திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஆரா

தேர்தல் நேரத்துப் பேச்சுவார்த்தைகளில் துரைமுருகனின் வாயில் விழாத உதிரிக் கட்சிகளே இருக்க முடியாது என்பது திமுகவோடு கூட்டணி வைத்த பல கட்சிகளுக்கும் தெரியும். இன்னாருக்கு இத்தனை சீட்தான் என்பதைக் கலைஞர் துரைமுருகனிடம் விளக்கிவிடுவார். ஆனால், அந்தக் கட்சிகளோ அதைவிட அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டுதான் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்.

குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு திமுக 2 சீட் என எழுதி வைத்திருக்கும். ஆனால், அந்தக் கட்சியினரோ 20 சீட் என்ற மனநிலையோடுதான் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள். இந்த மாதிரி நேரங்களில் நட்பு, சென்டிமென்ட் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. அப்போதுதான் துரைமுருகன் போன்றவர்களின் சேவை திமுகவுக்கு ரொம்பவே தேவையாக இருக்கும்.

‘நாங்க தமிழ்நாடு ஃபுல்லா இருக்கோம். எங்களுக்கு இந்த முறை 20 சீட் வேணும்’ என்று ஒரு கட்சியின் பிரதிநிதி சொல்லுவார். அப்போது திமுகவின் பிரதிநிதியாக இருக்கும் துரைமுருகன், ‘ஏன்யா… தலைவர்கிட்ட சொன்னா நீ கேட்டது கிடைக்கும். ஆனா, சீட் கொடுத்த பிறகு கேண்டிடேட் தேடக் கூடாது. அத்தனை கேண்டிடேட் இருக்காங்களா உங்ககிட்ட?’ என்று கேட்பார். கேட்டிருக்கிறார். கேட்டவுடனேயே ஒரு சிரிப்புச் சத்தமும் வரும். அந்த உதிரிக் கட்சிக்காரரின் மனநிலையைச் சொல்ல வேண்டுமா என்ன?

துரைமுருகனுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே ஒரு தேர்தலை சந்திப்பது போலத்தான் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு. இப்படியாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை வரம்புக்குக் கொண்டுவருவதில் கடந்த சில பல தேர்தல்களில் துரைமுருகனின் பங்கு அலாதியானது.

ஆனால், இம்முறை கூட்டணிக்குள் வருவதிலேயே துரைமுருகன் சில ஸ்பீடு பிரேக்குகளை போட்டிருக்கிறாரா என்பதுதான் திமுகவுக்குள் பேச்சாக இருக்கிறது. நாம் விசாரித்த வரையில், திமுக தலைவர் ஸ்டாலினின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தது வரையில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் பற்றிய துரைமுருகனின் பேட்டி ஸ்டாலினுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.

“திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகள் மட்டுமே பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுகிற பதவிகள். அதனால் இப்பதவிகளுக்கு பவர் அதிகம், அதைவிட பொறுப்பும் அதிகம். ஏற்கெனவே இருந்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் என்பது நியமிக்கப்படுகிற ஒரு பதவி. எனவே அதைவிட பொருளாளர் பதவிக்குப் பொறுப்பும், அதிகாரமும் அதிகம்”

– இப்படி சொன்னவர் துரைமுருகனேதான். அண்மையில் பொருளாளராக நியமிக்கப்பட்ட பின் அவர் அளித்த ஒரு பேட்டியில்தான் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

What is Happening in DMK Mini Series 2

இப்படி பொறுப்புமிக்கவர், பொறுப்பு மட்டுமல்ல; இப்போதைய திமுகவில் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தவிர்த்து யாரையும் விட மிக சீனியராக இருக்கும் துரைமுருகன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தைச் சொல்லலாமா? வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பது போல ஆகாதா? இன்னும் துரைமுருகன் பாணியிலேயே சொல்வதானால் முகூர்த்தம் நெருங்கும் நேரத்தில் பொண்ணுக்கு மூக்கு சப்பை எனச் சொல்வது போல் ஆகாதா என்றெல்லாம் திமுகவில் இருந்தும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும், ஏன் ஸ்டாலின் குடும்பத்திடம் இருந்தே ஆதங்கங்களும், அங்கலாய்ப்புகளும் எழுந்திருக்கின்றன.

