ன?
“மொத்தமிருக்கிற 40 தொகுதிகளில் அநேகமாக முப்பது தொகுதிகளுக்குள்தான் திமுக போட்டியிடும். அதிலும் விஐபி வேட்பாளர்கள் என்று பத்துப் பேரை இப்போதே நாங்கள் விரல் விட்டுச் சொல்லிவிடுவோம். மீதி இருக்கும் இருபது வேட்பாளர்களைத்தான் தலைமை ஆராய்ந்து நியமிக்க இருக்கிறது.
கடந்த தேர்தலில் நின்று தோற்றவர், தலைமைக்கு நெருக்கமான தொழிலதிபர், சில நூறு கோடிகளைத் தேர்தல் நிதியாகக் கொடுத்தவர், ராஜா வீட்டுக் கன்றுக்குட்டிகளின் நண்பர்கள் இவர்கள் எல்லாம் வேட்பாளர் ஆகவே கூடாது. மாவட்டச் செயலாளருக்கு ஆகாதவன், தலைமைக் கழக நிர்வாகிக்கு எதிரானவன் என்பன போன்ற தகுதிகளை வைத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யவோ, தள்ளிவைக்கவோ கூடாது.
கட்சித் தொண்டர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர், மக்களிடத்தில் நல்ல பெயர் எடுத்தவர் என்ற தகுதிகள் இருந்தால் போதும். இன்றைய தேர்தலை எதிர்கொள்ளத் தேவையான கோடிகள் அவரிடம் இல்லையென்றால்கூட தலைமை செலவழிக்க வேண்டும். இப்படிப்பட்ட வேட்பாளர் தேர்வுதான் வெற்றிக்கான வழி வகுக்கும்.
அதை விடுத்து, கடந்த கால வேட்பாளர் தேர்வு வியூகங்களையும், நேர்காணலில் இரண்டாவது கேள்வியாக, ‘எவ்வளவு செலவு செய்வீங்க?’ என்ற கேள்வியும் இடம்பெற்றால் திமுகவின் வெற்றி இன்னும் தள்ளிப்போகவே செய்யும்” என்பதே தொண்டர்களின் வியூகம்.
உங்களில் ஒருவன் என்று தற்போது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஸ்டாலின், அந்த, ‘உங்கள்’ என்ற தொண்டர்களின் நாடிபிடித்து அவர்களின் வியூகத்திலிருந்து தேர்தல் பாதையை வகுப்பார் என்றால் வெற்றியைப் பறிக்கலாம்.
(முற்றும்)
நாளை முதல், ‘அதிமுகவில் என்னதான் நடக்கிறது’ தொடர் ஆரம்பம்
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 16]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 17]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 18]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 19]