திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 19
ஆரா
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன தெரியுமா?
அங்கே அண்ணா கொடியில்தான் பறக்கிறார். இங்கே (திமுகவில்)தான் கொடிகட்டிப் பறக்கிறார் என்று கவிஞர் வாலி ஒருமுறை அறிவாலய மேடையில் ஒரு வித்தியாசம் சொன்னார்.
‘எமர்ஜென்சியிலும் வந்தது திமுக கட்சிப் பத்திரிகை. ஆனால், அதிமுகவின் கட்சிப் பத்திரிகையை ஒவ்வொருமுறை வாங்கும்போதும் கட்சிக்காரனுக்கு எமர்ஜென்சிதான்.
– இது ஒரு பழைய பத்திரிகையாளரின் பார்வை.
திமுகவில் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால் சாதாரணமானவருக்குப் பதவி கிடைக்காது. அதிமுகவில் ஜனநாயகம் கிடையாது. ஆனால் சாமானியனுக்கும் பதவி கிடைக்கும்!
– இப்படி திமுகவையும், அதிமுகவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பல கருத்துகள் தமிழ் அரசியல் உலகில் இருக்கின்றன.
இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான வித்தியாசத்தை ஒரு திமுக உடன்பிறப்பே சொன்னார். அது என்ன?
“வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர் பட்டியலில் சுமார் பத்து முதல் பதினைந்து பேரை இப்போதே என்னால் சொல்லிவிட முடியும். ஆனால், அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் வந்தபிறகு கூட அது இறுதியான பட்டியலா என்று சொல்ல முடியாது” என்பதுதான் அது
சமீப காலமாக ஸ்டாலின், ஜெயலலிதா பாணியை பின்பற்ற முனைகிறார் என்று கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் சில யூகங்கள் பேசப்பட்டன. ஆனால், அவையெல்லாம் தவிடுபொடியாகிவிட்டன.
ஜெயலலிதா பாணி என்றால் என்ன?.
“கட்சி நடத்தும் பாணியிலும், வேட்பாளர் தேர்விலும் மட்டுமே ஜெயலலிதாவை இப்போது திமுக தலைவர் பின்பற்ற வேண்டும்.
ஜெயலலிதாவின் 2011 முதல் 2016 வரையிலான ஆட்சியில் குறைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், 2011க்குப் பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் குறிப்பாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களிலும் வென்றார். பணம் கொடுத்து மட்டுமே ஜெயித்தார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு நாம் தப்பிச் சென்றுவிட முடியாது.
ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் தன் ஆட்சி மீது அதிருப்தி இருந்தால்கூட அந்த அதிருப்தி வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கின் முன் மங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். அதனால் மக்களிடையே நன்கு அறிமுகமான அந்தத் தொகுதியில் தட்பவெப்ப நிலைக்கேற்ப சமுதாய அடிப்படையில் குறிப்பாக உள்ளாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வேட்பாளராக டிக் செய்தார். அவர்களுக்குத் தேர்தல் செலவு செய்ய பொருளாதார வசதியே இல்லை என்றால்கூட… கட்சியே வேட்பாளருக்குச் செலவு செய்யும் என்ற நிலையை உருவாக்கினார்.
அதேபோல இன்னொரு விஷயத்திலும் ஜெயலலிதா கறாராக இருந்தார். கோஷ்டிப் பூசல் போன்ற பிரச்சினைகளால் சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்த நபர் கட்சியில் இருந்தால் அவர் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும், டப்பா டான்ஸ் ஆட வைத்தார். சசிகலாவையே நீக்கி வைத்ததே அதற்குச் சான்று. கட்சிக்கு முன்னால் எதுவுமே முக்கியம் இல்லை என்பதை ஒவ்வொரு தொண்டனையும் உணர வைத்தார் ஜெயலலிதா.
ஆனால், திமுகவில், தன் கட்சி வேட்பாளரையே சொல்லி வைத்துத் தோற்கடித்து, அது தலைமை வரை புகாராகப் போன பின்னரும்கூட அதுபற்றிக் கவலைப்படாமல் இருக்கும் மாவட்டச் செயலாளர்களைக் கணிசமாகச் சொல்லலாம். அவர்களுக்குத் தேவை கட்சியில் தன்னை மிஞ்சி யாரும் வந்துவிடக் கூடாது.
களஆய்வில் கண்ணீரும், ஆதாரமுமாய் கொட்டி இந்தத் துரோகங்களை எல்லாம் ஸ்டாலின் முன் உரித்து உட்கார்த்தி வைத்த பின்னாலும்கூட… செயல் தலைவரைத் தடுத்தது எது? தளபதியைத் தடுப்பது எது? தலைவரைத் தடுப்பது எது?” என்பதுதான் திமுக தொண்டர்களுடைய மனதின் குரல்.
இது ஜெயலலிதாவின் பாணியும் அல்ல; கலைஞரின் பாணியும் அல்ல என்கிறார்கள் திமுகவினர்.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 1]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 2]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 3]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 6]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 7]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 8]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 9]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 10]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 11]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 12]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 13]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 14]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 15]
[திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 16]