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்தே காட்ட வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு அவசியமல்ல…. தினகரனுக்கு அவசியமல்ல… கமலுக்கு அவசியமல்ல… ஆனால், மற்ற யாரையும்விட தன் வெற்றியை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியத்தில் இருக்கிறது திமுக. தமிழகத்துக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுக. குறிப்பாக ஸ்டாலினுக்கு அந்த அவசியம் நிறையவே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த பல மாதங்களாக ஸ்டாலினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் கூட்டணியை, ஒரு சில வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டார் துரைமுருகன் என்ற உணர்வு திமுகவில் பலரிடத்தில் இருக்கிறது.

அந்தச் சர்ச்சை பேட்டியிலேயே துரைமுருகன் இன்னொரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். “அண்ணா 1967லே தனியாக நின்று ஜெயிக்க முடியும் என்ற நிலைமையிலும் கூட்டணியே வைத்தார். இப்போது கூட்டணியோடுதான் தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என்ற ரீதியில் சொல்லியிருந்தார்.

ஆக, திமுக வருகிற தேர்தலில் ஜெயிப்பதற்கு கூட்டணி தேவை என்பதைத் தனது அறுபதாண்டுக் கால அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார் துரைமுருகன். ஆனால், யாரைக் கூட்டணியில் வைக்கலாம், யாரைக் கூட்டணியில் வைக்கக் கூடாது என்று அவருக்கு சில அபிப்ராயங்கள் இருந்திருக்கின்றன. அதை அவர் கட்சியின் முக்கியமான சில கூட்டங்களில்கூட அவர் முன் வைத்திருக்கிறார். அங்கே கிடைத்த எதிரொலியின் விளைவாகத்தான் இந்தப் பேட்டியிலே பகிரங்கமாக உடைத்திருக்கிறார்.

ஆனால், இதற்கு திமுக தலைவரான ஸ்டாலினுடைய ரியாக்‌ஷன்தான் கவனிக்க வேண்டியது. துரைமுருகனின் கருத்துகள் பற்றி திமுகவுக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

பாதிக்கப்பட்டவரான வைகோ, ‘மதிமுகவினர் மனக் காயம் அடைந்திருக்கிறார்கள். இதற்கு திமுக தலைவர்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று பகிரங்கமாக வேண்டுகிறார்.

திமுகவுக்கு உள்ளே இருக்கும் இளையவர்கள் அதாவது சீனியர் அல்லாதவர்கள், “துரைமுருகன் கருத்து நியாயமானது. ஆனா, வார்த்தைகள் கடுமையாவே இருக்கு. இது நிச்சயம் ஸ்டாலினுக்கு ஏற்புடையதா இருக்காது. ஸ்டாலினை ஒரு முடிவுக்காக நிர்பந்தப்படுத்துற மாதிரி கூட இருக்கு” என்றார்கள் அவர்கள்.

ஜெயலலிதா பாணியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக ஸ்டாலினே கட்சியின் சில உயர் கூட்டங்களில் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அப்படி இருக்க கட்சியின் செயற்குழு முடிவு செய்ய வேண்டிய, பொதுச் செயலாளருடன் ஆலோசித்து தலைவர் முடிவு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் ஒரு பேட்டியில் வைத்து பேசிவிட்டுப் போய்விடலாமா? இதற்கு ஜெயலலிதா பாணி ஸ்டாலின் நடவடிக்கை என்ன என்றும் அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், இங்கேதான் பக்குவமாக ஒரு முடிவெடுத்தார் ஸ்டாலின். துரைமுருகன் சொன்ன கருத்துக்கு, தலைவர் என்ற வகையில் எதிர்வினையாற்றினால் அது இன்னும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்பதை அவர் உணர்ந்தார்.

நமக்கு முன் ஒருவர் ஒரு கோடு போட்டுவிட்டார். அதன் மேல் கை வைக்காமல் அதன் பக்கத்திலேயே ஒரு பெரிய கோடு போட்டுவிட்டால், முதலில் போடப்பட்ட கோடு, சிறிய கோடு ஆகிவிடும் அல்லவா? அப்படித்தான் துரைமுருகன் போட்ட கோட்டுக்குப் பக்கத்திலேயே ஸ்டாலின் ஒரு பெரிய கோட்டைப் போட்டார்.

(பயணிப்போம்)

முந்தைய பகுதிகள்

[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *